தாய் கருவில் சிசு: கேரட் சாப்பிட்டால் சிரிக்கும், கீரை சாப்பிட்டால் சுளிக்கும்

    • எழுதியவர், அஹ்மென் கவாஜா
    • பதவி, பிபிசி நியூஸ்

நீங்கள் கீரை சாப்பிடுவதற்கு முகம் சுளிப்பீர்களா? இது உங்களுக்கு மட்டும் தோன்றும் விஷயமல்ல, கருப்பையில் உள்ள சிசுவுக்கும் அப்படி தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தாய்மார்கள் கேரட்டைச் சாப்பிட்ட பிறகு, கருப்பையில் இருக்கும் சிசு புன்னகைப்பது போலவும், அதுவே கீரை சாப்பிட்ட பிறகு, முகம் சுளிப்பதைப் போலவும் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள நியோனேட்டல் ரிசர்ச் லேப் (பிறந்த குழந்தைகளுக்கான ஆராய்ச்சி ஆய்வகம்), வயிற்றில் உள்ள சிசு வெவ்வேறு சுவைகளுக்கு எதிர்வினையாற்றுவதை பதிவு செய்த முதல் ஆதாரம் இது என்று கூறுகிறது.

இங்கிலாந்தில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்கள் வயிற்றில் இருக்கும் சிசுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

அவர்கள் 35 பெண்களுக்கு கேரட் தூள் கொண்ட மாத்திரைகளையும், மற்ற 34 பெண்களுக்கு கீரை தூள் கொண்ட மாத்திரைகளையும் வழங்கினர். மீதமுள்ள 30 பெண்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை.

4டிமூலம் கண்டறிந்த முடிவுகள்

தாய்மார்கள் இந்த மாத்திரைகளை சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களில், பெரும்பாலான சிசுக்கள் கீரை சாப்பிடும்போது முகம் சுளிப்பதும், கேரட் சாப்பிடும்போது சிரிப்பதுமாகக் காணப்பட்டன என்று 'சைக்காலஜிகல் சயின்ஸ்' ஆய்விதழில் இந்த குழு தெரிவித்துள்ளது.

எதுவும் சாப்பிடாத 30 கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ள சிசுகள் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தவில்லை.

கர்ப்பிணிப் பெண்ணின் உணவைப் பொறுத்து, கருவைச் சுற்றியுள்ள அம்னோடிக் திரவம் வெவ்வேறு சுவைகளைக் கொண்டிருக்கலாம் என்பதால், பிறப்பதற்கு முன்பே உணவு பற்றிய விருப்பத்தேர்வுகள் சிசுவுக்கு ஏற்படலாம் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் இந்த புதிய ஆய்வு, வயிற்றில் இருக்கும் சிசுக்கள் வெவ்வேறு சுவைகளுக்கு பதில் வினையாற்றும் விதத்தை நேரடியாகப் பார்ப்பது இதுவே முதல்முறை என்று கூறுகிறது.

ஒரு கரு எப்போது புதிய உணவை சுவைக்க தொடங்குகிறது?

"தாயின் உணவின் மூலம் ஒரு கரு என்ன ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன என்பதையும், அவை சிசுவின் பிற்கால ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதையும் முந்தைய ஆராய்ச்சியிலிருந்து நாங்கள் அறிவோம். ஆனால் அது உண்மையில் எப்போது தொடங்குகிறது என்பது எங்களுக்குத் தெரியாது," என்கிறார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஃபேடல் அண்ட் நியோனேடல் ரிசர்ச் லேப் ஆய்வகத்தின் தலைவரும், இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவில் ஒருவருமான நட்ஜா ரெய்ஸ்லேண்ட்.

"கருப்பையில் உள்ள சிசுக்கள், கருவுற்ற 14 வாரங்களில் சர்க்கரையின் மீது தங்கள் விருப்பத்தை காட்டுகிறார்கள்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"எங்கள் பரிசோதனைக்காக, 32 மற்றும் 36 வார கர்ப்பகாலத்தில் சிசுக்களுக்கு தூள் மாத்திரைகளை வழங்கினோம்."

"நாங்கள் எங்கள் ஆராய்ச்சியைத் தொடர விரும்புகிறோம். பிறந்த பிறகு இந்த சிசுக்களின் தரவைப் பதிவுசெய்ய விரும்புகிறோம். மேலும் அவர்கள் கேரட்டிற்கும், கீரைக்கும் கருவில் இருந்ததைப் போலவே தங்கள் உணர்வுகளை காட்டுக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க விரும்புகிறோம்." என்றார்.

"இந்த சிசுக்கள் பிறந்த பிறகு அவர்கள் பச்சை காய்கறிகளை உண்ண பழகுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆகவே பச்சை காய்கறிகளை சாப்பிடுவது இந்த ஆய்வுக்கு ஏற்றது என்று நினைத்தோம்."

