கோவையில் தந்தை பெரியார் உணவகம் மீது தாக்குதல், இந்து முன்னணியினர் கைது

கோவை மாவட்டம் காரமடை அருகே தந்தை பெரியார் உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ள இந்து முன்னணியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?
கோவை மாவட்டம் காரமடை அருகே கன்னார்பாளையம் என்கிற பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்கிற பெயரில் உணவகம் ஒன்று திறக்கப்பட இருந்தது.
இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதத்தில் உணவகத்தை சேதப்படுத்தியதாகவும், அங்கு வேலை பார்த்து வந்த அருண் என்பவரை இந்து முன்னணியினர் தாக்கியதாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
உணவக உரிமையாளர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்து முன்னணியினர் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''சம்பவம் நடந்த அன்று நான் அந்த இடத்தில் இல்லை. அங்கு ஏற்கனவே ஒரு சிறிய உணவகம் இயங்கி வந்தது. ஆனால் அவர்கள் வெகு நாட்கள் முன்பே காலி செய்துவிட்டனர். அதன் பிறகு தான் நாங்கள் அங்கு ஒரு சிறிய உணவகம் ஆரம்பிக்க முடிவு செய்தோம்.
''மிகப் பெரிய அளவில் எல்லாம் இல்லை, சிறிய அளவில்தான் உணவகம் தொடங்க இருந்தோம். இன்று தொடங்க இருந்த நிலையில் நேற்று அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தோம். நான் பெரியாரிய உணர்வாளன் என்பதால் தந்தை பெரியார் உணவகம் என்று பெயர் வைத்தோம். மற்றபடி நான் எந்த அரசியல் கட்சியிலும், இயக்கத்திலும் இல்லை.''
''இந்த நிலையில் நேற்று மாலை இந்து முன்னணியைச் சேர்ந்த சுமார் 15 பேர் கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தந்தை பெரியார் உணவகம் எனப் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நான் அப்போது சம்பவ இடத்தில் இல்லை. ''
''கடையில் வேலைக்கு இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது இந்து முன்னணியின் கோட்டை, இங்கு பெரியார் பெயர் வைக்கக்கூடாது எனக் கூறி உணவகத்தில் இருந்த கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பணியில் இருந்தவரின் மகன் அருண் என்பவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு பல தையல் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.''

பட மூலாதாரம், FACEBOOK/DRAVIDARKAZHAGAM
''இதற்கு முன்னர் அவர்களை நாங்கள் பார்த்ததில்லை. அருகாமை பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும். நாங்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தோம். காவல்துறையினர் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது,'' என்றார்.
''பெரியார் என்கிற பெயரைக் கண்டாலே...''
உணவகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''பெரியார் என்கிற பெயரைக் கண்டாலே சங் பரிவார் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. கோவை மாநகரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தில் கன்னார்பாளையம் என்பது கோவைக்கு வெளியே காரமடையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம். அங்கு ஒரு சிறிய உணவகத்திற்கு பெரியார் பெயர் வைத்தால் கூட அவர்களுக்கு பொறுக்கவில்லை. பெரியார் பெயர் இருந்தாலே அவரின் சித்தாந்தம் பரவிவிடும் என்று அவர்களுக்கு அச்சம். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது,'' என்றார்.
இந்து முன்னணி சொல்வது என்ன?'
இது தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த தனபால் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு உணவருந்த சென்றபோது உணவு பரிமாறுவதில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதேதான் நேற்றும் நிகழ்ந்துள்ளது. அருண் என்பவர்தான் முதலில் தாக்கியுள்ளார்.''
''அதன் பின்னர்தான் இவர்கள் பதிலுக்கு தாக்கியுள்ளனர். இது முழுவதும் தனிப்பட்ட பிரச்னை. குற்றம் சுமத்தப்படுவது போல் அமைப்பிற்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. இந்து முன்னணியினரை கைது செய்துள்ள காவல்துறை, உணவகத்தினர் மீது கொடுக்கப்பட்ட புகாரை அழுத்தத்தினால் கண்டுகொள்ளவில்லை" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












