You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை எய்ம்ஸ்: மிரட்டிய அமைச்சர், எச்சரித்த திமுக எம்பிக்கள் - மக்களவையில் காரசார விவாதம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடர்பாக மக்களவையில் திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பயன்படுத்திய வார்த்தைகளுக்கு திமுக எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.
"மதுரை எய்ம்ஸ் விவகாரத்தை திமுகவினர் அரசியலாக்குகிறார்கள் என்றும் மக்களுக்கு தவறான தகவல்களை அவர்கள் தருகிறார்கள்" என்றும் அமைச்சர் மன்சூக் மாண்டவியா குற்றம்சாட்டினார். ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக எம்பிக்கள் மருத்துவக் கல்லூரி துவங்கும் விஷயத்தில் மத்திய அரசுதான் உண்மையை வெளியிடவில்லை என்று குறை கூறினர். என்ன நடந்தது மக்களவையில்?
மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டிஆர் பாலு மதுரை எய்ம்ஸ் தொடர்பாக கேள்வி எழுப்ப முற்பட்டார். ஆனால், இந்த விவகாரம் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு விட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா கூறினார்.
எனினும், பொதுவாக இரண்டு கேள்விகளை கேட்கிறேன் என்று கூறிய பாலு, "இந்தியாவில் உள்கட்டமைப்பு இல்லாமல் எத்தனை மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது? எத்தனை மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி அவை இன்னும் செயல்படாமல் உள்ளன?" என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, பின் இருக்கையில் இருந்த மற்றொரு திமுக உறுப்பினர் தயாநிதி மாறன், "மதுரை எய்ம்ஸ் பற்றிய கேள்வி இது" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து சபாநாயகர் மீண்டும் "இது விவாதிக்கப்பட்ட விஷயம்" என தெரிவித்தபோதும், ஆளும் கட்சி தரப்பில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பதிலளிக்க முன்வந்தார்.
"அரசியலாக்க முயற்சி"
""எந்த விஷயத்திலும் அரசியல் நடக்கலாம். இங்கு பிரதானமாக மதுரை எய்ம்ஸ் பற்றியே இவர்களின் கேள்வி உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி செயல்படத் தொடங்கிவிட்டது. உள்கட்டமைப்பு மட்டுமே நிறுவப்படவில்லை ஆனால் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல் அரசியல் பிரச்னையை அவர்கள் (திமுகவினர்) உருவாக்கி வருகிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்," என்று மன்சூக் மாண்டவியா கூறினார்.
மேலும், திமுகவினர் தவறான தகவல்களை அளிப்பதாக குற்றம்சாட்டிய மாண்டவியா, "மாநில அரசு உரிய நேரத்தில் நிலம் வழங்காததால் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (ஜைகா) நிதியுதவி அளித்த திட்டம் அது, ஜப்பானைச் சேர்ந்த அந்நிறுவனத்தினர் இரண்டு ஆண்டுகளாக மதுரைக்கு வந்த பார்க்க முடியாத நிலை இருந்தது. அதனால் திட்டம் தாமதமாகி செலவும் அதிகரித்தது. மதுரை எய்ம்ஸ் உள்கட்டமைப்புக்காக ரூ. 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் அவர்களுக்கு (மாநில அரசு) தெரிவித்து விட்டோம். ஆனாலும் அவர்கள் அரசியல் செய்ய நினைத்தால், அதற்கு தீர்வு இல்லை," என்று தெரிவித்தார்.
இதன் பிறகும் அமைச்சர் சரியான தகவலை தரவில்லை என்று திமுக எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், "இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என எனக்கு தெரியும். அங்கு (தமிழ்நாட்டில்) உள்ள சில கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவற்றுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்தேன். அதற்கு எதிர்வினையாக இங்கே இவர்கள் அரசியல் செய்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
"சொல்வது எதுவும் உண்மையில்லை" - திமுக
இதையடுத்து மீண்டும் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"நீங்கள் போய் ஆவணத்தை சரியாக பாருங்கள். சொல்வது எதுவும் உண்மையில்லை," என்று டி.ஆர். பாலு கூறினார். அவருக்கு ஆதரவாக திமுகவினர் குரல் கொடுத்தனர்.
அவர்களின் அமளிக்கு மத்தியில் பேசிய மாண்டவியா, "இதுபோன்ற சட்ட விரோத செயல்களை மோதி அரசு அனுமதிக்காது. தவறிழைக்கும் மருத்துவ கல்லூரிகள் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தொடரும்" என்றார்.
அப்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள், மாண்டவியாவுக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்தனர்.
அத்துடன் நிற்காமல், "மோதி சொன்னதை செய்பவர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக அங்கு கல்லூரியே செயல்படவில்லை என்று கூறக்கூடாது. அந்த மருத்துவ கல்லூரி இயங்க ஏற்பாடு செய்யப்பட்டு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். மதுரையில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவுவது மட்டுமே தாமதமாகியுள்ளது. நல்லவிதமாக மருத்துவ கல்லூரியை கட்டி முடிப்போம்," என்றார் மாண்டவியா.
அப்போது அமைச்சர் பேசிய சில வார்த்தைகள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய குரல்கள் காரணமாக கேட்கவில்லை.
"பிளாக்மெய் செய்கிறார் அமைச்சர்"
டி.ஆர். பாலு எழுந்து, "அமைச்சர் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்" என்று கூறினார்.
திமுக எம்.பி தயாநிதி மாறன் எழுந்து, "ஒரு நேரடியான கேள்விக்கு பதிலளிக்காமல், 'உங்கள் அனைவரை சுற்றியுள்ள கயிறு இறுக்கப்படும் என்று அமைச்சர் எப்படி எங்களை அச்சுறுத்த முடியும். இப்படி கூற இவர் யார்?" என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார். எங்களை எப்படி ஒரு அமைச்சர் பிளாக்மெயில் செய்யலாம் என்றும் அவர் கேட்டார்.
இதையடுத்து யார் என்ன பேசினார்கள் என்பதை பரிசீலித்து ஆவண செய்வதாக சபாநாயகர் கூறினார். இந்த விவகாரத்தில் மக்களவையில் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்