You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்? கிடைத்தது என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார். சி.விஜயபாஸ்கர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார்.
எத்தனை இடங்களில் சோதனை?
முந்தைய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய, சென்னையில் உள்ள 10 இடங்களிலும், கோயம்புத்தூரில் 9 இடங்களிலும் திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 25 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சி. விஜயபாஸ்கருடன் தொடர்புடைய, சென்னையில் உள்ள 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய ஊர்களில் உள்ள இடங்கள் என மொத்தம் 15 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் என்ன கிடைத்தது?
வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ரூ.18.37 லட்சம் ரூபாய் ரொக்கமும், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 வன் தட்டு, 1 பென் டிரைவ், 2 ஐபோன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
வேலுமணியின் பதில் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். "திமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் திசைதிருப்ப இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்." என்று அவர் குற்றம்சாட்டினார்.
"எந்த ஆதாரமும் இல்லாமல் அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொடரப்பட்டிருந்த இரண்டு பொய் வழக்குகளில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தான் தற்போது மூன்றாவது வழக்கை ஜோடித்துள்ளனர். எனக்கு நெருக்கமானவர்கள் என பலரின் பெயரை வழக்கில் சேர்த்துள்ளனர். எனக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. வீட்டில் இருந்த 7100 ரூபாய் ரொக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்." என்றார் அவர்.
என்ன வழக்கு?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களின்போது தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக ஒப்பந்தப்பணி வழங்கியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திருவள்ளூர் மாவட்டம், மஞ்சக்கரனை கிராமம் வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும் இந்த மருத்துவமனை புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக Essentiality certificate வழங்கியுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் மீதெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது?
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது கிராமப் புறங்களில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டம் விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்காக 20 வாட் மற்றும் 90 வாட் எல்.இ.டி விளக்குகள் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கான ரூ.875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான துறையின் பொறுப்பு அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி பணி ஒப்பந்தங்கள் வழங்க மாநில அளவிலான குழு அமைத்து தனக்கு நெருக்கமான, பினாமி நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் எல்.இ.டி விளக்குகள் வாங்குவதற்கான கொள்முதல் விலை சந்தை மதிப்பை விட மிக அதிகமாக வைத்து ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், "சேலம், தருமபுரி, திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தும் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களை ஆராய்ந்தபோது கே.சி.எஞ்சினியர்ஸ், ஏஸ் டெக் மிஷனரி, சி.ஆர்.கன்ஸ்ட்ரக்கஷன்ஸ், ராஜராஜேஸ்வர கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கிருஷ்ணமூரத்தி அண்ட் கோ ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு டெண்டர் விதிமுறைகளை மீறி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஐந்து மாவட்டங்களில் எல்.இ.டி விளக்குகளுக்கான சந்தை விலையையும் ஒப்பந்த விலையையும் ஆராய்ந்தத்தில் ரூ.74 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதே போல் பிற மாவட்டங்களில் நடைபெற்றுள்ள ஒப்பந்தங்களிலும் முறைகேடு நடைபெற்றிருக்கக்கூடும்.
குறிப்பிட்ட பணிகளில் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க சாதகமாக டெண்டர் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 நபர்கள் மட்டுமல்லாது மேலும் பல அரசு அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. எனவே விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
இதில் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமான கே.சந்திரபிரகாஷ், ஆர்.சந்திரசேகர், டி.ஸ்ரீனிவாசன், டி.சித்தார்த்தன், கே.யு.ராஜன், சி.டி.ராதாகிருஷ்ணன், ஆர்.பரசுராமன், பி.விஜயகுமார், கே.மணிவண்ணன் உள்ளிட்ட பத்து பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
'செயல்படாத மருத்துவமனைக்கு சான்றிதழ்'
கடந்த 2020ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி தொடங்குவதற்கு அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் அதிகாரிகளை கட்டாயப்படுத்தி செயல்படாத மருத்துவமனைக்கு போலியாக, தேசிய மருத்துவ கவுன்சிலிங் விதிகளுக்கு புறம்பாக Essentiality Certificate வழங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த ஐசரி கே.கணேஷ், கே.ஸ்ரீனிவாசராஜ் மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆர். பாலாஜிநாதன், டி.எம்.மனோகர், ஜே. சுஜாதா, வசந்தகுமார் ஆகிய ஏழு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்ட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர்கள் அடங்கிய குழுதான் வேல்ஸ் கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளது.
"பிரதமர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது" - விஜயபாஸ்கரின் தந்தை
தொடர்ந்து முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி வீட்டுக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, "வீட்டில் எந்தவித ஆவணங்களும் இதுவரை எடுக்கவில்லை. என்னிடம் எந்த வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் பல்வேறு சான்றிதழ்களை வழங்கி இருப்பார். அது எதற்காக என்று தெரியவில்லை. குற்றச்சாட்டுகள் பிரதமர் மீதும் உள்ளது. ஸ்டாலின் மீதும் உள்ளது. நீதிமன்றம் தான் குற்றம் செய்தார்களா இல்லையா என்று உறுதி செய்யும்" என்று தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை வேறு இரண்டு வழக்குகளில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இரண்டு முறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் ஒரு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு முன்பு அவருக்கு ஆதரவாக திரண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
தற்போது சென்னையில் 15 இடங்கள் கோவையில் 10 இடங்கள் என தமிழ்நாடு முழுவதும் இரு முன்னாள் அமைச்சர்களுக்கும் சொந்தமான மொத்தம் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
"திமுகவின் சர்வாதிகார போக்கு" - ஈ.பி.எஸ் கண்டனம்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையையும், அதனை எதிர்த்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டதையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.
"மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து, ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரையும், கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்," என்றுள்ளார்.
"சபாநாயகர் பதவி விலக வேண்டும்" - வழக்கறிஞர் இன்பதுரை
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் எஸ்.பி.வேலுமணியின் வழக்கறிஞருமான இன்பதுரை கூறுகையில், "திமுகவின் செய்தி தொடர்பாளராக அப்பாவு இருந்தபோது கொடுத்த புகார் அடிப்படையில், எஸ்.பி.வேலுமணி மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அப்பாவு சபாநாயகரான பிறகு, அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பதால் அந்த புகாரை அவர் வாபஸ் பெற்றார். இப்போதும் அப்பாவு சபாநாயகர்தானே. பிறகு எப்படி அந்த புகாரில் நடவடிக்கை எடுக்க முடியும்? அப்படியானால், இந்த வழக்கு முடியும் வரை சபாநாயகர் பதவி விலக வேண்டும்" என தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்