குழந்தைகளின் சுவை வளர்ச்சி பற்றி இந்த சோதனை நமக்கு உணர்த்தும் விஷயம் என்ன?

ரெய்ஸ்லேண்ட் கூறுகையில், அவர்களுக்கு சுவை என்பது மிக ஆரம்பகாலத்தில் உருவாகிறது. மேலும் அவர்களை சுற்றுள்ள உணவு பண்பாட்டுத்தன்மையைப் பொறுத்தது.

"கருவுக்கு தாயிடமிருந்து அந்த உணவு கிடைத்ததும், பிறந்த பிறகு அவர்கள் அந்த உணவுக்கு பழக்கப்பட்டு, அந்த உணவை தொடர்ந்து சாப்பிடுவார்கள்."

கசப்பான சுவை எதை குறிக்கிறது?

கருக்கள் கசப்பான சுவைகளை நிராகரிப்பதற்கான மற்றொரு காரணத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"நாம் கசப்பான சுவையை ஆபத்தோடு தொடர்புபடுத்தி, அதற்கேற்ப செயல்படுகிறோம். ஆனால் எல்லா கசப்புகளும் நச்சைக் குறிப்பதில்லை என்பதால், இந்த எதிர்வினையை சமாளிக்க நமக்கும் நம் குழந்தைகளுக்கும் நாம் கற்பிக்க வேண்டும். சில கசப்பான உணவுகள் ஆரோக்கியமானவை," என்கிறார் அவர்.

இருப்பினும், அல்ட்ராசவுண்ட் புகைப்படங்கள் கசப்பான ஒன்றை ருசிக்கும் பெரியவரின் எதிர்வினையைப் போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுக்கின்றன. வயிற்றில் இருக்கும் கரு, உண்மையில் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துமா என்பது இன்னும் தெரியவில்லை.

அல்ட்ராசவுண்ட் படங்களில் காணப்படும் உணர்வுகள், "கசப்பான சுவைக்கு எதிர்வினையாற்றும் தசை அசைவுகளாக இருக்கலாம்" என்று ரெய்ஸ்லேண்ட் கூறுகிறார்.

எப்படி இருந்தாலும், கருக்கள் முகபாவனைகளை வெளிப்படுத்தும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

இதுகுறித்து மற்ற விஞ்ஞானிகள் என்ன நினைக்கிறார்கள்?

அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நியோனாட்டாலஜியின் (Northwestern University Feinberg School of Medicine in the US) இணைப் பேராசிரியரான டாக்டர். டேனியல் ராபின்சன் இந்த ஆய்வில் ஈடுபடவில்லை.

கருக்கள் மகிழ்ச்சியையும், வெறுப்பையும் காட்டுவதாக இந்த அல்ட்ராசவுண்ட் புகைப்படங்களை பற்றி பொதுமக்களுக்கு விளக்கக் கூடாது என்று அவர் நிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பிலடெல்பியாவைச் சேர்ந்த மோனெல் கெமிக்கல் சென்ஸ் சென்டரைச் சேர்ந்த டாக்டர் ஜூலி மென்னெல்லாவும் இந்த ஆய்வில் ஈடுபடவில்லை. ஆனால் இந்த துறையில் நிபுணர்.

அம்னோடிக் திரவத்தில் உள்ள உணவு சுவைகள் மூலம் கருக்கள் தங்கள் தாயின் உணவைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள் என்று முந்தைய கண்டுபிடிப்புகளை இந்த ஆய்வு ஆதரிக்கிறது என்று அவர் கூறியதாக கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் & மேரி கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் கேத்தரின் ஃபாரெஸ்டெல்லின் கூறியதையும் இந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. ஒரு கரு தனது தாய் சாப்பிடுவதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பது பற்றிய எதிர்கால ஆராய்ச்சிக்கு இது உதவும் என்கிறார் அவர்.

உணவை தேர்வு செய்யும் பழக்கம்

"குழந்தைகள் கருப்பையில் சுவை மற்றும் வாசனையை உணர முடியும் என்று பல ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. ஆனால் அவை பிரசவத்திற்குப் பிந்தைய விளைவுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், பிறப்பதற்கு முன்பே இந்த எதிர்வினைகளை முதலில் பார்த்த ஆய்வு எங்களுடையது," என்று ஆராய்ச்சியை வழிநடத்திய பெய்சா உஸ்துன் கூறுகிறார்.

"பிறப்பதற்கு முன் சுவைகளை மீண்டும் மீண்டும் பழக்குவது, பிறப்புக்குப் பிந்தைய உணவு விருப்பங்களை தேர்வு செய்ய உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம், ஆரோக்கியமான உணவு பற்றி சிந்திக்கும்போது இது முக்கியமானதாக இருக்கும்." என்கிறார்.

ஆதனால், நடைமுறையில், குழந்தைகள் தங்கள் உணவை தேர்வு செய்யும் பழக்கத்தை பற்றி பெற்றோர்கள் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவ முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: