You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானி, நரேந்திர மோதியை விமர்சித்த ஜார்ஜ் சோரோஸ் யார்? பாஜக அரசை இந்த அமெரிக்க பணக்காரர் எப்படி விமர்சித்தார்?
- எழுதியவர், இக்பால் அகமது
- பதவி, பிபிசி இந்தி சேவை
அதானி - பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத்தம் கிடைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துப் புயலைக் கிளப்பியுள்ளார் வித்தியாசமான வரலாறு கொண்ட அமெரிக்கப் பெரும்பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ்.
உலகம் முழுவதும் ஜனநாயகம், கல்வி, சுகாதாரம், தாராள சிந்தனை ஆகியவற்றுக்கு நிதியுதவி செய்யும் ஜார்ஜ் சோரோஸ் வெள்ளை மேலாதிக்கவாதிகளாலும், ட்ரம்ப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட வலதுசாரிகளாலும் கடுமையாக வெறுக்கப்படுகிறவர்.
இவரது பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றுகிறது பாஜக.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து ஜார்ஜ் சோரோஸின் அறிக்கை, இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை அழிக்கும் பிரகடனம் என்று கூறினார்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் பிரதமர் நரேந்திர மோதி ஜனநாயகவாதி அல்ல என்றும், இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைதான் மோதி பெரிய தலைவராக வேகமாக வளர்ந்ததற்கு முக்கிய காரணம் என்றும் ஜெர்மனியின் ம்யூனிக் பாதுகாப்பு மாநாட்டில் ஜார்ஜ் சோரோஸ், கூறியிருந்தார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்குகிறது என்றார் அவர். கௌதம் அதானி விவகாரத்தில் மோதி தற்போது மௌனமாக இருக்கிறார். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஜார்ஜ் சோரஸ் தெரிவித்துள்ளார். இது அரசின் மீதான அவரின் பிடியை பலவீனப்படுத்தும் என்றும் இது இந்தியாவில் ஜனநாயக செயல்முறையின் 'மறு எழுச்சிக்கு' வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக 2020 ஜனவரியில் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதியை தாக்கிப்பேசிய சோரோஸ், இந்தியா ஒரு இந்து தேசியவாத நாடாக மாற்றப்படுகிறது என்று கூறியிருந்தார்.
'மோதி இந்து தேசியவாத நாட்டை உருவாக்குகிறார்'
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோதி இந்தியாவை இந்து தேசியவாத நாடாக மாற்றிக்கொண்டு வருவது, இந்தியாவுக்கு மிகப்பெரிய, பயங்கரமான அடி என்று ஜார்ஜ் சோரோஸ் அப்போது கூறியிருந்தார்.
கட்டுப்பாடுகளை விதித்து காஷ்மீர் மக்களை மோதி தண்டிக்கிறார் என்றும் குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) மூலம் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கப் போவதாக அச்சுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
வெள்ளியன்று சோரோஸ் மீது தாக்குதல் தொடுத்த ஸ்மிருதி இராணி, அன்னிய மண்ணில் இருந்து இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
இது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சி என்றும் அவர் கூறினார்.
இதற்கு எல்லா இந்தியர்களும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று இராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜார்ஜ் சோரோஸின் கருத்துக்கு காங்கிரஸும் தனது கருத்தைத்தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலரும், அக்கட்சியின் ஊடகத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் சம்பந்தப்பட்ட அதானி ஊழல் இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியைத் தொடங்குமா என்பது முற்றிலுமாக காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் மற்றும் எங்கள் தேர்தல் செயல்முறையைப் பொருத்தது," என்று குறிப்பிட்டிருந்தார்.
"ஜார்ஜ் சோரோஸுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரைப் போன்றவர்கள் எங்கள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்க முடியாது என்பதை எங்கள் நேரு காலத்து மரபு உறுதி செய்கிறது,"என்றும் அவர் எழுதியுள்ளார்.
சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.
"யார் இந்த ஜார்ஜ் சோரோஸ்? அவரைப்பற்றி பாஜகவின் ட்ரோல் அமைச்சகம் ஏன் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறது? அமைச்சர் அவர்களே, இந்தியாவின் தேர்தல் செயல்பாட்டில் இஸ்ரேலிய ஏஜென்சியின் தலையீடு குறித்து நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? இந்தியாவின் ஜனநாயகத்திற்கு இது அதிக ஆபத்தானது."என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்மிருதி இராணியை கேலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி., மஹுவா மொய்த்ரா, "மரியாதைக்குரிய கேபினட் அமைச்சர் ஜார்ஜ் சோரோஸுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஒவ்வொரு இந்தியரையும் அழைத்துள்ளார். தயவுசெய்து இன்று மாலை 6 மணிக்கு தட்டுகளை தட்டி ஒலி எழுப்புங்கள்," என்று கூறினார்.
ஜார்ஜ் சோரோஸ் யார்?
ஜார்ஜ் சோரோஸ் ஒரு அமெரிக்க கோடீஸ்வரர், தொழிலதிபர். 1992 இல் 'பேங்க் ஆஃப் இங்கிலாந்தை' நாசப்படுத்தியவர் என்று பிரிட்டனில் அவர் அறியப்படுகிறார்.
பணத்தை வைத்து வியாபாரம் செய்யும் மற்றவர்களைப் போலவே இவரும் ஊக வாணிபத்தில் ஈடுபட்டார். பிரிட்டனின் பவுண்டு நாணயங்களை பெரிய அளவில் வாங்கி விற்று லாபம் பார்த்தார். இதன் மூலம் பண வாணிப சந்தையில் பிரிட்டனின் பவுண்டு நாணயத்தின் மதிப்பு கீழே சரியக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக, ஐரோப்பிய பணப் பறிமாற்ற விகித பொறியமைப்பில் இருந்து வெளியேறும் நிலைமைக்கு ஆளானது பிரிட்டன். இந்த நடவடிக்கை மூலம் அவர் ஈட்டிய லாபத்தின் மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்கள்.
ஹங்கேரியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்த சோரோஸ், ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் யூதர்கள் கொல்லப்பட்டபோது, எப்படியோ உயிர் பிழைத்தார்.
பின்னர் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தும் தப்பித்தார். நாட்டை விட்டு வெளியேறி மேற்கத்திய நாட்டிற்கு வந்தார். நிதித்துறை ஊக வாணிபத்தில் ஈடுபட்டு அவர் மொத்தம் ஈட்டிய தொகையின் மதிப்பு 4,400 கோடி அமெரிக்க டாலர்கள்.
இந்தப் பணத்தைக் கொண்டு கல்வி, சுகாதாரம், மனித உரிமை, ஜனநாயகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஆயிரக் கணக்கான சமூகத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தார் சோரோஸ்.
1979ம் ஆண்டு நிறுவப்பட்ட அவரது ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன் 120 நாடுகளில் செயல்படுகிறது. ஆனால், தாராளவாத, ஜனநாயக நோக்கங்களுக்காக இவர் செய்துவரும் மனித நேய உதவி, இவரை மேலும் மேலும் வலதுசாரிகளின் பகைவராக ஆக்கியிருக்கிறது.
இவருக்கு எதிரான முதல் சதிக் கோட்பாடுகள் 1990களில் உலாவத் தொடங்கின. ஆனால், 2003ம் ஆண்டு இவர் இராக் போரை விமர்சிக்கத் தொடங்கியபிறகு, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சிக்கு பல லட்சக் கணக்கான டாலர்கள் நிதியுதவி அளிக்கத் தொடங்கிய பிறகு, அவருக்கு எதிரான பிரசாரங்கள் வேகமெடுக்கத் தொடங்கின. அப்போதில் இருந்து அமெரிக்க வலதுசாரி விமர்சகர்கள், அரசியல்வாதிகள் அவரை விடாமல் தொடர்ந்து நச்சுப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். உண்மை என்ன என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வலதுசாரிகளின் அந்தப் பிரசாரம் தொடர்ந்தது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, சோரோஸ் மீதான தாக்குதல்கள் புதிய, அபாயகரமான அளவுக்குச் சென்றன.
டிரம்ப் ஆதரவாளர்கள் குறிவைக்கும் சோரோஸ்
டிரம்ப் ஜனாதிபதியாகி எட்டு மாதங்கள் ஆன நிலையில் ஆகஸ்ட் 2017ல், நவ நாஜிக்கள் வர்ஜீனியாவின் சார்லட்டஸ்வில்லில் ஒரு டார்ச்லைட் ஊர்வலத்தை நடத்தினர். இவர்களுக்கும் ஊர்வலத்தின் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் சோகத்தில் முடிந்தது. ஒரு வெள்ளை மேலாதிக்கவாதி எதிர்ப்போராட்டக்காரர்கள் கூட்டத்திற்குள் காரை ஓட்டி 32 வயதான ஹீதர் ஹேயர் என்பவரைக் கொன்றார்.
ஜனாதிபதி ட்ரம்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக, சோரோஸால் இந்த வன்முறை திட்டமிடப்பட்டது என்றும் அவரே இதற்கு நிதியுதவி செய்தார் என்றும் அமெரிக்க வலதுசாரிகள் மத்தியில் விரைவில் கருத்துப் பரவியது. மேலும், அந்த ரகசிய சதித்திட்டத்தின் முக்கியப் புள்ளி என்று ப்ரென்னன் கில்மோர் என்ற நபர் என்றும் வலதுசாரிகள் கூறினர்.
எதிர்ப்போராட்டக்காரர்கள் மீது கார் ஏற்றப்படுவதை படம்பிடித்தவர் அவர்தான் என்றும் அவர்கள் கூறினர்.
