You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காதலர் தினம் Vs பசு அணைப்பு தினம்: வைரலாகும் விவாதம் - அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?
கடைசி செய்தி: இந்த செய்தி வெளிவந்த இரண்டு நாட்களில் இந்திய விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி பசு அணைப்பு தினத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்பப் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக நாம் கொண்டாடுவோம் என்ற இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அழைப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த அறிவிப்பின் நோக்கம் என்ன? அதன் வாயிலாக மத்திய அரசு சாதிக்க விரும்புவது என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாட உலகம் முழுவதும் இப்போதே இளம் தலைமுறையினர் தயாராகி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி, இந்தியாவிலும் கூட பெரு நகரங்கள் தாண்டி கிட்டத்தட்ட நாட்டின் எல்லா இடங்களிலும் பரவலாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதலை வெளிப்படுத்துவது, காதல் ஜோடிகள் பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்று.
காதலர் தினத்திற்கு இந்தியாவில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர காணப்படுகிறது. காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம், அதை புறந்தள்ள வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
"இல்லவே இல்லை, காவிய காலம் தொட்டு காதல் இருந்து வருகிறது, அதை வெளிக்காட்டும் நாள்தான் காதலர் தினம்" என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் எஸ்.கே.தாத்தா பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார்.
"மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருகிறது. நம் கலாசாரமும் பண்பாடும் மறக்கக்கடிக்கப்பட்டது. பசுக்கள் ஏராளமான பலன்களைத் தருவதால், பசுவை கட்டிப்பிடிப்பது மன ரீதியான வளத்தை அதிகரிக்கும். இதனால் தனி நபர்கள் மற்றும் சமூகத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எனவே பசு மீது நேசம் கொண்டவர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள்." என்று அந்த அறிக்கையில் எஸ்.கே. தத்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
காதலர் தினத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூட இந்த அறிவிப்பு குறித்த விமர்சனப் பார்வையை முன்வைத்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் 'மகிழ்ச்சி பொங்க' இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதானியை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு," என்று விமர்சித்துள்ளார்.
சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ரெளட், " அதானிதான் பா.ஜ.க.வின் புனிதப் பசு. பா.ஜ.க.வினர் அவர்களது புனிதப் பசுவை கட்டியணைத்திருக்க, காதலர் தினத்தன்று மற்ற பசுக்களை நாம் அணைத்துக் கொள்ள விட்டிருக்கின்றனர்," என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சாவந்த், "பசு அணைப்பு தினம் என்பது கோவா, வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்துமா? மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பசுக்களை கட்டி அணைப்பாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தெலங்கானா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு கழக தலைவருமான ஒய். சதீஷ் ரெட்டியும் இந்திய விலங்குகள் நல வாரிய அறிவிப்பை கண்டித்துள்ளார்.
"பசு அணைப்பு தினத்திற்கு பா.ஜ.க. தலைவர்கள் ஒத்திகை!" என்று குறிப்பிட்டு அவர் பகிர்ந்த வீடியோ பரவலாக கவனம் ஈர்த்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷணும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதுபோல, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் வேண்டுகோளை விமர்சித்து சமூக ஊடகங்களில் பலரும் மீம்ஸ்களையும், பழைய வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்