You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீடியோ கால் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்த சம்பவம் - முழு பின்னணி தகவல்கள்
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி ஒருவருக்கு வீடியோ கால் மூலமாக செவிலியரும் உதவியாளரும் பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை இறந்துவிட்டதால் விவகாரம் சர்ச்சையானது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததும், வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததுமே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று கூறி அந்தப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து பிரசவம் பார்த்ததாகக் கூறப்படும் செவிலியரும் அவரது உதவியாளரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இது ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் முறையை கேள்விக்குள்ளாக்கியது.
"தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இருந்தால் துறை ரீதியாகவும் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. பணி இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
எனினும், தொடர்புடைய ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் ஏன் இல்லை? செவிலியர் தனியாக பிரசவம் பார்க்கலாமா? வீடியோ கால் மூலமாக பிரசவம் பார்த்தது சினிமா மூலமாக எழுந்த ஆர்வத்திலா? இல்லை இதுபற்றி நடைமுறை விதிகள் ஏதேனும் இருக்கின்றனவா? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டார் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி புஷ்பா. கடந்த திங்கள்கிழமையன்று கர்ப்பிணியான புஷ்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை மதுராந்தகம் அருகே உள்ள இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றிருக்கின்றனர்.
"திங்கள்கிழமை மதியம் 3 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லை. செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தார்கள்," என்கிறார் முரளியின் தம்பி ராஜேஷ்குமார்.
"முடியாது என்றால் எங்களை மதுராந்தகம் அல்லது செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறினோம். ஆனால் நாங்களே பார்க்கிறோம் என்று செவிலியர்கள் தெரிவித்தார்கள். அதனால் அங்கேயே எங்கள் அண்ணியை அனுமதித்தோம். அரை மணிநேரத்தில் பிரசவ வலி அதிகமானது. சுமார் ஒரு மணிநேரத்தில் குழந்தையின் கால் முதலில் வெளிவரத் தொடங்கியது. அப்போது மருத்துவருக்கு வீடியோ கால் செய்து கேட்டார்கள். 5 மணியளவில் ஆம்புலன்ஸில் ஏற்றி செங்கல்பட்டு அல்லது மதுராந்தகம் கூட்டிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள். பாதி வழியிலேயே குழந்தை இறந்து பிறந்துவிட்டது" என்றார் ராஜேஷ்குமார்.
புஷ்பா அனுமதிக்கப்பட்ட சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையம் மதுராந்தகம் மருத்துவமனையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் குழந்தை பிறந்துவிட்டதாக ராஜேஷ்குமார் கூறினார்.
மருத்துவர்கள் பணியில் இல்லாததும், வீடியோ கால் மூலமாக செவிலியர் பிரசவம் பார்த்ததுமே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பிரசவத்துக்கு முன்னரே ஏதேனும் பிரச்னை இருக்கிறது என்பது ஸ்கேனில் தெரியவந்ததா என்று கேட்டபோது, "ஸ்கேன் செய்த இடத்தில் குழந்தையின் தலை திரும்பி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் பிரசவ நேரத்தில் தலை சரியாகிவிடும் என்று கூறினார்கள். சம்பவத்துக்கு 3 நாள்களுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூட்டிச் சென்றபோது அங்கு யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை" என்று ராஜேஷ்குமார் கூறினார்.
குழந்தை இறந்ததைத் தொடர்ந்து மதுராந்தகம்- புதுச்சேரி சாலையில் உறவினர்கள் மறியல் செய்தனர். விவகாரம் சர்ச்சையானது. செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பரணிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தற்போது மதுராந்தகம் மருத்துவமனையில் புஷ்பாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செவிலியர் பிரசவம் பார்க்கலாமா?
இந்தச் சம்பவத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்துவிட்டது என்ற குற்றச்சாட்டை அதிகாரிகளும் மருத்துவ சங்கத்தினரும் மறுக்கிறார்கள்.
"செவிலியர் தனியாக பிரசவம் பார்க்கலாம் என்பது அரசு அனுமதித்த ஒன்று. இது உலகளாவிய நடைமுறைதான். இதற்கு அவர்களுக்கு உரிமம் உள்ளது. இந்த அடிப்படையைப் பயன்படுத்தி செவிலியர் மட்டுமே இருந்து பிரசவம் பார்க்கும் நடைமுறை ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ளது" என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத் தலைவர் செந்தில்.
தமிழ்நாட்டில் சுமார் 2 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 400 மட்டுமே மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள். இவற்றில் மட்டுமே 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருப்பார்கள். மீதமுள்ள சுமார் 1,600 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே இருப்பார்கள். ஆனால் அனைத்து 2 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கும் நடைமுறை அரசு செய்திருக்கிறது.
"இதன் அர்த்தம் என்னவென்றால் மருத்துவர் இல்லாத நேரத்தலும் செவிலியர்கள் தனியாக பிரசவம் பார்க்கலாம் என்பதுதான். உண்மையில் சுமார் 1,600 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். மருத்துவர்கள் இருக்கும்போதுகூட செவிலியர்தான் பிரசவம் பார்ப்பார்கள். ஏதாவது சிக்கல் என்றால்தான் மருத்துவர்கள் உதவுவார்கள்" என்கிறார் செந்தில்.
இதை தமிழ்நாடு அரசின் அதிகாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமா?
தொடர்புடைய நிகழ்வில், கர்ப்பிணிப் பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தபோது ANM எனப்படும் நர்சிங் மிட்வைஃப் உதவியாளரே பணியில் இருந்திருக்கிறார். மற்றொரு செவிலியர் பணி முடிந்து சென்றுவிட்டார். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிறகே செவிலியர் மீண்டும் வந்திருக்கிறார்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர மருத்துவர்களாகப் பணியாற்றி வந்த மருத்துவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக இப்போது பணியில் இல்லாததால் அருகில் இருந்த வேறொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவரே இங்கு பணியில் இருந்திருக்கிறார். அதனால் மருத்துவர்கள் பற்றாக்குறை அல்லது செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 2,500 செவிலியர் பணியிடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரப்பப்படாமல் இருப்பதாக செவிலியர் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் சுபின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள்தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் இப்போதைய பணியிடங்களைக் கொண்டு அதைச் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர் செந்தில்.
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 5% அளவுக்கே மருத்துவப் பணியாளர் காலியிடங்கள் இருப்பதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தமிழ்நாடு நீடித்த வளரச்சிக்கான இலக்குகளை எட்டிய மாநிலம் என்றும் அவர் கூறினார்.
தொலைபேசியில் ஆலோசனை கேட்டு பிரசவம் பார்க்கலாமா?
தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்காக ஆலோசகர் (Mentor) என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. செவிலியர்கள் தங்களின் பணியின்போது ஏற்படும் சிக்கல்களுக்கு இவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு இந்த ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படுகிறது.
"பொதுவாக சிக்கலான பிரசவத்தை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பார்க்க மாட்டார்கள். கடைசி நேரத்தில் கர்ப்பிணி வந்ததால் வேறு வழியில்லாமல் மென்டார் மூலமாக வீடியோ கால் உதவியுடன் பிரசவம் பார்க்க செவிலியரும் உதவியாளரும் முயற்சி செய்திருக்கிறார்கள்," என்கிறார் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின்.
"சற்று முன்னரே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்திருந்தால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பார்கள்" என்கிறார் அவர்.
"கர்ப்பிணிகள் இறப்பு நேரக்கூடாது என்பதற்காக தொலைபேசி மூலமாக ஆலோசனை பெற்றுக் கொள்ளும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது. மருத்துவர்களே இல்லாத நேரத்தில் இ-சஞ்சீவினி முறையில் எல்லா வகையான மருத்துவமும் பார்க்கும் நடைமுறையும் ஆரம்ப சுகாதார நிலையில் இருக்கிறது" என்று செங்கல்பட்டு மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பரணிதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் எந்த மாதிரியான பிரசவங்களை பார்க்கக்கூடாது?
தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1,600 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர்கள் மூலமாகவே பிரசவம் பார்க்கும் நடைமுறை இருந்தாலும் சிக்கலான பிரசவங்களுக்கு வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதே வழக்கமாக இருக்கிறது. இயற்கையான, சாதாரண பிரசவங்களை மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பார்க்க வேண்டும்.
ஆனால், சம்பந்தப்பட்ட நிகழ்வில் Breech Presentation எனப்படும் குழந்தையின் கால் முதலாவதாக வரும்படியான சிக்கல் இருந்ததாக செங்கல்பட்டு மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பரணிதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"கடைசி நேரத்தில் வந்ததால் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடியாமல் அங்கேயே பிரசவம் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் முடியாததால் மதுராந்தகம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்." என்று அவர் தெரிவித்தார்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அனீமியா எனப்படும் ரத்தசோகை, ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு நடந்தவர்கள் போன்றவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்கக்கூடாது என்று அவர் கூறினார்.
ஆனால் தொடர்புடைய சம்பவத்தில் ஸ்கேனில் தலை திரும்பியிருக்கிறது என்பதை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னரே தெரிவிக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
கர்ப்பிணி பிற்பகல் 3.15 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு மருத்துவர் பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவர் தரப்பில் சுகாதார முகாமுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
"அவர் பணியில் இல்லாததாகக் கருதி அவரும், பிரசவம் பார்த்த செவிலி உதவியாளரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்." என்றார் பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம்.
ஆனால் உதவி செய்ய முயன்ற செவிலி உதவியாளர் மீது நடவடிக்கை எடுப்பது உதவி செய்ய நினைப்போருக்கு மனத்தடையை ஏற்படுத்தும் என்று செவிலியர் சங்கத்தின் சுபின் கூறுகிறார்.
என்ன தீர்வு?
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று செவிலியர் மற்றும் மருத்துவ சங்கங்கள் கோருகின்றன. செவிலியர்கள் பலர் பிரசவம் பார்த்த அனுபவம் இல்லாத நேரத்திலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன என அவை கூறுகின்றன.
"தனியார் கல்லூரிகளில் படித்து வரும் செவிலியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் பிரசவத்தில் போதிய அனுபவம் இல்லை. அவர்களுக்கு உரிய பயிற்சியளிக்க வேண்டும். இல்லை மருத்துவர்கள்தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற வகையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்" என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் கே.செந்தில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்