தமிழ்நாடு கோவில்களில் வைக்கப்பட்ட போலிச் சிலைகள்: ஜோடி சிலைகளை பிரித்து அமெரிக்கா அனுப்பியது எப்படி?

சிலைகள்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிலைகளை திருடிய சிலை திருட்டு கும்பல், போலிச் சிலைகளை நிறுவியுள்ளது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடத்திய சிலைகளில் துணைவர், துணைவி சிலைகளை பிரித்து வெளிநாடுகளில் விற்றுவிட்டதால், கடவுளர்களின் துணைவியார், துணைவர் சிலைகளை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரே கோவிலை சேர்ந்த மூன்று பழங்கால சிலைகளில் இணையர்களை பிரித்து, அமெரிக்காவில் உள்ள கலை அருங்காட்சியகம் மற்றும் கலை பொருட்களுக்கான ஏல கூடத்தில் விற்றுள்ள சிலை திருட்டு கும்பல், அதற்காக போலிச் சிலைகளை நிறுவியுள்ளதை கண்டறிந்துள்ளனர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்.

கடந்த ஓராண்டில் மட்டும் பத்து சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டுள்ளதாகவும், பிரிக்கப்பட்டுள்ள துணைவர், துணைவி சிலைகளை மீட்க வெளிநாட்டு அருங்காட்சியகங்களிடம் தகவல்களை பெற்றுவருவதாகவும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

போலி சிலைகளும் உண்மையான சிலைகளும் எங்குள்ளன?

தற்போது தேடப்பட்டுவரும் பட்டியலில் உள்ள ஒரே கோவிலை சேர்ந்த மூன்று சிலைகள் அமெரிக்காவில் இருப்பது உறுதியாகியுள்ளது. கும்பகோணத்தில் உள்ள சௌந்தர ராஜ பெருமாள் கோயிலை சேர்ந்த உண்மையான கலிங்க நர்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய கடவுள்களின் சிலைகளுக்கு பதிலாக போலிச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

சிலை

பட மூலாதாரம், HIGH COMMISSIONER OF INDIA, UK

மூன்று சிலைகளும் பிரிக்கப்பட்டு, அமெரிக்காவில் மூன்று இடங்களில் உள்ளன. கலிங்கநர்த்தன கிருஷ்ணன் சிலை சான் பிரான்சிகோவில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. அதே கோவிலின் விஷ்ணு சிலை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிம்பெல் கலை அருங்ககாட்சியத்திலும், அந்த விஷ்ணுவின் ஸ்ரீதேவி சிலை பிளோரிடாவில் உள்ள ஹில் கேலரி என்ற ஏலக்கூடத்திலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல 1982ல் காணாமல் போன கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவிலிருந்து 2019ல் மீட்கப்பட்டபோதும், அவரது இணையரான சிவகாமி தேவி சிலை தற்போது வரை கிடைக்கப்பெறவில்லை. அதேபோல, சமயநல்லூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலை சேர்ந்த பூதேவி சிலை மட்டும் மீட்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்திருக்க வேண்டிய பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி சிலை பற்றிய தீவிரத் தேடலில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து மட்டும் இதுவரை 15 மில்லியன் டாலர் மதிப்புள்ள 248 பழங்கால சிலை மற்றும் கலைப் பொருட்கள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நாளேடான தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிலைதிருட்டு வழக்குகள் எப்போது சூடுபிடித்த?

அரியலூர் மாவட்டத்தில் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோயிலில் இருந்த 18 சிலைகள் மற்றும் விக்கிரமங்கலத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்த எட்டு சிலைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கு 2008ல் பதிவானது.

இந்த வழக்கில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபாஷ் கபூரை 2011ல் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர் வெளிநாடுகளில் இருந்ததால், தேடுதல் தொடங்கியது. முடிவில் ஜெர்மனியில் அவரை கண்டறிந்து, அவரை 2012ல் தமிழகத்திற்கு கொண்டுவந்தது சிலை கடத்தல் தடுப்பு காவல்துறை. அவரது கைதுக்கு பிறகு சிலை கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் பதிவாகின, கவனமும் பெற்றன.

கிருஷ்ணா சிலை

தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி ஆக இருந்த பொன்மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்த வழக்குகளில் விசாரணையை நடத்தி, சுபாஷ் கபூரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

அவருடன் கைதான மாரிச்சாமி, சஞ்சீவி அசோகன், தீனதயாளன், பிச்சைமணி உள்ளிட்டவர்களிடம் பெற்ற தகவலின் பேரில் பல கோவில்களில் சிலை திருடப்பட்டது தொடர்பான தகவல்கள் கிடைத்ததாக காவல்துறை தெரிவிக்கின்றது. தொடர்ந்து ஆயிரக் கணக்கான உலோகம், மரம் மற்றும் கற்சிலைகள் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட செய்திகள் வெளியாகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 338 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 94 வழக்குகளில், 245 பேர் கைதாகியுள்ளனர்.

