குஜராத்தில் அரசு கட்டடங்களை ஆக்கிரமிக்கும் பசுக்கள் - என்ன நடந்தது?

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கால்நடை புகலிடங்களை நடத்தி வரும் லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனங்கள் வாக்களிக்கப்பட்ட அரசு உதவிகள் வழங்கபடாததை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சுதந்திரமாக நடமாட செய்துள்ளன.

அரசு கட்டடங்களில் சுதந்திரமாக நடந்து செல்லும் பசுக்களின் காணொளிகள் பலராலும் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

பசுக்களை பராமரிப்பதற்கான நிதி ஆதரவை வழங்க மறுத்தால் வரயிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

தோல் கழலை நோயின் கடும் பாதிப்பு காரணமாக கால்நடைகளின் உயிரிழப்பால் தத்தளிக்கும் பல இந்திய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாகும்.

சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கால்நடைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 5,800 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இந்தியாவில் பெரும்பான்மையாக வாழும் இந்து மதத்தினர், பசுக்களை புனிதமான உயிரினமாகக் கருதுகின்றனர். அவற்றை கொல்வது குஜராத் உள்பட 18 மாநிலங்களில் சட்டவிரோதமானது.

2017 ஆம் ஆண்டு பசுவை கொலை செய்வோருக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம் என குறிப்பிட்டு பாசு பாதுகாப்பு சட்டங்களை குஜராத் கடுமையாக்கியது.

தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால், போக்குவரத்து நெரிசல், மற்றும் தங்குமிடங்களை ஆக்கிரமிப்பது போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்திலுள்ள பசுக்களையும், வயதான கால்நடைகளையும் பராமரிக்கும் புகலிடங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூபாய் 500 கோடி, இந்த ஆண்டு மாநில வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எந்த நிதி ஆதரவும் வழங்கப்படவில்லை என்றும் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் பசு புகலிட மேலாளர்கள் கூறுகின்றனர்.

அரசிடம் பலமுறை எடுத்துக்கூறியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சுமார் 1,750 பசு புகலிடங்களில் பராமரிக்கப்படும் 4,50,000 கால்நடைகள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற உத்தர பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் இந்த நிதியுதவியை வழங்கி வருகின்றன. காங்கிரஸ் ஆளுகின்ற ராஜஸ்தானிலும் ஒரு பசுவுக்கு ரூபாய் 50 வழங்கப்படுகின்றது. குஜராத் மட்டும் ஏன் பசுக்களை பராமரிக்க ஆதரவு அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் குஜராத் கௌ சேவா சங்கத்தின் பொது செயலாளர் விபுல் மாலி. இந்த சங்கம் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு பசு புகலிடங்களை நடத்துகின்றது என்று இந்த செய்தித்தாள் தெரிவித்தது.

கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல இடங்களிலுள்ள சாலைகளிலும், உள்ளூர் நீதிமன்றங்களிலும், அரசு கட்டடங்களிலும் கால்நடைகள் நிறைந்து காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு அலுவலகம் ஒன்றில் மாட்டு மூத்திரம் மற்றும் சாணத்துடன் போராட்டக்காரர்கள் வந்திருந்தனர்.

பனஸ்கந்தா, படன் மற்றும் கட்ச் மாவட்டங்களில் இருந்து 70 போராட்டக்காரர்களை கைது செய்திருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த நிதி உதவி அளிக்க தாமதமாகி விட்டதை ஒப்புக்கொண்ட, குஜராத் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சர், ஓரிரு நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இந்த மாத இறுதிக்குள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் மேலும் விரிவாக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: