You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலர் ஷாம்பூவில் புற்றுநோய் கூறுகள்: உலர் ஷாம்பூவுக்கும், சாதாரண ஷாம்பூவுக்கும் என்ன வேறுபாடு?
- எழுதியவர், கௌதமி கான்
- பதவி, பிபிசி தெலுங்கு செய்தியாளர்
உலர் ஷாம்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதால் அமெரிக்க சந்தையில் இருந்து அவற்றைத் திரும்பப் பெறுவதாக முன்னணி நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான யுனிலீவர் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்த உலர் ஷாம்பூகளின் விற்பனையை உடனடியாக நிறுத்தும்படியும், அவற்றை தங்கள் கடைகளின் அலமாரிகளில் இருந்து வெளியே எடுக்கும்படியும் சில்லறை விற்பனையாளர்களை இந்த நிறுவனம் கேட்டுக்கொண்டது.
இந்தியாவில் உள்ள முன்னணி நுகர்வோர் பொருள் நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவரின் தாய் நிறுவனம்தான் இந்த யுனிலீவர். சோப்புகள், ஷாம்பூக்கள் முதல், பல்வேறு அழகு சாதனப் பொருள்கள், உடல் பராமரிப்புப் பொருள்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனம் இது.
இந்தியாவில் பாதிப்பு ஏற்படுமா?
புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக கூறி யுனிலீவர் கம்பெனி விற்பனையை நிறுத்திய உலர் ஷாம்பூ பிராண்டுகளில் டவ், ட்ரைசெம், நெக்ஸ் ஆகியவை அடங்கும். இந்த உலர் ஷாம்பூக்களில் இருக்கும் பென்சீன் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்கிறது இந்த நிறுவனம்.
தங்கள் உலர் ஷாம்புகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதும் இல்லை, விற்கப்படுவதும் இல்லை என்பதால் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்துஸ்தான் யுனிலீவர்.
ஆனால் இந்த உலர் ஷாம்பூக்கள் அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்களில் கிடைக்கின்றன என்று பிசினஸ் இந்தியா ஒரு செய்தியில் தெரிவித்துள்ளது. டவ் ட்ரை ஷாம்பு, ஃப்ரெஷ் கோகனட், டவ் ட்ரை ஷாம்பு ஸ்ப்ரே, ஃப்ரெஷ் அன்ட் ஃப்ளோரல் போன்ற உலர் ஷாம்பூக்கள் அமேசானில் விற்பனைக்குக் கிடைப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள யுனைடெட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற நிறுவனம் இந்த டிரை ஷாம்பூகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.
உலர் ஷாம்பூ என்றால் என்ன?
சாதாரண ஷாம்பூக்களுக்கும், உலர் ஷாம்பூக்களுக்கும் வேறுபாடு உள்ளது. சாதாரணமாக தலையில் தண்ணீர் ஊற்றி நனைத்துவிட்டு ஷாம்பூ போடுவோம். ஆனால் தலையை நனைக்காமல் முடிக்கு புத்துணர்ச்சி ஊட்ட உலர் ஷாம்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை தலையை உலர்வாக வைத்திருக்கவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக உடற்பயிற்சிக்குப் பிறகு தலையை உலர்த்த இதைப் பயன்படுத்துகிறார்கள்.
தலைமுடியை 'புசு புசு'வென்று ஆக்கவும் உலர் ஷாம்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இவற்றை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலும் உலர் ஷாம்பூ சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.
பென்சீன் என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து?
பென்சீன் என்பது ஒரு வேதிப்பொருள். அதற்கு நிறமில்லை. ஆனால் ஒரு வாசனை இருக்கிறது. பென்சீன் பொதுவான பிளாஸ்டிக் பொருள்கள், ரப்பர் பொருள்கள், தலை முடிக்கான டை, சோப்பு தூள்கள், மருந்துகள், வேதிப் பொருள்களை தயாரிக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
உலர் ஷாம்பூக்களை தலைமுடியில் ஸ்பிரே செய்ய வேண்டும். அப்படி ஸ்ப்ரே செய்யும்போது புகை போல வெளியேறும் துகள்கள் சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்கின்றன. இதில் உள்ள பென்சீன் தீங்கு விளைவிக்கும். இது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களை குறைக்கிறது. பென்சீன் அதிகமாக உடலில் சேர்ந்தால், ரத்தப் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை புற்றுநோய் போன்றவை ஏற்படும். இந்த வேதிப் பொருளால் வேறு பல நாள்பட்ட நோய்களும் ஏற்படுவதாக அமெரிக்காவின் தேசிய பொது சுகாதார அமைப்பான சென்டர்ஸ் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல் அன்ட் பிரவென்ஷன் கூறுகிறது.
உலர் ஷாம்பு மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களில் மிதமிஞ்சிய அளவில் காணப்படும் பென்சீன் உள்ளதா என்று வேறு சில பொருள்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று வேலிஷ்யூர் லேபாரட்ரீஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டேவிட் கூறியுள்ளார். யுனிலீவரின் உலர் ஷாம்பூக்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பதாக வேலிஷ்யூர் நிறுவனத்தின் ஆய்வே காட்டியது.
கடந்த காலத்திலும்
தங்கள் அழகு சாதனப் பொருள்கள் மற்றும் உடல் பராமரிப்புப் பொருட்களை நிறுவனங்கள் திரும்பப் பெறுவது இது முதல் முறை அல்ல. ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் 2023 முதல் உலக அளவில் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்தப்போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. 2020ம் ஆண்டு முதலே அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்கள் இருப்பதே இதற்குக் காரணம்.
கடந்த ஆண்டு P&G கம்பெனியும் இது போன்ற காரணங்களால் 30 க்கும் மேற்பட்ட உடல் பராமரிப்பு பொருள்களின் விற்பனையை நிறுத்தியது. டியோடரண்டுகள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் மற்றும் சன் ஸ்கிரீன் லோஷன்கள் ஆகியவை இப்படி விற்பனை நிறுத்தப்பட்ட பொருள்களில் அடங்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்