அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை

பட மூலாதாரம், Getty Images
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி ரத்து செய்தார். இந்தத் தீர்ப்பை பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்தது. இது அதிமுகவின் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கான வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு
"ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் கேட்டு எடப்பாடி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதால் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது," என்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


"இந்த விவகாரத்தில் நாங்கள் முடிவெடுக்கும் வரை, தேர்தலை நடத்த வேண்டாம். இதை பின்னர் விசாரிப்போம்," என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு, "அதுவரை தேர்தல் நடத்தப்படாது" என்று உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தது. இந்த வழக்கை, நவம்பர் 21ஆம் தேதிக்கு மேல் விசாரிக்கப்போவதாகக் கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணி
கடந்த ஜூலை மாதம், அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது அதிமுக.
அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே, ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றிய சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீதியைப் பெறப் போவதாக ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது.
ஜூலை மாத இறுதியில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்த, ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும் அதற்கு முந்தைய இரட்டை தலைமை நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இது எடப்பாடி அணிக்கு சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் தான், அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனுவை முழுமையாக விசாரித்து முடிவெடுக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கெய்ஷ்னா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













