You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசு கோப்பு தேக்கம்: விடுதலைக்கு பின்னும் மாதக் கணக்கில் சிறைவாசம் அனுபவித்த நாகை பெண்கள்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதால் என்ன நேரும்? குற்றமற்ற ஒருவர் கூட சிறையில் இருக்க நேரும் என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு ஒன்று உணர்த்துகிறது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு, பிறகு குற்றமற்றவர்கள் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும், அவர்களின் விடுதலை தொடர்பான கோப்புகள் அரசு அலுவலகங்களில் தேங்கிவிட்டதால், 128 நாட்கள் அவர்கள் திருச்சி சிறையில் வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியபோது, அவரது விடுதலை நான்கு மாதங்களுக்கு முன்னரே உறுதியாகிவிட்டது என்பதும், அவரது விடுதலை தொடர்பான கோப்புகளை திருச்சி சிறைக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கும் தமிழ்நாடு அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அரசு அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அலட்சியப் போக்கை கடுமையாக சாடியது.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சமி(45) மற்றும் அவரது தோழி சத்யா(35) இருவரும் கடந்த ஜனவரி 2022ல் சந்தேகத்தின் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். பிறகு, மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் இந்த ஆண்டின் பெரும்பாலான காலத்தை சிறைவாசத்தில் கழித்திருக்கிறார்கள்.
"திருந்தி வாழ்கிறோம் - ஆனாலும்..."
''எங்களிடம் விசாரணை எதுவும் செய்யவில்லை. நாங்கள் மது விற்பனை செய்கிறோம் என்ற சந்தேகத்தில் கைது செய்தார்கள். நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், குடும்ப வறுமைக்காக அதில் ஈடுபட்டது உண்மைதான். அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டோம். நாங்கள் திருந்தி புதிய வாழ்க்கையை வாழ்கிறோம். எங்கள் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள், தற்போது அந்த தொழிலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஆனால் சந்தேகத்தின் பெயரில் எங்களை சிறையில் காரணமில்லமல் வைத்திருந்ததால், மீண்டும் எங்களுக்கு குடும்பத்துடன் வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது,''என முத்துலட்சுமி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தனது ஐந்து குழந்தைகள் மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்ட கணவர் மனோகர் என அனைவரும் உழைக்கும் நிலையில் இருப்பதாக கூறுகிறார் அவர். ''கட்டட வேலை, கூலி வேலைக்கு செல்கிறேன். வறுமை, கடன் என பலவற்றிற்கும் பதில் சொல்லவேண்டிய நிலையில், என்னை கைது செய்து அதோடு, காரணமின்றி சிறையில் வைத்திருந்ததால், மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்,''என்கிறார் முத்துலட்சுமி.
மார்ச் 2022ல் மிசா ஆலோசனை குழு நடத்திய விசாரணையில் தங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபணம் ஆகிவிட்டாலும், ஜூலை மாதம் வரை சிறையில் இருந்ததாக கூறுகிறார் சத்யா.
''எங்கள் வழக்கை விசாரித்த நீதிமன்ற ஆலோசனை குழு, இருவர் மீதான வழக்கில் எந்த உண்மையும் இல்லை என்பதால், மார்ச் மாதம் எங்களை விடுவிக்க உத்தரவிட்டது. அந்த நீதிமன்ற ஆணை திருச்சி சிறைக்கு அனுப்பபடவில்லை. அந்த கோப்பு வராமல் எங்களை விடுவிக்கமுடியாது என கூறி நான்கு மாதங்கள் எங்களை சிறையில் வைத்திருந்தார்கள். வீண் பழி என தெரிந்தாலும், எங்கள் உறவினர் யாரிடமும் எங்கள் நிலையை சொல்லமுடியவில்லை. குழந்தைகளை தனித்து விட்டுவந்ததுதான் எங்களை வாட்டியது,'' என்கிறார் சத்யா.
தாம் சிறையில் இருந்ததால், தமது மகள் வீட்டுவேலைக்கு சென்றதாகவும், தான் மீண்டும் கடனாளியாகிவிட்டதாகவும் கூறுகிறார் சத்யா.
''நான்கு மாதங்கள் நான் இல்லாததால், என் குழந்தைகள் தவித்துப்போனார்கள். பணம் செலவாகும் என்பதால், என்னை பார்க்கக்கூட வரவேண்டாம் என சொல்லிவிட்டேன். மீண்டும் கடன் வலையில் நான் சிக்கியிருக்கிறேன்,''என்கிறார் அவர்.
ஆட்கொணர்வு மனு
100 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததால், முத்துலட்சுமியின் கணவர் மனோகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு போட்டார். அந்த பின்ணணியில்தான், முத்துலட்சுமி மற்றும் சத்யாவின் விடுதலை குறித்த கோப்புகள் தேங்கியிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது என்கிறார் வழக்குரைஞர் கே ஏ எஸ் பிரபு.
''இரண்டு பெண்களும் நிராதிபதிகள் என நிரூபணம் ஆன பிறகும்கூட, 128 நாட்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சட்டத்திற்கு புறம்பாக அவர்களை சிறையில் வைத்திருந்ததாக கூறி அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு அவர்களுக்கு ஆறுதல் தரும்.
ஆனால் அவர்கள் சிறையில் இருந்ததால் ஏற்பட்ட மன உளச்சல், குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் அவர்களை நடத்தும் விதம் என பல சிக்கல்களை அவர்கள் சந்திக்கவேண்டும்,'' என்கிறார் பிரபு.
மேலும் அவர், ''தனிமனித சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய அரசாங்கம் என்ற அமைப்பு ஒரு நபரை தவறுதலாக சிறைப்படுத்தி, நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட அவரை சிறையில் வைத்திருந்தது மனித உரிமைக்கு எதிரானது.'' என்றார் அவர்.
அரசு என்ன சொன்னது?
தமிழக அரசின் சார்பில் வாதாடிய முகமது அலி ஜின்னா மற்றும்பாபு முத்துமீரான் ஆகியோர், ''நீதிமன்ற ஆணையை கீழ்ப்படியக் கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. முத்துலட்சுமியை விடுவிப்பது தொடர்பான கோப்புகள் மார்ச் 16ம் தேதி பெறப்பட்டன. அன்றே அந்த கோப்புகளில் உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டுவிட்டனர். அமைச்சரும் அடுத்த நாளே கையெழுத்து போட்டுவிட்டார். ஆனால் அந்த கோப்புகள் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் உள்துறைக்கு வந்திருக்கவேண்டும். அதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை,''என்றனர்.
''இரண்டு கீழ்நிலை அதிகாரிகள் அந்த கோப்புகளை வாங்காமல் விட்டுவிட்டனர். அதனால், ஜூலை 27ம் தேதிதான் அந்த கோப்புகள் வரவழைக்கப்பட்டன. தாமதத்திற்கு காரணமான இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றும் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்