திருச்செந்துறை கிராமம் வக்ஃப் வாரிய சொத்தா? குழப்பத்தில் மக்கள், என்ன நடந்தது?

திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தனக்குச் சொந்தமானது என்று கூறியிருப்பதால், அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களுடைய வீடுகளை விற்கவோ முறைப்படி கிரயப்பதிவு செய்யவோ முடியாத நிலை காணப்படுகிறது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் என்பது வக்ஃப் சட்டம் 1954இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வ அமைப்பாகும். இது வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கிறது.
இந்த நிலையில் திருச்செந்துறை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் என்பவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை (1 ஏக்கர் 2 சென்ட்) ராஜராஜேஸ்வரி என்பவருக்கு விற்க முடிவெடுத்தார். இதற்காக கிரயப் பத்திரத்தை பதிவு செய்ய திருச்சியில் உள்ள மூன்றாம் துணைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றார்.
அப்போது அந்த நிலம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்பதால் அதை பதிவு செய்ய முடியாது என்று துணைப் பதிவாளர் கூறியிருக்கிறார்.
"நிலத்தை விற்க வேண்டும் என்றால், சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில், 'ஆட்சேபனை இல்லா சான்றிதழ்' பெற வேண்டும்," என்றும் ராஜகோபாலிடம் கூறப்பட்டுள்ளது.
திருச்செந்துறை கிராமம் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஓர் அழகான விவசாய கிராமம். அங்கு பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோவில் இங்கே அமைந்துள்ளது.
இதையடுத்து நடந்த விஷயம் குறித்து திருச்செந்துறை கிராம மக்களிடம் ராஜகோபால் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் உள்ளூர் பாஜக பிரமுகரான அல்லூர் பிரகாஷ் பேசினார். "அந்த காலத்தில் ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், வக்ஃப் வாரியத்திற்கு செப்பு பட்டயத்தில் எழுதி இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் 'இனாம் கிராமம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். திருச்செந்துறை கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் 369 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்தமானது. பின்னர் எப்படி இந்தக் கோவில் நிலமும் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமாகும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.


வக்ஃப் வாரியத்துக்கும் திருச்செந்துறை கிராமத்துக்கும் என்ன உறவு?

என்ன சொல்கிறார் துணைப்பதிவாளர்?
ராஜகோபால் 1992இல் வாங்கிய நிலத்தை விற்க வக்ஃப் வாரியத்திடம் ஏன் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று துணைப் பதிவாளர் முரளியிடம் கேட்டோம்.
"அந்த கிராமம் முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என்றும் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், தங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றும் வக்ஃப் வாரியம் ஆவணங்களுடன் பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பான 250 பக்கங்கள் கொண்ட வக்ஃப் வாரிய கடிதத்தின் நகல் எங்களிடம் காட்டப்பட்டது. அந்த கடிதத்தில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தங்களுடையது என்று வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது," என்று துணைப் பதிவாளர் முரளி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக வக்ஃப் வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லாவிடம் கேட்டோம்.
1954 அரசிதழ் ஆய்வின்படி, ராணி மங்கம்மாள், பாண்டிய மன்னர்கள் உட்பட மன்னர்கள், வக்ஃப் வாரியத்திற்கு இனாமாக இந்த ஊர் கிராமங்களை வழங்கியுள்ளனர். இது குறித்த செப்பு பட்டயம் இருக்கிறது. அதில் இந்த இடம் 'இனாம் கிராமம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தங்களுக்குரிய நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம்," என்று ரபியுல்லா கூறினார்.
பாஜக தலையீடு

இந்த நிலையில், திருச்செந்துறை கிராம சொத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு பொதுமக்களும் பாஜகவினரும் கொண்டு செல்ல திட்டமிட்டனர். மேலும், அவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன் தலைமையில், திருச்செந்துறை கிராம மக்களுக்கும், வக்ஃப் வாரிய அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன் முடிவில், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்களுடைய சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்கலாம் என்று ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, தங்களுடைய போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில், திருச்செந்துறை சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஊர் மக்களை சந்தித்து கிராமத்தின் இடங்கள் தொடர்பான வக்ஃப் வாரிய நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, "திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம் என அந்த வாரியத் தலைவர் அறிவித்திருப்பது சட்ட விரோதம். திருச்செந்துறை, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்துக்களின் பெயரில் உள்ள சொத்துக்களை வக்ஃப் வாரியம் அபகரிக்கப் பார்க்கிறது. இத்தகைய மோசடியில் ஈடுபடும் வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரியை (CEO) உடனடியாக கைது செய்ய வேண்டும்," என்று கூறினார்.

"இந்து மத கோவில்களையும், சொத்துக்களையும் அரசுடமையாக்கி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழக அரசு வைத்துள்ளது," என்றும் ஹெச். ராஜா கூறினார்.
அமைச்சர் பதில்

இதற்கிடையே, திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், 24 கிராமங்களுக்கும் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. நேற்றே பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













