மஞ்சள் எறும்புகள்: "அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம்" - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், DR PRONOY BAIDYA
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மஞ்சள் எறும்புகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அலட்சியப்படுத்தினால் அது ஊர்ந்து செல்லும் பகுதிகளின் சுற்றுச்சுழலை முழுமையாக அழிப்பதுடன் அங்குள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம் என்று சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனமான 'அசோகா' தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் பரவலாக இந்த மஞ்சள் எறும்புகள் காணப்படுகின்றன. அவை குறித்த விரிவான கட்டுரையை சமீபத்தில் பிபிசி தமிழ் வெளியிட்டிருந்தது. அதில் மஞ்சள் எறும்புகளின் திடீர் ஆதிக்கத்தால் சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரந்தமலை காட்டுப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
மேலும், அந்த மக்கள் பராமரிக்கும் கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து மஞ்சள் எறும்புகள் தாக்குவதாகவும் அதனால் அவை கண் பார்வையை இழந்து உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் பிபிசி தமிழில் செய்தி வெளியாகியிருந்தது.
இத்துடன், மஞ்சள் எறும்புகளின் தாக்கத்தால் காட்டுப்பகுதிகளில் காணப்படும் காட்டெருது, பாம்பு, முயல் உள்ளிட்ட பல கானுயிர்களும் தொடர்ச்சியாக உயிரிழப்பதாக அங்குள்ள கிராமவாசிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூரில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்சன் தர்மராஜன் தலைமையில் டாக்டர். ரஞ்சித், சஹானாஸ்ரீ, ஃபெமி இ பென்னி குழுவினர் கரந்தமலை கிராம பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் அவர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனஅ முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.


- மஞ்சள் எறும்பு வகை, உலகின் ஆபத்தான 'நூறு அந்நிய உயிரினங்கள் ஒன்று' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் எரும்பு அனைத்துண்ணிகள் (omnivores) என்பதால் இவை ஊடுருவுவது உள்ளூர் உயிரினங்கள், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

- உதாரணமாக இந்திய பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பெரிய காலனியாக இந்த மஞ்சள் எறும்புகள் பெருக்கெடுத்தன. சிவப்பு நண்டுகளின் சாம்ராஜ்ஜியமான கிறிஸ்மஸ் தீவில் இந்த மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால், பல நண்டுகள் நிலைகுலைந்து குருடாகி இறுதியில் மடிந்துள்ளன.
- இந்த எறும்புகள் இரவு மற்றும் பகல் நேரங்களில், 21 டிகிரி முதல் 35 டிகிரி சூழலில் இரைதேடும். 26 முதல் 30 டிகிரியில் இதன் இரை தேடும் நடவடிக்கை உச்சம் அடைந்து 44 டிகிரி வரை இயங்கும். உலகின் மற்ற பகுதிகளில் பதிவான மஞ்சள் எறும்புகள் பற்றிய வரலாறு மூலம், அந்த வகை எறும்பை உரிய கவனம் செலுத்தி தடுக்காவிட்டால் அவை அங்குள்ள சுற்றுச்சுழலை முழுமையாக அழிப்பதுடன் தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்.
- வேலாயுதம்பட்டியில் கவனித்தபோது, மஞ்சள் எறும்புகள் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளன. நிலத்தில் வேறு பூச்சிகளையோ, சிறிய விலங்குகளையோ பார்க்க முடியாத அளவுக்கு அதன் செயல்பாடு இருக்கிறது.
- வண்டுகள், கரப்பான்பூச்சிகள், தவளைகள், மாட்டுச் சாணம், குளவிகள் மற்றும் தேனீக்கள் மீது இந்த மஞ்சள் எறும்புகளின் முரட்டுத்தனமான உண்ணும் வழக்கத்தைப் பார்க்க முடிகிறது.

- இத்தகைய உண்ணும் வழக்கத்தின் நீண்ட கால சூழலியல் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். அதைப்பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை.
- பாதிக்கப்பட்ட இடங்களில் வேறு எந்த பூச்சிகளையும் காண முடியாயது. இது தீவிர அக்கறை செலுத்த வேண்டிய விஷயமாக உள்ளது.
- கிராமத்தினரிடம் நாங்கள் பேசியதிலிருந்தும் பாதிக்கப்பட்ட விலங்குகளை நேரடியாக பார்த்தலிருந்தும் பலவீனமாக விலங்குகள் தான் முதலில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய பாதிப்புகள் கண் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் தென்படுகின்றன.
- கிராம மக்கள் நம்புவதைப் போல இந்த எறும்புகள் ஃபார்மிக் அமிலத்தை கக்குவதால் பாதிப்பு ஏற்படுவதாக நாங்கள் நம்பவில்லை. ஃபார்மிக் அமிலம் பல காரணிகளில் ஒன்றாக இருக்கலாம்.
- அந்த பகுதியில் உள்ள கால்நடைகளிடம் முழுமையான கால்நடை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், எறும்பு கடியால் தங்களுடைய கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதை கிராமத்தினர் காண்பித்தனர். இங்கு தோல் மற்றும் ஒவ்வாமை நிபுணர்கள் உட்பட நிபுணர்கள் குழுவுடன் மருத்துவ முகாம் நடத்த பரிந்துரைக்கப்படுகிறது.

- இந்த எறும்புகள் வந்ததற்கான காரணத்தை துல்லியமாகக் கண்டறிய இந்த பகுதியில் உயிர் இயற்பியல் அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
- சமீப காலங்களில் அதிகரித்து வரும் கோடைகால மழைப்பொழிவும் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்.
- கிராம மக்கள் சைபர்மெத்ரின் போன்ற வலுவான ரசாயன பூச்சிக்கொல்லிகளை வெறும் கையிலேயே பயன்படுத்துகின்றனர். இந்தப் பூச்சிக்கொல்லிகளாலும் ஓவ்வாமை ஏற்படலாம். இத்தகைய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு பாதுகாப்பான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
- வனத்தை ஒட்டிய பகுதிகளில் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி, பொறுப்புடன் அவற்றைக் கையாள விவசாயிகள் மற்றும் விவசாய பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.

- கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த வகை மஞ்சள் எறும்புகள் பரவியுள்ளன. இத்தகைய தீவிரமான ஊடுருவலும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பும் இந்தியாவிலே முதல் முறையாக இங்கு தான் காணப்படுகிறது. சூழலியல் மாற்றங்களால் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் நாம் இத்தகைய பாதிப்புகளை எதிர்பார்க்கலாம்.
- இதனை ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாக எடுத்துக் கொண்டு இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும் இத்தகைய பாதிப்புகளை ஊக்குவிக்கும் சூழலியல் மற்றும் காரணிகளை அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், மேற்கண்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் நத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர் சிங்கமுத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








