டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? மோதிக்கொள்ளும் இணைய பயன்பாட்டாளர்கள்

தமிழ்நாட்டில் கொசுக்களால் ஏற்படும் டெங்கு காய்ச்சலால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் இந்த நோயை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து தீவிர மோதல்கள் நடந்து வருகின்றன. பலர், மருத்துவமனையை நாடுவதற்கு எதிராகவும் கருத்துக்களைப் பரப்பிவருகின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மீண்டும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தக் காய்ச்சலால் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 40 பேர் வரை மரணமடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகளை உருவாக்குவது, டெங்கு நோய்க்கு நிவாரணமாகக் கருதப்படும் நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி மக்களுக்கு அளிப்பது, தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சைபெற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என்றும் காய்ச்சலை மூலிகைகள் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்றும் பல கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன.

டெங்கு காய்ச்சல் கொசுக்களால் வருகிறது என கூறப்படும் நிலையில், அந்தக் கொசு ஏன் அதனால் பாதிக்கப்படுவதில்லை என, தமிழ்நாடு விவசாயத்தைக் காப்போம் என்ற ஃபேஸ்புக் பக்கம் மீம்களை வெளியிட்டு வருகிறது.

அதேபோல, தங்களை ஹீலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரம், இம்மாதிரி கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பிரபலமாகவும் தீவிரமாகவும் இயங்கும் சிலர் தொடர்ந்து அறிவியல் ரீதியான கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.

சிவசங்கரன் சரவணன் என்பவர் டெங்கு காய்ச்சல் தொடர்பாக, மூட நம்பிக்கைக் கருத்துகளை வெளியிட்டுவருபவர்களை நோக்கிக் கேள்வியெழுப்புகிறார்.

யாழினி பிஎம் என்ற மருத்துவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகும்படியும், நோய்களை அறிவியல் ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் பதிவிட்டு வருகிறார்.

ஹீலர்கள் என்ற பெயரில் பதிவிடும் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என்று கூறிவரும் நிலையில், பிச்சைமுத்து சுதாகர், ரவிஷங்கர் அய்யாக்கண்ணு, உமாமகேஸ்வரன் போன்றவர்கள் அதனைக் கடுமையாக சாடி பதிவிட்டு வருகின்றனர்.

டெங்கு நோய் பரவலையொட்டி தமிழக அரசின் சுகாதாரத் துறை, தனியார் அமைப்புகள் உள்ளிட்டவை பல இடங்களில் நிலவேம்பு கசாயம் என்ற மூலிகை குடிநீரை வழங்கி வருகின்றன. ஆனால், நிலவேம்பு கசாயம் மட்டுமே டெங்கு நோய்க்குத் தீர்வா என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முறைப்படி சித்த வைத்தியம் படித்த சிவராமன் உள்ளிட்ட மருத்துவர்கள், சித்த மருந்துகளை விற்பனை செய்யும் இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்து நில வேம்பு கசாயம் குறித்தும் நோய் தீவிரமடையும் நிலையில் மருத்துவமனையை அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.

போலி மருத்துவர்கள் கைது

இதற்கிடையில் டெங்கு நோயைக் குணப்படுத்துவதாக கூறி விளம்பரம் செய்துவந்த போலி மருத்துவர்கள் சிலரை காவல்துறை கைதுசெய்துள்ளது.

மணச்சநல்லூரைச் சேர்ந்த ஜி சங்கர் என்பவர் டெங்கு உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்துவதாக வாட்ஸப் செயலியில் தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், காவல்துறை அவர் மருத்துவப் படிப்பை முடிக்காமல் வைத்தியம் பார்த்துவந்ததாகக்கூறி கைது செய்துள்ளது.

புதன்கிழமையன்று டெங்கு நோய் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் 11,744 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்