கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'சிபிசிஐடி தாமதமாகச் செயல்படுகிறது' முதல்வரை சந்தித்த பெற்றோர்

பட மூலாதாரம், MK STALIN
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஜூலை மாதம் மரணமடைந்த மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் இறப்புக்கான காரணங்களை அளிக்கும் இரண்டு உடற்கூராய்வு அறிக்கைகளும் நம்பிக்கை தருவதாக இல்லை என்றும் தங்கள் மகளுக்கு நீதி வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்த பெற்றோர், முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். ''எங்கள் மகளின் உடலில் காயங்கள் இருந்தன. மகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என்ன காரணங்களால் இந்த காயங்கள் ஏற்பட்டன என எங்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். என் மகளுக்கு நீதி வேண்டும், உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வேண்டும் என முதல்வரிடம் கேட்டோம். தப்பு செய்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என முதல்வர் உறுதி கொடுத்தார். எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது,'' என பெற்றோர் தெரிவித்தனர்.
கடந்த மாதம், கள்ளக்குறிச்சியில் இறந்த தங்கள் மகளின் உடலில் காயங்கள் இருப்பதாக உடற்கூராய்வில் அறிக்கையில் தெரிய வந்ததை அடுத்து, மகளின் உடலை வாங்க மறுத்து நான்கு நாட்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடித்து, இறந்த மாணவிக்கு நீதிவேண்டும் என பல்வேறு வாட்ஸ்அப் குரூப் மூலமாக தனியார் பள்ளியில் திரண்ட போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர்.
இறந்த மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, போராட்டக்காரர்கள் மோசமாக நடந்துகொண்ட காட்சிகளை தொலைகாட்சியில் பார்த்ததாக கூறிய நீதிபதி, அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதோடு, மாணவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செய்யும் நேரத்தில் எந்த அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது என மாணவியின் தந்தையிடம் அறிவுறுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 300க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் தற்போது மாணவியின் பெற்றோர் அவரை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட உடற்கூறாய்வுகளின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போதுவரை தனக்கு அளிக்கப்படவில்லை என்கிறார் தயார் செல்வி. ''எங்கள் மகளின் மரணத்திற்கான காரணங்களை விசாரிக்கும் சிபிசிஐடி தாமதமாக செயல்படுகிறார்கள் என்று கருதுகிறோம். விசாரணை பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்தி சொல்லவேண்டும். எங்கள் சந்தேகங்களை தீர்க்கவேண்டும். அவர்கள் விரைவாக வேலைசெய்யவேண்டும். எங்கள் மகளின் இறப்புக்கு முன்னதாக பதிவான சிசிடிவி காட்சிகளை இதுவரை எங்களுக்கு தரவில்லை. அதை எங்களுக்கு காட்டவேண்டும்,'' என்கிறார்.
மேலும், தங்கள் மகளுக்கு நீதி வேண்டும் என்று திரண்ட இளைஞர்களில் ஒரு சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி, அப்பாவி பள்ளிமாணவர்களை கைது செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் - பின்னணி
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது.
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ஜூலை 13ஆம் தேதி காலையில் இவர்களின் மகள் இறந்து விட்டதாக பெற்றோருக்குத் தகவல் வந்தது. நேரில் பார்த்த மாணவியின் தாயாரிடம், அவரது மகள் பள்ளி மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த தாயார், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்று கூறினார். இதையடுத்து மாணவியின் மரணத்தை சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர்.
மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய பெற்றோர் தொடர்ந்து மகளின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கடந்த 14ஆம் தேதி மாணவி உடல் முதல் முறையாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. மேலும் இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாணவி உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் மற்றும் இரத்த கசிவு ஏற்பட்டு அதிர்ச்சியால் மாணவி உயிர் பிரிந்திருக்கும் என்று தோன்றுவதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டது.
உடற்கூராய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய மாணவியின் பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு உடற் கூராய்வு செய்யவேண்டும் என்றும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரியும் மனு தொடுத்தனர்.
இதற்கிடையில் கடந்த 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி அருகே மர்மமான முறையில் மாணவி மரணித்ததற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மக்கள் போராடியது வன்முறையாக மாறியது.

முன்னதாக பெற்றோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 18ஆம் தேதி அன்று மறு உடற்கூராய்வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் அதற்கான சிறப்பு மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டு, 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வரவில்லை. மேலும் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளும்படி குற்றவியல் புலனாய்வுத் துறை மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.
இதனிடையே மாணவியின் மறு உடற்கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வலியுறுத்திய பெற்றோர் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவைப் பின்பற்ற அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில், பெற்றோ மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, மாணவியின் உடல் 11வது நாளான ஜூலை 23ஆம் தேதியன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.
உயிரிழந்த மாணவியின் இறுதி அஞ்சலி கடுமையான காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. மாணவி பயன்படுத்திய புத்தகம், எழுதுகோலுடன், கள்ளக்குறிச்சி மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராம இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













