You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி பெண் கம்போடியாவில் அனுபவித்த கொடுமைகள் - வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி
கம்போடியாவில் சட்டவிரோத வேலைக்காக கட்டாயப்படுத்தப்பட்ட இளம் பெண் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளார். அந்த பெண்ணை விற்ற கும்பலுக்கு உதவியதாக உள்ளூர் முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
கம்போடியா நாட்டில் மாதம் ரூபாய் ஒரு லட்சம் சம்பளத்தில் டெலிகாலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்த இளம் பெண் ஏமாற்றப்பட்டுள்ளார். அவரை வேலைக்கு அனுப்பி அந்த கும்பல், அங்கு அவரை சட்டவிரோத வேலையில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், வேலை செய்ய மறுத்தால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அவரை விற்று விடுவதாகவும் மிரட்டி அந்த பெண்ணை அடித்து சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாழும் அந்த பெண் திருமணமானவர். 27 வயதாகும் அவர் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடி வந்துள்ளார். உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் கம்போடியா நாட்டில் ரூபாய் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வரவே அதற்கு விண்ணப்பித்திருக்கிறார் அந்த பெண்.
அதன்பேரில் டெலிகாலர் வேலைக்காக கம்போடியா நாட்டுக்கு அழைத்துச் அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சென்ற அவர் சட்டவிரோத வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கம்போடியாவில் இருந்த இந்தியர்கள் உதவியுடன் தப்பித்து இந்தியா திரும்பியிருக்கிறார் அந்த பெண்.
தற்போது புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநர் மனோஜ் குமார் லாலை சந்தித்து அந்த பெண் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சிபிசிஐடி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையில் விசாரணை நடத்தினார். அந்த பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப உதவியதாக புதுச்சேரியை சேர்ந்த முகவர் முருகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரூ 3.50 லட்சத்துக்கு பெண் விற்பனை
இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி சிபிசிஐடி காவல் ஆய்வாளர் டி.சுரேஷ்பாபுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை செய்தோம். கடந்த ஜூலை 1ஆம் தேதி புதுச்சேரியில் ஒளிபரப்பாகும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் கம்போடியா நாட்டில் டெலிகாலர் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு மாதம் சம்பளம் ரூ.1 லட்சம் என்றும் விளம்பரம் வெளியானது. அந்த விளம்பரத்தில் முருகன் என்பவரின் கைப்பேசி எண் இருந்துள்ளது," என்று கூறினார்.
"அந்த தொலைபேசி எண் மூலம் முருகனை தொடர்பு கொண்ட பெண்ணிடம் அவருக்கு கம்போடியாவில் டெலிகாலர் (Telecaller) வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளார். பிறகு சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியுடன் விசா உள்பட கமிஷன் தொகை ரூ.4 லட்சம் பேரம் பேசி, ரூ3.25 லட்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர். அந்தத் தொகையை அந்த பெண் முருகனிடம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது," என்கிறார் ஆய்வாளர் சுரேஷ் பாபு.
"பாதிக்கப்பட்ட பெண்ணை கம்போடியா நாட்டுக்கு சுற்றுலா விசாவில் (Tourist Visa) அனுப்பி, அங்கு ஒரு நிறுவனத்தில் டெலிகாலர் வேலைக்கு பதிலாக சட்டத்திற்கு புறம்பாக ஊழல் (Scam) வேலையில் ஈடுபட சொல்லியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுத்ததால் ஜான் என்பவரும் அந்த நிறுவனத்தின் மேலாளரான அட்டிடோவும் சேர்ந்து மேற்படி பெண்ணை அமேரிக்கா டாலர் மதிப்பில் $3500 (ரூ.2,76,500/-) விலைகொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர். தாங்கள் சொல்லும் ஊழல் (scam) வேலையை செய்யவில்லை என்றால் பாலியல் தொழிலில் ஈடுபடும் வகையில் விலைக்கு விற்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். ஒரு இடத்தில் அடைத்து வைத்து அடித்தும், எலக்ட்ரிக் ஷாக் வைத்தும் அந்த பெண்ணை துன்புறுத்தியுள்ளனர்."
"மேலும், இவரையும் இவரது கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பிறகு அங்கிருந்த வேறு இந்தியர்கள் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்துள்ளார்," என்று சிபிசிஐடி ஆய்வாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
கம்போடியாவில் இருந்து தப்பியது எப்படி?
"கம்போடியாவில் இருந்து அந்த பெண்ணை தாயகத்துக்கு அனுப்பி வைக்க சில இந்தியர்கள் பண உதவி செய்துள்ளனர். அந்த பெண்ணை அடைத்து வைத்து மிரட்டிய முகவர்களிடம், அந்த பெண்ணை விலை கொடுத்து வாங்கியதாக கூறப்படுவோரிடம் பணத்தை கொடுத்த பிறகே அவரை விடுவித்துள்ளனர். அதன் பேரிலேயே அந்த பெண் பாதுகாப்பாக புதுச்சேரி வந்தடைந்தார்," என்கிறார் ஆய்வாளர் சுரேஷ்பாபு.
இந்த நிலையில், போலீஸார் தனிப்படை அமைத்து புதுச்சேரியைச் சேர்ந்த முருகன் என்ற முகவரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். அவருக்கு உதவியதாக சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்ய சென்னையில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கம்போடியா நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்டவிரோதமாக வேலையில் ஈடுபடவும் அவரை கொடுமைப்படுத்தியதாகவும் அந்த நாட்டில் இருக்கும் ஜான் மற்றும் அட்டிடோ கைது செய்ய ம் சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியில் இது போன்று யாராவது வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக கூறினால் அந்த விவரத்தை, இங்குள்ள தூதரகம் மூலம் உறுதிப்படுத்திய பிறகே அடுத்தகட்ட முயற்சியை மேற்கொள்ளும் சிபிசிஐடி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்