You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மூளை ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பங்கள்: நினைவுப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம்
நம்முடைய மூளையில் நினைவுகளை உருவாக்கும்போதும், அவற்றை சேகரிக்கும்போதும் உண்மையிலேயே என்ன நடக்கிறது? இது தொடர்பான புதிய ஆய்வில் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மனிதரின் மூளை ஒரே நேரத்தில் இருமுறை பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
அவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற்கும் நினைவில் வைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் அறிய வந்துள்ளனர்.
காணொளி: "குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்"
எல்லா நினைவுகளும் குறுகியகால நினைவுகளாக தொடங்கி, நீண்டகால நினைவுகளாக மெதுவாக மாறிவிடுவதாக இதுவரை எண்ணப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வில் கிடைத்திருக்கிற கண்டுபிடிப்புகள் ஆச்சரியமூட்டுபவை என நிபுணர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இது சிறப்பானதாகவும், ஏற்றுகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.
"முக்கிய முன்னேற்றம்"
நம்முடைய தனிப்பட்ட அனுபவங்களை நினைவில் வைத்து கொள்வதில் மூளையின் இரண்டு பாகங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஹிப்போகேம்பஸ் என்கிற மூளையின் பின்புறப்பகுதி குறுகிய கால நினைவுகளை சேமித்து கொள்கிறது. அதேவேளையில், கோர்டெக்ஸ் என்கிற மூளையின் புறணிப்பகுதி நீண்டகால நினைவுகளின் இல்லமாகிறது.
இந்த சிந்தனை 1950களில் ஹென்றி மோலாய்சன் மீது நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் மிகவும் பிரபலமானது.
அவருடைய மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி சேதமடைந்திருந்தது. எனவே புதிதாக நினைவுகளை அவரால் வைத்துகொள்ள முடியவில்லை.
ஆனால், முந்தைய நினைவுகள் அனைத்தும் அப்படியே இருந்தன.
இதன் மூலம் நினைவுகள் ஹிப்போகேம்பஸ் என்கிற மூளையின் பின்புறப்பகுதியில் உருவாகிறது. பின்னர், கோர்டெக்ஸ் என்கிற மூளையின் புறணிப்பகுதியில் சேமிக்கப்படுகிறது என்ற கருத்து மேலோங்குகிறது.
காணொளி: மூளை அறுவை சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்
புதிய புரிதல்
ஆனால், உண்மை அதுவல்ல என்பதை காட்டும் வகையில் நியூரல் சர்க்யூட் மரபியலுக்கான ரிகின்-எம்ஐடி மையத்தின் விஞ்ஞானிகள் அணியினர் நடத்திய ஆய்வில் ஆச்சரியம் தருகின்ற முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.
சோதனை எலிகளில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனைகள், மனிதரின் மூளைக்கும் பொருந்தக்கூடியவை என்று நம்பப்படுகிறது.
ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட மூளைசெல் கொத்துக்களுக்கு வழங்கப்படும் மின் அதிர்ச்சிக்கு மறுமொழியாக கிடைக்கின்ற குறிப்பிட்ட நினைவுகளின் வடிவங்களை கண்காணித்து இந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், தனிப்பட்ட நியுரான்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிக்கற்றைகளை மூளைக்குள் செலுத்தினர். இதன் மூலம் நினைவுகளை தூண்டவும், நிறுத்தவும் அவர்களால் முடிந்தது.
நினைவுகள், ஹிப்போகேம்பஸிலும், கோர்டெக்ஸிலும் ஒரே நேரத்தில் சேமிக்கப்படுகின்றன என்று இதில் கிடைத்த முடிவுகள், சைன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காணொளி: தரையில் மூளை அறுவை சிகிச்சை: அலெப்போ நகரில் அவலம்
ஆச்சரியம் அளித்த முடிவுகள்
இந்த ஆய்வு மையத்தின் இயக்குநரான பேராசிரியர் சுசுமு டோனிகவா, "இது மாபெரும் ஆச்சரியம்" என்று தெரிவித்திருக்கிறார்.
"இந்த கருத்து பல தசாப்தங்களாக பிரபலமாக கருதப்பட்டு வந்ததற்கு மாறானது" என்று பிபிசியிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.
"முந்தைய கருத்தோடு ஒப்பிட்டால் இதுவொரு முக்கிய முன்னேற்றம். பெரியதொரு திருப்புமுனை"
நினைவுகள் உருவாக தொடங்கிய சில நாட்களில் நீண்டகால நினைவுக்கான கோர்டெக்ஸ் பகுதியை சோதனை எலி பயன்படுத்தியது போல தோன்றவில்லை.
விஞ்ஞானிகள் ஹிப்போகேம்பஸ் பகுதியிலுள்ள குறுகிய கால நினைவுகளை நிறுத்தியபோது, அவற்றுக்கு வழங்கப்பட்ட மின் அதிர்ச்சியை எலிகள் மறந்துவிட்டன.
ஆனால், நீண்டகால நினைவு பகுதியை ஆய்வாளர்கள் தூண்டியபோது, சோதனை எலிகளால் அந்த மின் அதிர்ச்சியை நினைவில் கொள்ள செய்ய முடிந்தது. எனவே அந்த நிகழ்வு அங்கேயே தான் இருப்பது உறுதியாகியது.
"அந்த நினைவு உருவான பல நாட்கள் வரை முதிரவில்லை அல்லது அமைதியாக இருக்கிறது" என்று பேராசிரியர் டோனிகவா தெரிவித்திருக்கிறார்.
காணொளி: மூளையை பாதிக்கும் சாட்-நாவ் வழிகாட்டி?
"வலுவான ஆதாரம்"
ஹிப்போகேம்பஸ் பகுதிக்கும், கோர்டெக்ஸ் பகுதிக்கும் இடையிலுள்ள தொடர்பு தடைசெய்யப்பட்டால், நீண்டகால நினைவு ஒருபோதும் முதிராமல் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, நாட்கள் ஆன பின்னர், ஹிப்போகேம்பஸ் பகுதியில் இருந்து கோர்டெக்ஸ் பகுதிக்கு நினைவுகள் சம ஆற்றலோடு மாற்றம் பெறும்போது இந்த இரு பகுதிகளுக்கும் இடையில் தொடர்பும் உள்ளது.
தலைசிறந்த ஆய்வு
"இந்த ஆய்வு, சிறந்தது, நேர்த்தியானது மற்றும் மிகவும் சுவாரசியமானது", என்று கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் நினைவாற்றல் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற டாக்கடர் அமி மில்டன் தெரிவித்திருக்கிறார்.
"நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"இது ஓர் ஆய்வு தான், எலிகளின் நினைவுகளுக்கு கோர்டெக்ஸ் பகுதி நிச்சயம் வேண்டும் என்பது தெரிந்தது தான். ஆனால், மிகவும் முன்னதாகவே இது தேவைப்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கிறது.
இப்போது, இது நம்முடைய உடல் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகின்ற அடிப்படை அறிவியல் தகவல்தான்.
டிமென்சியா உள்பட நினைவுகள் தொடர்பான சில நோய்களுக்கு பதிய வெளிச்சத்தை இந்த ஆய்வு வழங்கலாம் என்று பேராசிரியர் டோனிகவா கூறுகிறார்.
அல்ஷைமர் நோயால் பாதிக்கப்பட்ட சோதனை எலிகள் நினைவுகளை உருவாக்க முடிகிறது என்றும், ஆனால், அவற்றை மீட்டெடுக்க முடியவில்லை என்றும் இந்த பேராசிரியரின் முந்தைய ஆய்வுகளில் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
"இது எவ்வாறு நடைபெறுகிறது என்று அறிந்து கொள்வது மூளை தொடர்பான நோயாளிகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
காணொளி: தூங்காமலே இருந்தாலும் யானைகளின் நினைவாற்றல் நீடிப்பதெப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்