குஜராத் தேர்தல்: டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைக்கு வாக்குப்பதிவு

பட மூலாதாரம், Getty Images
குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5-ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.
வழக்கமாக குஜராத் மாநில தேர்தல்கள் நவம்பரில் நடக்கும், இந்த முறை முழுவதும் டிசம்பர் மாதத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தகவல்கள்
- குஜராத் தேர்தலில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
- இந்த முறை குஜராத்தில் 4 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும்.
- குஜராத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க சுமார் மூன்று லட்சத்து 24 ஆயிரம் இளைஞர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
- குஜராத்தில் சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் உள்ளனர்
- போலிச் செய்திகளைக் கையாள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு வேண்டுகோள்

குஜராத்தில் 4.9 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2.53 கோடி. பெண் வாக்காளர்கள் 2.37 கோடி பேர். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 4.6 லட்சம் அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 13 தொகுதிகள் ரிசர்வ் செய்யப்பட்டவை. 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 77 இடங்களையும் கைப்பற்றின.
குஜராத் மாநில சட்டப் பேரவையின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நிறைவடைகிறது.
குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அனைத்து வாக்குச் சாவடிகளும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என அவர் கூறினார்.
குஜராத் தேர்தலுக்காக ஏற்கெனவே பல கட்சிகள் பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மோர்பியில் பாலம் உடைந்து விழுந்து 135 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பரப்புரைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது மீண்டும் தேர்தல் பற்றி பேச்சு எழுந்துள்ளது.
குஜராத் தேர்தலில் முக்கிய பிரச்னைகள் என்னென்ன?
பாரம்பரியமாக குஜராத்தில் இரண்டு முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை ஆம் ஆத்மி மற்றும் அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் தேர்தல் களத்தில் நுழைகிறது.
இது இரண்டு முக்கிய கட்சிகளின் தேர்தல் சமன்பாட்டைச் சீர்குலைக்கலாம். இருப்பினும், குஜராத்தில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் முக்கிய போட்டி நடக்கும் என பல அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
நாடு முழுக்க பயணம் செய்து கொண்டிருக்கும் ராகுல் காந்தியின் இந்த பயணத்தில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பட மூலாதாரம், ANI
இந்த இரண்டு மாநிலங்களிலும் அவர் பிரசாரம் செய்வாரா இல்லையா என்பதும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மறுபுறம் குஜராத், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம். இது தேர்தலுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்குகிறது.
இந்த தேர்தல், முதல்வர் பூபேந்திர படேலின் பதவிக்காலத்திற்கான தீர்ப்பாகவும் இருக்கும். இடைத்தேர்தலில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து தோல்வியடைந்த அல்பேஷ் தாக்கூர் மற்றும் ஹர்திக் படேலின் எதிர்காலம் இந்த தேர்தலில் தீர்மானிக்கப்படும்.
தலித் தலைவரும் வட்காம் தொகுதியில் இருந்து சுயேட்சை எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானி ஏற்கெனவே காங்கிரஸில் சேரப்போவதாக அறிவித்துள்ளதால், அவரது பங்கும் ஆய்வுக்கு உள்படும்..
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