கில்மோருக்கு சோரோஸ் ஆண்டுக்கு 3,20,000 டாலர் ஊதியம் அளித்ததாகவும் அதிபரை வெளியேற்றுவதற்கான சதியின் ஒரு பகுதியாக இது இருந்ததாகவும் கூறினார் வலதுசாரி வானொலி தொகுப்பாளர் அலெக்ஸ் ஜோன்ஸ்.
ஆனால் இருவரையும் தொடர்புபடுத்துபவதற்காக இவர்கள் காட்டிய ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக இருந்தன.
வர்ஜீனியா மாநில ஆளுநர் பதவிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டாம் பெரில்லோவின் பிரசாரத்திற்கு சொரோஸ் 500,000 டாலர் நிதி கொடுத்தார் என்பதும், அவரது வெற்றிக்காக கில்மோர் வேலை செய்தார் என்பதும் உண்மைதான்.
ஆனால், சார்லட்டஸ்வில்லியில் போராட்டக்காரர்களுக்கு சோரோஸோ அவரது ஓபன் சொசைட்டியோ நிதியுதவி செய்ததாக கூற எந்த ஆதாரமும் இல்லை. கில்மோர், சொரோஸிடம் இருந்து பணம் பெறவில்லை. இப்போது அலெக்ஸ் ஜோன்ஸ் உள்ளிட்டோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் அவர்.
இதைத் தொடர்ந்தும், சோரோஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன, தீவிரமடைந்தும் வருகின்றன.
2019 ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை மறு ட்வீட் செய்த டிரம்ப், ஹோண்டுராஸில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்க எல்லையை கடந்து உள்ளேவர சோரோஸ் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
இதன் பின்னணியில் சோரோஸ் இருக்கிறாரா என்று டிரம்ப்பிடம் கேட்டதற்கு, பலரும் இதையே சொல்கிறார்கள், அப்படி இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று பதில் அளித்தார்.
சோரோஸ் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்பதும், டிரம்ப் பகிர்ந்த வீடியோ போலியானது என்பதும் பின்னர் தெரிய வந்தது.
சோரோசை எதிர்ப்பவர்கள் யார்?
2018 அக்டோபரில் ஒரு அமெரிக்க வெள்ளை மேலாதிக்கவாதி, ஒரு யூத ஜெப ஆலயத்தில்(Synagogue) துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய ராபர்ட் போவர்ஸின் சமூக ஊடக சுயவிவரத்தில் இருந்து பல விஷயங்கள் தெரிந்தன. தன்னைப் போன்ற சித்தாந்தம் கொண்ட வெள்ளையர்களை கொன்று குவிக்க சதி நடப்பதாக அவர் நம்பினார்.
ஜார்ஜ் சோரோஸ் இதற்குப் பின்னால் இருப்பதாக அவர் நினைத்தார்.
ஆனால் அமெரிக்கா மட்டுமல்ல, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் ஜார்ஜ் சோரோசுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.
துருக்கியை பிரித்து அழிக்க நினைக்கும் யூத சதித்திட்டத்தின் மையத்தில் சோரோஸ் இருப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறினார்.
ஐரோப்பா முழுவதும் அகதிகளை பரப்புவதை சோரோஸ் ஊக்குவிப்பதாக, பிரிட்டனின் பிரெக்சிட் கட்சியின் நைஜல் ஃபராஜ் தெரிவித்தார்.
மேற்குலகம் முழுவதற்கும் சோரோஸ் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சோரோஸின் பிறப்பிடமான ஹங்கேரியின் அரசும் அவரை எதிரியாகக் கருதுகிறது.
2018 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஓர்பன், சோரோஸை அதிகமாக தாக்கிப்பேசினார்.
ஒர்பன் தேர்தலில் வெற்றி பெற்றார். சோரோஸை ஆதரிக்கும் அமைப்புகள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இதன் காரணமாக சோரோஸின் அமைப்பு ஹங்கேரியில் தனது பணியை நிறுத்தியது.
அரசியலைத் தீர்மானிக்க பணம் கொடுக்கும் சோரோஸ் - ஜெய்சங்கர்
பாஜக அரசு குறித்தும், பிரதமர் நரேந்திர மோதி குறித்தும் சோரோஸ் தெரிவித்த கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எதிர்வினையாற்றி உள்ளார்.
"சோரோஸ் ஒரு வயதான, ஆழமான, அபாயமான கருத்துகள் உள்ள, நியூயார்க்கில் உட்காரந்திருக்கிற பணக்காரர். உலகம் எப்படி இயங்கவேண்டும் என்பதை தனது கருத்துகளே தீர்மானிக்கவேண்டும் என்று இன்னமும் நினைக்கிறவர் அவர். இத்தகைய மனிதர்கள் உண்மையில் கருத்துகளைத் தீர்மானிப்பதற்காக முதலீடு செய்கிறவர்கள்" என்று ஜெய்சங்கர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்