You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றத்தால் வெளுத்துப்போகும் பவள பாறைகள் : எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதன் மூலம் உலகிலுள்ள பவளப் பாறைகள் காப்பாற்றப்படலாம். ஆனால். அவை முன்னர் இருந்ததைபோல தோன்றாது என்று புதியதொரு ஆய்வு தெரிவிக்கிறது.
இயற்கை அமைப்புகளின் விரைவான மாற்றங்களுக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்ற திறனுடைய பவளப் பாறைகளின் மூலம், எதிர்கால இந்த பவளப்பாறை அடுக்குகள் வரையறுக்கப்படும் என்று `நேச்சர்` சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில், ஆஸ்திரேலியாவின் மிக பெரிய பவளப் பாறை அடுக்குகளில் மூன்றில் இரண்டு பகுதி, இரண்டு ஆண்டுகளில் நிறம் குன்றி வெளுத்துப்போயிற்று என்பதை இந்த ஆய்வு காட்டியது.
உடனடி நடவடிக்கைள் மூலம் அரசுகள் இந்த பவளப் பாறைகளை பாதுகாத்துகொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பவளப் பாறைகள் அடுத்த நூற்றாண்டும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புவதாக ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தலைமை ஆய்வு ஆசிரியரான பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் தெரிவித்திருக்கிறார்.
"ஆனால், எதிர்காலத்தில் காணப்படும் இந்த பவளப் பாறைகள் மிகவும் வேறுப்பட்டதாக இருக்கப்போகின்றன" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
"ஏற்கெனவே இருக்கக்கூடியவற்றை அப்படியே மீட்டெடுப்பது நடைபெறும் காரியமல்ல. வேறுபட்ட இனங்களின் கலவை இதில் இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய நிலைமையில், கார்பன் வெளியேற்றம் தொடருமானால், ஆண்டுதோறும் நடைபெறும் பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப்போவது 2050க்குள் பல இடங்களில் தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பவளப் பாறையடுக்குகள் மேலாண்மை செய்யப்படுவதில் காட்டப்படும் முக்கிய மாற்றங்களின்படி, அவை எதிர்காலத்தில் நிலைத்திருப்பது அமையும்.
இதற்கு பாரிஸ் 'பருவநிலை மாற்ற ஒப்பந்தம்' போன்ற சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். ஆனால், தேசிய அளவில் கொள்கை ஒருங்கிணைப்பும் தேவைப்படும்.
மிக பெரிய அளவில் விரைவாக தங்களை மாற்றியமைத்து கொள்ளக்கூடிய திறனை பவளப் பாறை உயிரினங்கள் வெளிக்காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மிக பெரிய அளவில் மாற்றியமைத்து கொள்ளும் பவளப் பாறை உயிரினங்களின் திறனை ஆய்வாளர்கள் 'ஒரு சொத்து' என்று விவரித்துள்ளனர்.
"பவளப் பாறைகளின் நிறம் வெளுத்துப்போகின்றபோது, பல இனங்களின் கலவையாக இது மாற்றுகிறது" என்று பேராசிரியர் ஹியூஸ் கூறியுள்ளார்.
"இதில் வெற்றிபெறும், தோல்வியடையும் என்று கூறப்படும் உயிரினங்களும் உள்ளன"
இயல்பான நிலைமைகள் திரும்புமானால், பவளப் பாறைகள் மீட்கப்படலாம். ஆனால், இதற்கு தசாப்த காலங்கள் ஆகும்.
``பவளப் பாறைகள் பற்றிய நம்பிக்கை இருக்கிறது. ஆனால், உலகம் வெப்பமாதலை கையாள்வதற்கு மிகவும் குறுகிய வாய்ப்பே உள்ளது. மிகவும் குறைந்த அளவு கார்பன் வெளியேற்றத்திற்கு நாம் எவ்வளவு சீக்கிரமாக மாற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு நன்மை ஏற்படும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்