ரஜினிகாந்துக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுரை

பட மூலாதாரம், Getty Images
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், அந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.
இது தொடர்பாக கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கை, அக்டோபர் 18ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த ஆணையத்தின் அறிக்கை விவரம் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையோர், பாதிக்கப்பட்டோர், தொடர்புடையதாக கருதப்படுவோர், குற்றம்சாட்டப்படுவோர் என பலரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலை போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் தொடர்பாக வெளியிட்ட கருத்துகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
என்ன பேசினார் ரஜினி?
ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையில் தன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அரசு எந்திரம் தோற்றுவிட்டது" என்றும் "காவல்துறை வரம்புமீறி தாக்குதல் நடத்தியுள்ளது" என்றும் பேசினார்.


பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்து காவலர்களைத் தாக்கி மாவட்ட ஆட்சியரகத்தை சேதப்படுத்தியதோடு ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்கும் தீவைத்துள்ளனர்" என்று பேசினார்.
இந்த கருத்துகளை ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக அவரிடம் விளக்கமும் கேட்டது நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்.

நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்ட ரஜினிகாந்த், எழுத்துப்பூர்வமாக ஆணையத்துக்கு பதிலளித்தார். "அதில், தூத்துக்குடியில் அன்றைய தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு, திட்டமிட்ட சந்திப்பு அல்ல. அது எதிர்பாராத, தற்செயலாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. எனவே, அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் திட்டமிட்டு எதுவும் சொல்லவில்லை. தூத்துக்குடியில் நடந்த ஊர்வலம் தொடர்பாக எந்த ஆவணங்களோ, ஆதாரங்களோ, பத்திரிகை மற்றும் ஊடக பதிவுகளோ என்னிடம் இல்லை," என்று ரஜினி கூறியதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கு முன்பு ஏதேனும் சிசிடிவி காட்சிகளை பார்த்தீர்களா என்று கேட்டபோது "அப்படி ஒரு கருத்துக்கான அடிப்படையை உருவாக்கக் கூட ஆதாரங்கள் ஏதும் இல்லை" என்று ரஜினி பதிலளித்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், தூத்துக்குடி சென்றிருந்த ரஜினிகாந்த், "எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்" எனவும் கூறியிருந்தார். இந்தக் கருத்தும் அச்சமயத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதன் விளைவாக சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினி வெகுவாக விமர்சிக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஆணையம் குறிப்பிடும்போது, "உறுதி செய்யப்படாத செய்திகளை பிடிவாதமாக நம்பும் தனிநபர்கள் பொதுவெளியை தவிர்க்க வேண்டும்," என்று கூறியுள்ளது.
அறிக்கை என்ன சொல்கிறது?
"பிரபல நடிகர் ரஜினிகாந்த் அந்த சமயத்தில் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பொதுமக்கள் எளிதில் நம்பி விடக்கூடிய வாய்ப்புள்ள இதுபோன்ற தருணங்களில், ஒரு தகவலை பேசும் முன்பு அதன் மூலத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற வார்த்தைகளை பேசும் முன் தனக்கு வந்த தகவலை மிகவும் கவனமாக உறுதி செய்திருக்க வேண்டும். இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை பிரபலங்கள் பேசுவதன் மூலம் அவர்களால் தீர்க்க முடிவதை விடக் கூடுதலான பிரச்னைகள் உருவாகி விடும்.
பிரபலங்கள் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். இப்படி 'உறுதி செய்யப்படாத தகவல்களை பிடிவாதமாக நம்பும்' தனிநபர்களுக்கு பொதுவெளியில் இடம் கிடையாது. அவர்களே, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் மிக மிக கவனமாக பொதுவெளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்." என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (பாகம்2 - பக்கம் 217-219)

தூத்துக்குடியில் என்ன நடந்தது?
2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் 100ஆவது நாள். அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடந்த கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும் இதுபோன்று நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