திருடப்பட்ட சிலைகளுக்கு ஆதாரம் கிடைத்தது எப்படி?

பல கோவில்களில் போலிச் சிலைகள் நிறுவப்பட்டதால், கோவிலுக்கு வருபவர்களுக்கு அங்குள்ள சிலைகளில் சந்தேகம் ஏற்படும் வாய்ப்பு குறைவு.

பல கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் தொடர்பான வழக்குகளில் பல ஆண்டுகளுக்கு பின்னர் பதிவாகும் நிலையும் இருந்தது. ஆனால் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற ஆய்வு நிறுவனத்தில் உள்ள பழங்கால புகைப்பட சேகரிப்பில் தமிழகத்தில் உள்ள பழமையான உண்மையான சிலைகள் தொடர்பான ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருப்பதை அறிந்த சிலை கடத்தல் தடுப்பு காவல்துறை, அந்த புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு வழக்குகளை நடத்துகிறது.

அருங்காட்சியங்களில் உள்ள சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கை தொடங்குகிறது. பிற நாடுகளில் அருங்காட்சியங்களில் உள்ள சிலைகளுடன், காணாமல் போன சிலைகள் பற்றிய புகார்களில் சொல்லப்படும் சிலையின் அம்சங்களை கொண்டு, புகைப்படங்களின் உதவியுடன் பல சிலைகள் எங்குள்ளன என்ற தகவல்களை காவல்துறை பெறுகிறது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி
படக்குறிப்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி

அதேசமயம், 2013ல் சிங்கப்பூரில் பணியாற்றும் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் அனுராக் சக்சேனா ஆகியோர், இந்தியா பிரைட் திட்டம் (India Pride Project) என்ற டிஜிட்டல் திட்டத்தை தொடங்குகிறார்கள்.

தன்னார்வலர்களைக் கொண்ட இந்த திட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள ஆர்வலர்கள், அருங்காட்சியங்களில் உள்ள சிலைகள் எந்த கோவிலை சேர்ந்தவை என்ற தகவல்களை சேகரிக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து வந்தவர்கள், திருடப்பட்ட சிலைகள் கோவில்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்ற பிரசாரத்தை தொடங்குகிறார்கள்.

பலகட்ட முயற்சிகளுக்கு பின்னர், திருடப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுகிறார்கள். ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, திருடப்பட்ட சிலைகளை கோவில்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்ற பிரசாரத்தின் வாயிலாக பல சிலைகள் தற்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ளன.

முதல் சிலை எப்போது இந்தியா வந்தது?

2011ல் இருந்து சிலை திருட்டு வழக்குகள் பரபரப்பாக பேசப்பட்டாலும், உலகம் முழுவதும் பல அருங்காட்சியங்களில் இருந்த சிலைகள் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல்கள் நீடித்தன. அருங்காட்சியங்களில் தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாகவும், ஒரு சில அருங்காட்சியங்களில் சர்ச்சைக்குரிய சிலைகளின் படங்களை வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும், காவல்துறை மற்றும் கலை ஆர்வலர்கள் தொடர் முயற்சியால், 2014ல் அரியலூர் ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அரசு இந்தியாவிடம் திருப்பியளித்தது.

ஸ்ரீதேவி சிலை
படக்குறிப்பு, ஸ்ரீதேவி சிலை

900 ஆண்டுகள் பழமையான நடராஜரின் சிலை, அரியலூரில் இருந்து 2006ல் திருடப்பட்டு, அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா நகரத்தில் தேசிய அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டதாகும். சர்வதேச சந்தையில் இந்த சிலையின் மதிப்பு ரூ. 31கோடி என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல சிலைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. பல சிலைகளை தேடும் பணியும் தொடர்கிறது.

சிலை கடத்தல் வழக்குகளின் நிலை என்ன?

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பணியாற்றிய ஆண்டுகளில், 1,000க்கும் மேற்பட்ட சிலைகள், கலைப்பொருட்களை மீட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற பின்னரும், ஒரு வருடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஓய்வு பெற்ற அவர், சிலை மீட்பு தொடர்பான விவரங்களை முறையாக வழங்கவில்லை என்றும் உடன் பணியாற்றிய அதிகாரி மீது பொய் வழக்கு போட்டதாக எழுந்த புகார் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில மாதங்களில் விசாரணைக்கு வந்தது. அதில், சிலைகடத்தல் வழக்கு விவரங்களில் வெளிநாட்டு தொடர்புகள், சர்வதேச வலைப்பின்னல் உள்ளதால், பொன். மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல கோவில்களில் சிலைகளை திருடியதாக 2012ல் கைதான சுபாஷ் கபூர் தற்போது திருச்சி மத்திய சிறையில் இருக்கிறார். அவர் தன்மீதான குற்றசாட்டுகளை மறுத்துவருகிறார்.

காணொளிக் குறிப்பு, வேகமாக உருகப் போகும் 'அழிவுநாள்' பனிப்பாறை: கடல் மட்டம் எவ்வளவு உயரும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :