தமிழ்நாட்டில் தற்கொலைகள், விபத்துகள் அதிகரிப்பு - தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை

தற்கொலை சாலை விபத்து அறிக்கை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலேயே அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடம்பிடித்துள்ளது.

விபத்துகளைப் பொறுத்தவரை அதிகமான விபத்துகள் நடந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை உத்தரப்பிரதேசத்தில்தான் மிக அதிகம்.

2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க பதிவு செய்யப்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பெண்களுக்கெதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் குறித்த மொத்த ஆவணத்தொகுப்பான தேசிய குற்றவியல் ஆவண காப்பக அறிக்கைதான் இந்தத் தகவலை அளிக்கிறது. விரிவாக பார்க்கலாம்.

சாலை விபத்து

என்ன சொல்கிறது அறிக்கை?

2021ஆம் ஆண்டில் இந்தியா முழுக்க 60 லட்சத்து 96,310 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020ஆம் ஆண்டை விட 7.6% குறைவு. இந்த வழக்குகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள். இன்னொன்று பிற சிறப்பு சட்டங்களின் கீழ் (போக்சோ, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம், மாநில சட்டங்கள் போன்றவை) பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.

அந்த வகையில், IPCஇன் படி, 2020ஆம்ஆண்டை விட இந்த ஆண்டில் குற்றங்கள் 13.9% பதிவாவது குறைந்துள்ளன. ஆனால், பிற சிறப்பு சட்டங்களில் வழக்குகள் பதிவாவது 3.7% அதிகரித்துள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

பெண்களுக்கெதிரான குற்றங்கள்

2021 இல் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கெதிரான குற்றங்களில் பதிவாகியுள்ளன. இது 2020ஆம் ஆண்டை விட 15.3% அதிகம்.

இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், பெண்களுக்கெதிரான மொத்த வழக்குகளில் 31.8% கணவர்கள் அல்லது நன்கு தெரிந்த நபர்களால் இழைக்கப்பட்டவையே.

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Preeti M / Getty Images

குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்

2021 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 1,49,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020 ஐ விட 16.2% அதிகம். இதில் 38% போக்சோ வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

சட்டத்துடன் முரண்படும் சிறுவர்கள்

2021 ஆம் ஆண்டில் சிறார்களுக்கு எதிராக மொத்தம் 31,170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவும் 2020 ஐ விட 4.7% அதிகம்தான்

31,170 வழக்குகளில் மொத்தம் 37,444 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 32,654 சிறார்கள் இ.த.ச. விலும் 4790 பேர் சிறப்பு சட்டங்களின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 76.2 % பேர் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட வளாரிளம்பருவத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கில் ஒரு தற்கொலை: தினக்கூலித் தொழிலாளிகள்

2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 1,64,033 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2020ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 7.6% அதிகம். அதிகமான அளவில் தினக்கூலி தொழிலாளர்களும்(25.6%), அடுத்ததாக குடும்பத் தலைவிகளும்(11.4%) இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த மொத்த எண்ணிக்கையில் 10,881 பேர் விவசாயிகள் (5318 விவசாயிகள், 5563 விவசாயக் கூலிகள்). இதில் 653 பெண்களும் அடக்கம். இந்தப் பட்டியலில் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் வகிக்கிறது தமிழ்நாடு. மொத்த தற்கொலைகளில் 11.5% தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

பட்டியலின் முதலிடத்தில் மகாராஷ்டிரா இருந்தாலும், சில காரணிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது. குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் 2021ஆம் ஆண்டில் நாடுமுழுக்க 131 இடங்களில் நடைபெற்றுள்ளன. இதில், 340 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகமான 'குடும்ப தற்கொலைகள்' தமிழ்நாட்டில்தான் (33 சம்பவங்கள்) நடைபெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, காவல் நிலையங்களிலேயே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விடுவதன் விளைவாகவே இந்த தற்கொலைகள் நடக்கின்றன என்கிறார் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளர் எம்.கருணாநிதி.

குறிப்பாக, இதுபோன்ற தற்கொலைகளுக்கு உள்ளாகும் நபர்களில் குடும்பத்தலைவிகள், கூலித் தொழிலாளிகள் போன்றோர் அதிகமாக இருப்பர். அதிலும் வட்டிக்கடன், சீட்டுப்பிடிப்பது உள்ளிட்ட நிதிமோசடி தொடர்பான காரணங்களுடன் வறுமையும் பிரதான காரணமாக இருக்கும்.

காவல் துறையின் பங்கு

இவற்றில் பெரும்பாலான விவகாரங்கள் காவல்நிலையங்களின் கவனத்துக்கு வந்திருக்கும். ஆனால், இதை காவல்துறை தீவிரமாக எண்ணாததன் விளைவுதான் இப்படி தற்கொலைகள் பெருகுகின்றன.

காவல்துறை மட்டும்தான் இதற்கு காரணம் என்று சொல்லவில்லை. எல்லா அரசு அலுவலகங்களிலும் காத்திருந்து, கேட்டது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை நாம் பார்த்ததுண்டு. ஆனால், காவல்துறைக்கு இதை தடுப்பதற்கான பொறுப்பு உள்ளது என்பதால் அவர்களது பங்கு இந்த விவகாரத்தில் முக்கியமானது.

தற்கொலை விகிதம்

ஆனால், இதுபோன்ற விவகாரங்களில் எந்தப் புகாரும் அளிக்கப்படாதவரை காவல்துறை என்ன செய்ய முடியும்?

மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான நட்புறவு குறைந்துவருகிறது. இதற்குத்தான் சமூகக் காவல் என்ற முறை பின்பற்றப்பட வேண்டும் என்கிறார் கருணாநிதி.

அதாவது, "மக்களுடன் காவல்துறையினர் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான வழியாக இது இருக்கும். குறைந்தபட்சம் கான்ஸ்டபிள்கள் ஊருக்குள் சென்று நேரடியாக மக்களுடன் உறவைப் பராமரிக்க வேண்டும். அதன்மூலம், தகவல்கள் எளிதாக காவல்துறைக்கு வரும் என்பதோடு, காவலர்களை அணுகவும் மக்களுக்கு தயக்கம் இருக்காது.

இப்படியான, அணுகுமுறைகள் மூலம், நெருங்கி வரும் மக்கள் கொண்டுவரும் பிரச்னைகள் எவ்வளாவு சிறிய அளவிலானதாக இருந்தாலும் அதை தீர்த்துவைக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவொ காவல்துறை முயற்சித்தால் தற்கொலைக்கு செல்லும் அளவுக்கு மனம் விரக்தியடையாது. காவல்துறையே எனக்கு உதவுகிறது என்ற துளி நம்பிக்கையைத் தந்தாலும் அது அவரைப் பிழைக்க வைக்கும் " என்கிறார் அவர்.

இந்த தரவுகள் வெளியானதையடுத்து இதன் அடிப்படையில் ஏதும் நகர்வுகள் இருக்குமா என்று கேட்டோம். ஆனால், "அதை அரசுதான் அறிவிக்க வேண்டும்" என்று பதிலளித்தார் அவர்.

அதேவேளை, தற்கொலை எண்ணம் குறித்த மனநல ஆலோசனைக்காகவே நாடு முழுக்க ஒரே எண் (குழந்தைகள் உதவிக்கான 1098 போல) கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருவதாகவும், தமிழ்நாட்டில் அந்த திட்டத்துக்கு டெலி மனசு என்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி.

வயது, பணி, ஊதியம், சமூக நிலை என எந்த வித்யாசமும் இன்றி நாட்டில் அதிகரிக்கும் தற்கொலைகளை ஆண்டுதோறும் அறிக்கைகள் வடிவில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதே மீண்டும் மீண்டும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய உண்மை.

காணொளிக் குறிப்பு, கருணைக்கொலை செய்யுமாறு மனு கொடுத்த திருநங்கை - என்ன காரணம்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: