You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
EWS உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மற்றும் வாதிடுபவர்கள் முன்வைத்த வாதங்கள் என்ன?
- எழுதியவர், இக்பால் அகமது
- பதவி, பிபிசி இந்தி
பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விதியை இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியானதில் இருந்து இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.
உண்மையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 3:2 என்ற வகையில் வெளிவந்திருக்கிறது. அதாவது, ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவாக உள்ளனர். பொருளாதார அடிப்படையில் உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் இரு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதில் சுவாரஸ்யமான அம்சமாக, பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதில் உடன்படாத நீதிபதிகளில் இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் உள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை அவர்கள் ஆதரிக்கவில்லை.
இந்த விவகாரம் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குள்ளானது. அரசின் இந்த முடிவை பல அரசியல் கட்சிகள் வரவேற்றாலும், தமிழ்நாட்டில் ஆளும் திமுக மற்றும் பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
ஆதரவும் எதிர்ப்பும் - வாதங்கள் என்ன?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள மத்தியில் ஆளும் பாஜக, ''நாட்டின் ஏழைகளுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோதியின் பணிக்கு கிடைத்த வெற்றி இது'' என்று கூறியிருக்கிறது
பிகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோதி, "இந்த தீர்ப்பு வரலாற்றுபூர்வமானது" என்று கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பிறகு எந்த வாயை வைத்துக் கொண்டு ஆர்ஜேடியும், ஆம் ஆத்மி கட்சியும் உயர் ஜாதியினரிடம் ஓட்டு கேட்கப் போகின்றன என்று சுஷில் மோதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதோ அதை ஆர்ஜேடி, திமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக ஆகிய கட்சிகள் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தன.
இதேவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2005-2006ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சின்ஹா கமிஷனை அமைத்தார். அந்த ஆணையம் 2010ஆம் ஆண்டு தனது அறிக்கையை அளித்தது.
2014 ஆம் ஆண்டிலேயே இந்த ஆணையத்தின் அறிக்கையை ஆராய்ந்து இந்த மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை நிறைவேற்ற மோதி அரசு 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும் 2012ஆம் ஆண்டிலேயே முடிவடைந்ததாகவும், ஆனால் மோதி அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது.
இதற்கிடையே, இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் சமூக நீதிக்கான போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பின்னடைவு என்று கூறியுள்ளார்.
இந்த மசோதாவை அவரது கட்சியான திமுக நாடாளுமன்றத்தில் எதிர்த்ததுடன், தமிழக அரசும் இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.
எதிர் தரப்பு வாதங்கள் என்ன?
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பவர்கள், "இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கமே சமூக ரீதியாக பின்தங்கியவர்களின் நிலையை அகற்றுவதே தவிர, பொருளாதார சமத்துவமின்மையைத் தீர்ப்பதற்காக அல்ல," என்று கூறுகிறார்கள்.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது சமூகத்தில் பின்தங்கிய மக்களின் பலன்களைக் குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ஏனெனில் இடஒதுக்கீட்டின் வரம்பு 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டால், பிற பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பாதிக்கப்படும்.
மேலும் இடஒதுக்கீடு வரம்பை 50ல் இருந்து 60 சதவீதமாக உயர்த்தினால், இடஒதுக்கீடு பலனைப் பெறாத பிரிவினருக்கு 40 சதவீதமே எஞ்சியிருக்கும்.
மகாராஷ்டிராவின் முன்னாள் ஐஜி அப்துர் ரஹ்மான், "இடஒதுக்கீடு என்பது பலன்களை ஏழைகளுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்படும் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல," என்று கூறினார்.
இந்த முடிவு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் அவர், "ஓபிசி அல்லது பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னை ஏற்படும்போதெல்லாம், சரியான தரவு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மக்கள்தொகை சதவீதத்தை வழங்கும்படி நீதிமன்றம் கேட்கிறது. 50% வரம்பை மீற முடியாது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான தரவு நம்மிடையே இல்லை. பிறகு எப்படி அவசரகதியில் அந்த பிரிவினருக்காக 10% ஒதுக்கீடு வழங்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்புகிறார்.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை முன்னாள் பாஜக எம்.பி.யுமான உதித் ராஜும் இந்த தீர்ப்பு குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.
"நான் ஏழை உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரானவன் அல்ல, ஆனால் எஸ்சி/எஸ்டி/ஓபிசி விவகாரம் வரும்போதெல்லாம், இந்திரா சாவ்னி வழக்கில் 50% வரம்பை தாண்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. நான் எப்போதும் அந்த மனநிலையில் தான் இருக்கிறேன்" என்கிறார் உதித்.
தி வயர் செய்தி இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், "EWS வழக்கின் பெரும்பான்மை தீர்ப்பில் என்ன தவறு என்று பார்க்க வேண்டுமானால், மோதி அடுத்ததாக பெண்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி, அதில் இருந்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு பெண்களை விலக்கி வைக்கிறார் என்று கற்பனை செய்து பாருங்கள். ஏனெனில் அந்த பிரிவுகளுக்கு ஏற்கெனவே ஒரு ஒதுக்கீடு உள்ளது!" என்று கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும், சமூக ஊடகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக உறுதியாகக் குரல் கொடுப்பவருமான வழக்கறிஞர் திலீப் மண்டல், இந்த தீர்ப்பின் நேர்மறையான பக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அதிகபட்ச வரம்பை அதிகரிக்க இது வழிவகை செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.
முழு விஷயம் என்ன?
இந்திய அரசியலமைப்பின்படி, பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் 49.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.
இது தவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசியல் சட்ட திருத்தத்தின் கீழ் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வகை இடஒதுக்கீட்டை எதிர்த்து 40 மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை ஜன்ஹித் அபியான் 2019இல் தாக்கல் செய்தார்.
இந்த வகை இடஒதுக்கீடு நீடித்தால், சம வாய்ப்புகள் முடிவுக்கு வரும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார அடிப்படையில் வழங்கப்படும் இந்த இடஒதுக்கீட்டை ஆதரிப்பது என்பது, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு அளிக்கும் என்பதுதான். பொருளாதார அடிப்படையானது குடும்பத்திற்கு சொந்தமான நிலம், ஆண்டு வருமானம் அல்லது வேறுவிதமாக இருக்கலாம்.
சின்ஹோ கமிஷனின் பரிந்துரைகள்
2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்தியில் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்ஆர் சின்ஹா கமிஷனை அமைத்தது. அது 2010ஆம் ஆண்டில் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் EWS இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவினரின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைத்துக் குடும்பங்களும், வருமான வரி வரம்பை விட ஆண்டு வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட வேண்டும் என்று ஆணையம் தனது அறிக்கையில் கூறியிருந்தது.
மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டின் அதிகபட்ச வரம்பை 50 சதவீதமாக நிர்ணயித்தது. இந்த ஒதுக்கீடு 50 சதவீத வரம்பை மீறுவதாக EWSக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் வாதிட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்