You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்ப்பிணி பெண்மீது டிராக்டர் ஏற்றி கொலை என புகார்; ஜார்க்கண்டில் கடன் வசூல் முகவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததால் கர்ப்பிணி பெண் ஒருவர், கடனை வசூலிக்கும் முகவரால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டதாக ஜார்க்கண்ட் மாநில ஹசாரிபாக் மாவட்டம் இச்சாக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சாக் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு மாற்றுத்திறனாளி விவசாயியின் மகள் என்பதோடு அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் ரத்தன் சோத்தே ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் "நிதி நிறுவன உதவியுடன் வாங்கப்பட்ட டிராக்டரை மீட்க, விவசாயி வீட்டிற்கு அந்த முகவர் சென்றபோது, நிதி நிறுவன முகவருக்கும் விவசாயிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் முடிவில்தான் விவசாயியின் மகள் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி நசுங்கி உயிரிழந்துள்ளார்" என்று தெரிவித்தார்.
மேலும், "இந்த விவகாரம் தொடர்பாக கடன் மீட்பு முகவர், தனியார் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கூறுகையில், "மஹிந்திரா நிதி நிறுவன அதிகாரிகள், எந்த தகவலும் கொடுக்காமல் அவர்கள் வீட்டிற்கு வந்தனர்" என்றார்.
"வாக்குவாதத்தில் அவள் டிராக்டருக்கு முன்னால் வந்தாள். வாக்குவாதம் முற்றி, அவர்கள் அவள் மீது டிராக்டர் ஏற்றினர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்," என்று அவர் கூறினார்.
உள்ளூர் போலீஸ் என்ன சொல்கிறது?
டிராக்டரை மீட்டெடுப்பதற்காக பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை என்றும் ஹசாரிபாக்கின் உள்ளூர் போலீசார் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா, "நிறுவனம் இதன் அனைத்து அம்சங்களையும் விசாரிக்கும்" என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், "ஹசாரிபாக் சம்பவத்தால் நாங்கள் மிகுந்த வருத்தமும் கலக்கமும் அடைந்துள்ளோம். ஒரு சோகமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. தற்போதுள்ள (கடன் கொடுக்கும் நிறுவனம் மற்றும் வாங்கியவருடன் தொடர்பில்லாத) மூன்றாம் நபர் வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையை நாங்கள் மீளாய்வு செய்வோம்" என்றும் அனிஷ் ஷா தன் அறிக்கையில் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கின் விசாரணைக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்