You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பூமியை கடக்கும் விண்கல், கண்காணிப்புக் கருவிகளைப் பரிசோதிக்கும் வாய்ப்பு
- எழுதியவர், ரெபெக்கா மோரெல்
- பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி செய்திகள்
ஒரு வீட்டின் அளவு இருக்க கூடிய ஒரு விண்கல், வியாழக்கிழமை பூமியை மிக அருகில் கடந்து செல்கிறது.
பூமியில் இருந்து, 42 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்த விண்கல் பூமியை கடக்கும் போது, நிலவின் சுற்றுப் பாதையினுள், தொலைத்தொடர்பு செயற்கைகோள்களுக்கு கொஞ்சம் மேலே செல்லும்.
இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ள நாசா, தங்களின் விண்கல் எச்சரிக்கை அமைப்பை சோதனை செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.
உலகளவில் பல தொலைநோக்கிகள் இந்த விண்கல் கடந்து செல்வதை கண்காணிக்கும்.
நாசாவின், பூமிக்கு அருகில் வரும் பொருட்கள் குறித்த ஆய்வு மையத்தின் மேலாளரான பால் சோடஸ், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வகத்தில் பிபிசியிடம் பேசிய போது, `அருகில் வரும் விண்கல்லை கவனித்து, ஆராய்ந்து, வகைப்படுத்தி, எவ்வளவு அருகில் வரும் என கணக்கிடும் நமது கருவியை இந்த விண்கல்லை கொண்டு சோதனையிட உள்ளோம். ஒருவேளை, என்றாவது ஒரு பொருள் அப்படி வந்து தாக்கவும் வாய்ப்புள்ளது.`
`அச்சுறுத்தலல்ல`
2012 டி.சி.4 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
அது 15 முதல் 30 மீட்டர் அளவு இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
எதுவாகினும், அந்த அளவில் உள்ள எரிகல்லாக இருந்தாலும், பூமியை தாக்கினால் ஆபத்து தான்.
2013இல், மத்திய ரஷ்யாவின் சில்யாபின்ஸ்க் நகருக்கு மேலே, 20 மீட்டர் அகலமுள்ள எரிகல் வெடித்த போது, அது 500 ஆயிரம் டன் டி.என்.டி விழுந்ததற்கு சமமாக அதிர்வை ஏற்படுத்தியதோடு, அது ஏற்படுத்திய அதிர்வலையால் கட்டடங்கள் சேதமடைந்ததோடு, ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக, இந்த விண்கல்லின் நகர்வை கவனித்து வரும் நாசா விஞ்ஞானிகள், தங்களின் கணக்கின்படி, இந்த விண்கல் பூமியை விட்டு விலகியே கடக்கிறது என்றும், எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வருங்காலங்களில் வரும் அசுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த விண்கல் அருகில் கடக்கும் நிகழ்வை சோதனைக்கான வாய்ப்பாகப் பயன்படுத்த உள்ளனர்.
டஜனுக்கும் அதிகமான ஆய்வு மையங்களும், பல்கலைக்கழகங்களும், கண்காணிப்பாளர்களும் இந்த எரிகல் கடப்பதை கவனிப்பார்கள்.
ஒரு எரிகல்லின் ஆபத்து குறைவாக இருக்கும் போதே, வருங்காலத்திற்காக விவேகத்துடன் தயார் ஆகிகொள்ள வேண்டும் என்கிறார் சோடஸ்.
`நாசாவின் எரிகல் கண்டறியும் முறைகள் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது` என்று அவர் விளக்கினார்.
`எங்களின் முன்னுரிமை பெரிய எரிகற்களை கண்டறிவதே. இதுவரை நாசாவின் கணக்கெடுப்பில் 95 சதவிகித விண்கற்கள் ஒரு கிலோமீட்டர் மற்றும் அதற்கு அதிகமான அளவில் இருந்துள்ளன. இத்தகைய எரிகற்கள் தான், உலகில் மிகப்பெரிய அழிவுகளை உருவாக்கும்.`
நாம் தற்போது மிகவும் சிறிய கற்களை பார்க்க் தொடங்கியுள்ளோம். கிட்டத்தட்ட 130 மீட்டர் அல்லது அதற்கும் அதிகமானவை. 30 சதகவிகிதம் இத்தகைய கற்களில் நாம் பணியாற்றி வருகிறோம்`.
`நாம் இந்த அளவு இருக்க கூடிய எல்லா கற்களையும் பார்ப்பதில்லை. இந்த கல் நமது கவனிக்கும் தொழில்நுட்பத்தை சோதனை செய்துபார்க்க பார்க்க வசதியாக உள்ளது`.
அவர் மேலும் கூறுகையில், பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களை நாம் முன்பே கண்டுபிடித்தால், விஞ்ஞானிகள் அத்தகைய ஆபத்தை தவிர்க்க வேறு தொழில்நுட்பத்தை வருகின்றனர் என்றார்.
`நமக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை நேரம் இருந்தால், நம்மால் அது குறித்து கண்டிப்பாக எதாவது செய்யமுடியும்` என்றார்.
`நம்மால் வானத்துக்குச் சென்று அதை நகர்த்த முடியும், அதன் வேகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்ற முடியும், இவற்றை செய்வதே, அது பூமியின் மீது மோதாமல் இருப்பதை தடுக்க போதுமானதாக அமையும்`.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்