சென்னை பரந்தூர் விமான நிலையம்: தொடரும் போராட்டங்களும் வலுவடையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதல், அதற்கு ஆதரவுக் குரல்களும் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கானப் பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விமான நிலையத் திட்டத்திற்காக 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு வழங்குவதாக மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ம் தேதியன்று கிராம சபைக் கூட்டத்தில் திட்டத்திற்கு எதிராக இந்த 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, விமான நிலையத் திட்டம் குறித்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த பொது கருத்துக் கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ..அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம். எல்.ஏ கே.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கடந்த சில நாட்களாக, இந்த விமான நிலையம் கட்டுவதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை ஒட்டி, காவல்துறையினர் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகம் மக்கள் கூடுவதை தடுக்க, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல், 30 (II) காவல் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில், முக்கிய விழாக்கள், பண்டிகைகள், அரசியல், சாதி மற்றும் மத தலைவர்களின் பிறந்த நாட்கள், நினைவு நாட்கள் வரவுள்ளதால் மக்கள் பெருமளவில் கூட வாய்ப்புள்ளதால் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாமக சார்பில், 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் கோரிக்கையை அரசிடம் கலந்து பேசி தீர்வு காணுவதற்காக 7 பேர் கொண்ட குழுவை அமைத்ததாக அக்கட்சி அறிக்கை விடுத்தது. இத்திட்டத்திற்கு எதிராக பரந்தூரில் கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏற்கனவே சென்னையில் விமான நிலையம் உள்ள நிலையில், இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இத்திட்டத்திற்கு ஏன் எதிர்ப்பு?

இந்த விமான நிலையம் கட்டுவதற்கான இடமான பரந்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தற்போதுள்ள விமான நிலையத்திலிருந்து 53 கி.மீ தொலைவில் உள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் அந்த அறிக்கையின்படி, விமான நிலையம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் 4,791 ஏக்கருக்கு மேல். அதில், 2605 ஏக்கர்கள் நஞ்சை நிலமாக உள்ளது. இது இரண்டு ஓடுபாதையை அமைக்க ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், பரந்தூர், வளந்தூர், கொடவூர், ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களை உள்ளடக்கியது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனர். அவர்கள் இங்குள்ள வளமான நீர்நிலை வசதிகள் வேறு எங்கு இல்லை என்றும், இப்பகுதியில் விமான நிலையம் கட்டக்கூடாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதே கருத்துகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி, அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சேலம்-சென்னை விரைவுச் சாலைத் திட்டமான 8 வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த பன்னியப்பன் மற்றும் குணசேகரன் தர்மராஜா ஆகிய இருவரும், விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி மக்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் இருவரை காஞ்சிபுரம் காவல்துறை கைது செய்து விடுவித்தது.

மேலும், சில கட்சிகளும் கிராம மக்களும் இதற்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: