ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையால் அடுத்து நடக்கப்போவது என்ன?

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், அறிக்கையின் முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல்களைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், அந்த அறிக்கை அதிமுகவுக்கு எதிராக திமுக பயன்படுத்தும் ஆவணமாக செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இனி என்னவெல்லாம் நடக்கும்?

2016, செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அங்கேயே உடல் நலன் குன்றி டிசம்பர் 5-ஆம்தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார். பிறகு அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தேகம் எழுப்பினார்.

அவரைத் தொடர்ந்து அவரது அணியிலிருந்த பலரும் இதுபோன்ற சந்தேகத்தை எழுப்பினர். வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்த சமயத்தில் அவர் இட்லி சாப்பிட்டார், உடல்நலன் தேறிவருகிறார் என்று தெரிவித்தது பொய் என்று கூறி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இதுபோன்ற தகவல்கள் வெளியாவது அதிகரித்துவந்து நிலையில், அதிமுகவின் அப்போதைய துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விசாரணை ஆணையம் அமைத்தால் அதற்கு ஒத்துழைப்பு தர தயார் என்று அறிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சமயத்தில் எடுக்கப்பட்ட காணொளி காட்சிகள் உள்ளதாகவும், தேவைப்பட்டால் விசாரணை கமிஷனுக்கு அவற்றை அளிக்க தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து 2017 செப்டம்பர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

பல சட்டச் சிக்கல்களுக்கு இடையில் விசாரணைகளை நடத்தி முடித்து, தற்போது தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி, அறிக்கையை தயாரித்ததில் தான் முழுமையாக நிறைவாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

பல முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளதாக நம்பப்படும் இந்த அறிக்கையை திமுக அரசாங்கம் எவ்வாறு கையாளும் என அரசியல் நோக்கர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

1980களில் இருந்து திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது அமைக்கப்பட்ட ஆணையங்கள் பற்றிய விவரங்களை சேகரித்துள்ள மூத்த பத்திரிகையாளர் இளங்கோவனிடம் பேசினோம்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கலாம் என்கிறார் இளங்கோவன்.

"ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களையவேண்டும் என்றுகூறி 2017ல் தொடங்கப்பட்டது. உண்மையில் இந்த ஆணையம், உள்கட்சி பிரச்னைக்காக, அதிமுக தலைவர்கள் தங்களது சொந்த தலைவரின் இழப்பை சந்தேகபூர்வமாக மாற்றி தங்களுடைய ஆதாயத்திற்காகக் கொண்டுவந்த ஆணையமாகத்தான் நான் பார்க்கிறேன். பொதுவாகவே, ஆணையங்கள் அமைக்கப்பட்டால், அந்த விவகாரம் நீர்த்துப்போகும் நிலைதான் தமிழகத்தில் பலமுறை நடந்துள்ளது. ஆனால் ஒருசில ஆணையங்கள்- குண்டுபட்டி கலவரம், கோமதிநாயகம் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகைகளை திமுக அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆறுமுகசாமி அறிக்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்" என்கிறார் இளங்கோவன்.

அறிக்கையின் விவரங்கள் எதுவும் இதுவரை சொல்லப்படவில்லை என்பதால், என்ன விதமாக இது பயன்படும் என்பதை தீர்மானிக்கமுடியாது என்கிறார் இளங்கோவன்.

''ஜெயலலிதாவை பொறுத்தவரை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் என்ன நடந்தது என செய்திக்குறிப்புகள் வந்தன. மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்கள் என பலரின் கருத்துகள் வெளியாகிவிட்டது. இந்த ஆணையமும் இதுவரை வெளியில் பகிரப்பட்ட தகவல்களை கொண்டுதான் தன்னுடைய அறிக்கையை தயார் செய்திருக்கிறது என்பதால் இதில் புதிய தகவல்கள் இருக்குமா என தெரியவில்லை. திமுக அரசாங்கம் இதை வெளியிடுவதில் எந்த பிரச்னையும் ஏற்படப்போவதில்லை என்பதால் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்" என்கிறார் அவர்.

மேலும், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் உருவான கிரானைட் ஊழல் தொடர்பான அறிக்கையில் முக்கிய விவரங்கள் இருந்தபோதும் அதிமுக அரசாங்கம் அதை வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

ஆறுமுகசாமி அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் பாபு. மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படும் இதுபோன்ற ஆணையங்களின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக கூறுகிறார் அவர்.

"ஆணையங்கள் அமைக்கப்பட்டு, அதன் விவரங்கள் வெளியாவது என்பது நடைமுறையில் அதிரடி மாற்றங்களை பெரியளவில் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த அறிக்கைகளை கட்டாயமாகத் தாக்கல் செய்யவேண்டும் என்பது சட்டப்படி செயல்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனால், அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். ஆனால் அரசாங்கம் அந்த அறிக்கையில் சொல்லியவற்றை கட்டாயம் நிறைவேற்றவேண்டும் என்ற விதிகள் எதுவும் இல்லை. இந்த ஆணையங்கள் எல்லாம் அரசுக்கு வழிகாட்டல் மற்றும் அறிவுரை சொல்ல மட்டுமே அமைக்கப்படும். ஆணையம் சொல்வதை நிராகரிக்க அரசுக்கு உரிமை உள்ளது" என்கிறார் சுரேஷ் பாபு.

மேலும், அறிக்கையில் உள்ள தரவுகளை விவாதிக்கவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கத்திற்கு உரிமை உள்ளது என்கிறார். "அறிக்கை என்பது சட்டமன்றத்தில் வைக்கப்பட்டபின்னர், அதை ஆதாரமாக கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆணையம் என்பது ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு சமம் என்பதால், அதன் அறிக்கையை தீர்ப்பாக கருதலாம்" என்கிறார் வழக்கறிஞர் சுரேஷ் பாபு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: