பாஜக பிரமுகர் மீது புகார்: "சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய வைத்து பணிப்பெண்ணை சித்ரவதை செய்தார்"

(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (01/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)

வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு ஆண்டுகளாக சித்ரவதை செய்துவந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக பிரமுகரை அந்தக் கட்சி இடைநீக்கம் செய்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்துவந்ததாக புகார் எழுந்துள்ளது. சூடான பாத்திரங்களை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் பணிப்பெண்ணை சீமா பத்ரா தாக்கியுள்ளார். இரும்பு கம்பியால் அவர் தாக்கியதில் சுனிதாவின் பற்கள் உடைந்துள்ளன.

சுனிதா தற்செயலாக வீட்டுக்கு வெளியே செல்ல நேர்ந்தால், அவர் சிறுநீரை வாயால் சுத்தம் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அந்த அளவுக்கு சுனிதா கொடுமைகளை எதிர்கொண்டுள்ளார்.

உணவு, தண்ணீர் இல்லாமல் அறையில் அடைக்கப்பட்ட நிலையில் சுனிதா மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடல் நிலை மிக மோசமாக இருந்தது. இதையடுத்து, சுனிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சீமாவின் மகன் ஆயுஷ்மான் ஜார்க்கண்ட் அரசாங்கத்தில் பணியாளர் துறை அதிகாரியாக இருக்கும் அவரது நண்பர் விவேக் பாஸ்கி என்பவரிடம் தன் வீட்டில் நடந்தவை குறித்து தெரிவிக்க இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது. இப்போது சீமா மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறது அந்தச் செய்தி.

இந்தியாவில் இணையவழி குற்றங்கள் 5 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக 'தினமணி' செய்தி தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

2020-ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 035 ஆக இருந்த இணையவழிக் குற்றம் தொடா்பான புகார்கள், 2021-ஆம் ஆண்டில் 52 ஆயிரத்து 974ஆக அதிகரித்தது.

இது தொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2021-ஆம் ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அசாம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன.

பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீா்வு காண முடிகிறது.

இணையவழிக் குற்றங்களில் 60.8 சதவீதம் நிதி மோசடிகள் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பானவை. இதற்கு அடுத்து 8.6 சதவீதம் பாலியல் ரீதியான இணையவழிக் குற்றங்கள் ஆகும். 5.4 சதவீதம் மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற குற்றங்கள் ஆகும்.

தெலங்கானாவில் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 303 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இந்தி தெரிந்தவர்கள் தான் வர வேண்டும் என்றால் தேர்தல் மூலம் வரட்டும்: சசிதரூர்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இந்தி தெரிந்தவர்தான் வரவேண்டும் என்றால் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக வரட்டும் என்று சசிதரூர் எம்.பி. கூறியுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரை தேர்வு செய்ய இந்த மாத இறுதியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யான சசிதரூர் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 31) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிதரூர் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இன்னும் நாட்கள் இருக்கின்றன. அது தொடர்பாக ஒரு நிலையான முடிவு எடுக்கப்படும். ஜனநாயக நாட்டில் கட்சியின் தலைவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்வது நல்ல செயல் திட்டம்.

கட்சியில் ஓட்டுரிமை பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களித்து தலைவரை தேர்வு செய்யட்டும். இந்தி தெரிந்தவர்கள் தான் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்றால், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெற்று தலைவராக வரட்டும்." என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: