You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவிக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பதில்
பிகார் மாநிலத்தில், சானிட்டர் பேட்களை இலவசமாக வழங்குமாறு கேட்ட ஒரு பள்ளி மாணவியின் கோரிக்கைக்கு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் அளித்த பதில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் யுனிசெஃப் அமைப்புடன் சேர்ந்து நடத்தப்பட்ட ஒரு பயிற்சிப் பட்டறையில், அந்த பள்ளி மாணவி இந்த கோரிக்கையை வைத்துள்ளார். அதற்கு அந்த அதிகாரி, இலவச ஆடைகள், காலணிகள் என இன்னும் ஆணுறையை கூட அரசிடமிருந்து எதிர்பார்பார்ப்பீர்கள் என்று பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் வெளிப்படையாக பேச தயங்கும் ஒரு விஷயமாக உள்ளது. மாதவிடாய் நாட்களில், பெண்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் நல்ல சுகாதார வசதிகள் கிடைக்காததால், மாதவிடாய் தொடங்கியதும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 23 மில்லியன் பெண்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள்.
தேசிய குடும்ப சுகாதார திட்ட கணக்கெடுப்பின்படி, பிகார் மாநிலத்தில் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமான வழிமுறைகளை 59% பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள். இந்த கணக்கெடுப்பு, சுகாதார மற்றும் சமூக அடிப்படையில் நடத்தப்படும் அரசின் ஆய்வு.
அந்த மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் நடந்த 'சஷாக்த் பேடி, சம்ரித் பிகார்' என்ற பெண்கள் மேம்பாட்டிற்கான நிகழ்ச்சியில், மூத்த அதிகாரியான ஹர்ஜோட் கெளர் பாம்ராவிடம் அந்த மாணவி, 20, 30 ரூபாயில் கிடைக்கும் சானிட்டரி பேட்களை அரசு இலவசமாக அளிக்குமா என்று கேட்டிருக்கிறார்.
மேலும், தமது பள்ளியில் உடைந்துபோன கழிவறைகள் இருப்பதும், அதனை பயன்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் பற்றியும் அவர் பேசினார். அங்கு கூடியிருந்தவர்கள் பெரும்பாலும் 15, 16 வயதுடைய மாணவிகள்.
அம்மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார் ஹர்ஜோட் கெளர் பாம்ரா. அந்த பள்ளி மாணவியின் கேள்வி, அவரை எரிச்சலடைய வைத்தது.
"நீங்கள் ஏன் எல்லாவற்றையும் அரசிடம் இருந்து பெற நினைக்கிறீர்கள்? இந்த சிந்தனை முறையை மாற்ற வேண்டும். அதை நீங்களே செய்யுங்கள்," என்று அவர் கூறினார்.
குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட அரசிடமிருந்து தீர்வு கேட்பதாக கூறிய அந்த மாணவியிடம் கோபமாக பேசிய பாம்ரா, "இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியெனில் வாக்களிக்காதீர்கள். பாகிஸ்தானியர்களாக ஆகி விடுங்கள். நீங்கள் பணத்திற்காகவும் சேவைகளுக்காகவும் வாக்களிக்கிறீர்களா?" என்று மறுகேள்வி எழுப்பினார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட பிறகு, பலர் அவரது கருத்துகளை 'வெட்கக்கேடானது' என்று அழைத்தனர். மேலும் அந்த அதிகாரி ஒரு பொதுத்துறை ஊழியராக இருக்க 'தகுதியற்றவர்' என்று கூறினார்.
பாம்ரா பின்னர் இந்த நிகழ்வைப் பற்றிய செய்தி, 'தவறானது என்றும், தீங்கிழைக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டது' என்று கூறியுள்ளார். மேலும் தமது கருத்துக்களைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்ட ஹிந்தி நாளிதழ் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சுறுத்தினார்.
"பெண்களின் உரிமைகளுக்கும், அதிகாரம் வழங்குதலுக்கும் குரல் கொடுப்பவர்களில் ஒருவராக நான் அறியப்படுகிறேன்," என்று அவர் கூறினார். மேலும் அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க, இத்தகைய செயல்கள் நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்