You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலா, விஜயபாஸ்கர் மீது விசாரணைக்குப் பரிந்துரை- ஆறுமுகசாமி ஆணையம் கூறியது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரித்த இரு ஆணையங்களின் அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க தனிச் சட்டம் கொண்டு வருவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விரிவான தகவலை இங்கே வழங்குகிறோம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி 22.05.2018 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும் தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. அந்த ஆணையம், 18.05.2022 அன்று அரசுக்கு அளித்த அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.
இந்திய காவல் பணி அலுவலர்கள் 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உரிய தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், அதற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் இறுதி அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைப்பதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணையம்
மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும் அதைத்தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்ய நீதிபதி அ.ஆறுமுகசுவாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆணையத்தால் 27.08.2022 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும் அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டது.
இவ்வறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா, சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, அதற்கான விவர அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் ரம்மி வரைவு சட்ட மசோதா
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாய கேடுகள் குறித்தும் அது தொடர்பாக தடைச் சட்டம் கொண்டு வருதல் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இத்தைய தடை சட்டங்கள் குறித்து நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும் பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடம் இருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளை கருத்தில் கொண்டும் இதுபோன்ற விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்ட வரைவினை வகுத்தல் குறித்தும் அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வகை விளையாட்டுகளை தடை செய்வதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ள விவரமும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்