You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் - இந்திய உச்ச நீதிமன்றம்
இந்தியாவில் திருமணமான பெண்கள் 20 முதல் 24 வாரங்கள் வரை உள்ள தங்களின் கருவை பாதுகாப்பாகவும் சட்டபூர்வமாகவும் கலைக்க கொண்டுள்ள உரிமை, திருமணமாகாத கருத்தரித்த பெண்களுக்கும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2021ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டம் திருத்தப்பட்டது. அதில் யார், யார் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்ட பட்டியலில் 'திருமணமாகாத பெண்கள்' விடுப்பட்டிருந்தனர். இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்பு இன்று வந்துள்ளது.
அதன்படி அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான, சட்ட ரீதியான கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒருமித்த உறவில் திருமணமாகாத பெண்களை விடுவிப்பது என்பது "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 1971ஆம் ஆண்டில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது. ஆனால் அதன்பின் வந்த ஆண்டுகளில் பெண் குழந்தைகள் என்ற காரணத்தினால் கருக்கலைப்பு பெருகிடவே, பாலின விகிதத்தில் தீவிர சமநிலையற்ற தன்மை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து யார் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பதில் கடுமையான விதிகள் வகுக்கப்பட்டன.
கடந்த வருடம் இந்திய கருக்கலைப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தின்படி பல்வேறு பெண்கள் 20 - 24 வாரங்களில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்கள், தீவிர குறை கொண்ட கருவை சுமக்கும் பெண்கள், கர்ப்ப காலத்தில் தனது திருமண உறவில் மாற்றம் கண்ட பெண்கள் ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர்.
இன்று கூறப்பட்ட தீர்ப்பில், இந்த சட்டம் திருமணமான பெண்கள் அல்லது திருமணமாக பெண்கள் என்று பிரித்து பார்க்கவில்லை. ஒருமித்த உறவில் உள்ள திருமணமாகாத பெண்களையும் இந்த தீர்ப்பு குறிக்கும் என கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் சந்திரசூட், ஏஎஸ். போபண்ணா, ஜேபி பார்டிவால் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தேவையில்லாத கர்ப்பத்தை கலைக்கும் அவரின் உரிமையை பறிக்க முடியாத என்று கூறியது.
அதேபோல இந்த சட்டத்தின் அடிப்படையில், பாலியல் வல்லுறவு என்றால் கணவர்களால் நடக்கும் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் தற்போதுவரை 'மைனர்' (18 வயது நிரம்பாதவர்) இல்லாத மனைவியுடன் ஒரு ஆண் பாலுறவு வைத்துக் கொண்டால் அது 'பாலியல் வல்லுறவு' என்று கருதப்படாது.
மே மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவேறு தீர்ப்புகளை நீதிபதிகள் அமர்வு கூறியது. எனவே இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்