ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம்: இறந்தவரின் தாய் பிபிசி தமிழுக்கு பேட்டி

    • எழுதியவர், பிரசன்னா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சம்பவத்தில் இறந்து போன பெண் ஸ்னோலினின் தாயார் வனிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வனிதா, "துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சுதந்திரமாக உள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் வேதனையுடன் உள்ளோம். துப்பாக்கி சூடுக்கு காரணமான அதிகாரிகளை நீதிபதி அருணா ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அருணா ஜெகதீசனின் அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதி இப்போதும் கூட முறையாக வந்து சேரவில்லை," என்று தெரிவித்தார்.

முன்னதாக, நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்பே ஊடகங்களில் கசிந்தது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது அவர்களை நோக்கி திட்டமிட்டே துப்பாக்கி சூடு நடத்தினர். காக்கா, குருவிகளை சுடுவது போல மக்கள் மீது சுட்டுள்ளனர் என்று வனிதா கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய புகையால் நாங்கள் குடியிருந்த பகுதியில் மூச்சுப் பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால் சுமார் 99 நாட்களாக நாங்கள் அந்த ஆலைக்கு எதிராக போராடினோம். அப்போது எந்த அதிகாரியும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. அதனால் போராட்டத்தின் நூறாவது நாளில் நியாயமான முறையில் அமைதியாக உரிய தீர்வு கிடைக்கக் கோரி பொதுமக்கள் பேரணியாக சென்றனர். நான், எனது மருமகள், மகள் ஸ்னோலின் உள்ளிட்டோரும் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றோம்.

கண் முன்னே நடந்த துப்பாக்கி சூடு

ஆறு மாத கைக்குழந்தையுடன் நான் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் மேலிருந்தும், கீழிருந்தும் துப்பாக்கி சூடு நடத்தினர். மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். என் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை மீது குண்டடி பட்டு விடக்கூடாது என்பதற்காக அதை இறுகப்பிடித்துக் கொண்டு பதறியபடி இருந்தேன். ஆனால், என் மகள் துப்பாக்கி தோட்டாவுக்கு இரையாகி விட்டாள் என்று எனக்கு அப்போது தெரியாது என கூறினார் வனிதா.

மனு கொடுக்க அழைத்து வந்த தங்கையை கொன்று விட்டாயே என்று எனது மகன் கதறித் துடித்தான். என் மகளை இழந்து நித்தமும் ரத்தத்தில் கண்ணீர் வடிக்கிறோம். வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவள் ஸ்னோலின். அவளை இழந்துவிட்டோம் என்கிறார் வனிதா.

99 நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்தியபோது பேச்சுவார்த்தைக்கு வராத அதிகாரிகள் 100 நாள் போராட்டத்தை குலைக்கும் வகையில் சூழ்ச்சி செய்து துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்றுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

துப்பாக்கி சூடு நடத்தினால் தான் இவர்களுக்கு பயம் இருக்கும். இனி வேற யாரும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேச முன்வர மாட்டார்கள் என்று அரசு தரப்பு எண்ணியிருக்கக் கூடும். ஆனால் போராட்டத்தில் இருந்த நாங்கள் யாரும் பின்வாங்கவும் இல்லை. பயப்படவும் இல்லை. இனி பயப்பட போவதும் இல்லை. துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது இருந்த அதே மனநிலையில்தான் இப்போதும் மககள் இருக்கிறார்கள் என்று வனிதா தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு நடந்தபோது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி ஆக இருந்த சைலேஷ்குமார யாதவ், நெல்லை டி ஐ ஜி ஆக இருந்த கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட சில போலீசாரை குற்றம்சாட்டப்பட்டவர்களாக நீதிபதி அருணா ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதி அருணா ஆணைய அறிக்கையை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் ஸ்னோலினின் தாயார் வனிதா.

முதல்வருக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சியில் துப்பாக்கி சூடுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான குழுவினர் முறையிட்டனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்தவர் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். அவர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இப்போது மக்களை கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். 13 உறவுகளை பறிகொடுத்த நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிறார் வனிதா.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், எத்தனை கோடி இழப்பீடு கிடைத்தாலும் அது இறந்த உயிர்களுக்கு ஈடாகாது. 13 பேரின் உயிர் போனது மட்டுமின்றி, இந்த சம்பவத்தின் போது உடலுறுப்புகளை இழந்து இன்றளவும் மாற்றுத்திறனாளிகளாக வேதனைப்பட்டு வருவோருக்கு போதிய உரிய உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வனிதா கேட்டுக் கொண்டார்.

ரஜினி மீதும் வழக்கு தொடர கோரிக்கை

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர வேண்டும் என்று தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் ரஜினி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை கசிந்த விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு தமிழ் மீனவர் கூட்டமைப்பு எதிர்வினையாற்றியிருக்கிறது.

இதற்கிடையே, நீதிபதி அருணாவின் அறிக்கை கசிந்த விவகாரத்தில் விரைவில் அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்," என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

துப்பாக்கி சூடு தொடர்பாக பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், போராட்டக்குழுவுக்குள் ஊடுருவியதாகக் கூறி போலீஸ் துப்பாக்கி சூடுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கையில் பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை என கூறியுள்ளனர்.

அந்த வகையில் துப்பாக்கி சூடு பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது சர்ச்சையாந தகவலை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரஜினி கூறினார்.

ஆலை ஆதரவு குழுவினரும் கோரிக்கை

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது அபாண்டமான பழியை சுமத்துவதுடன், மீண்டும் மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக முதலமைச்சரையும் கேட்டுக்கொள்கிறோம்," என்று தெரிவித்தனர்.

"பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, பொது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு, அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர்கள் கேட்டுகொண்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: