கள்ளக்குறிச்சி வன்முறை: வழியில் சென்றவர்களும் கைதானதாக புதிய சர்ச்சை - கள நிலவரம்

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, கலவரம் நடந்த பள்ளியின் முகப்புப்பக்கம்
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர், அரசுப் பணித்தேர்வுக்கு ஆயத்தமானவர்கள் என்றும் சிலர் வழிப்போக்கர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?

வன்முறையில் தொடர்புடையதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சேலத்தை சேர்ந்தவர். அவரது தந்தை கேரளாவில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்பவர். தனது மகன் கள்ளக்குறிச்சி வன்முறையில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருப்பதை அறிந்து அந்த தந்தை மகனை மீட்க முடியாமல் தவித்து வருகிறார்.

வன்முறையில் மகன் ஈடுபட்டிருக்க மாட்டான் என்று கூறும் அவர், கடந்த இரண்டு வாரங்களாக மகனை விடுவிக்க யாரை பார்ப்பது? யார் துணையை நாடுவது? என்று தெரியாமல் உள்ளார்.

இதேபோல, குரூப் 4 மாதிரி தேர்வெழுத தயாராகி வந்த தங்களுடைய இரண்டு மகன்களை போலீஸார் கைது செய்து விட்டதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குரியதாகி விட்டதாக வேறொரு பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். தங்களுடைய பிள்ளைகள் தேர்வு எழுதச் சென்ற ஆதாரங்களுடன் போலீஸ் நிலையத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் அந்த பெற்றோர் அலைந்து வருகின்றனர்.

தொடரும் கைது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, ஜூலை 17ஆம் தேதி பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக நடந்த கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட பள்ளி கட்டடம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மான முறையில் மாணவி இறந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி முதல் கட்டமாக 221 இளைஞர்கள், 20 சிறார்கள் உட்பட 241 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த சம்பவத்தில் அடுத்துதடுத்து மேலும் பலர் கைது செய்யப்பட்டதையடுத்து மொத்த கைது எண்ணிக்கை 322 ஆக உள்ளது.

இதில் வன்முறைக்கு முக்கிய காரணங்களாக, வன்முறையாளர்களை ஒருங்கிணைக்க உதவிய வாட்ஸ் அப் குழுவை தோற்றுவித்தவர்கள், அதில் பலரை இணைத்தவர்கள், கலவரத்தில் போலீஸ் பேருந்துக்கு தீ வைத்தவர்கள், பள்ளி கட்டடத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் என 16 பேரை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தது.

இந்த நிலையில், வன்முறை நடந்தபோது பள்ளி வளாகத்துக்கு அருகே இருந்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து, சின்ன சேலம் வழியாக செல்ல முற்பட்டவர்கள் மற்றும் வன்முறையில் எந்த வகையிலும் பங்கேற்காதவர்கள் போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளதாக பிடிபட்டுள்ள சிலரது உறவினர்கள் ஆதாரங்களை காண்பித்து முறையிடுகின்றனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, பள்ளி வளாகத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பேருந்துகள்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கையை சர்ச்சையாக்கும் வகையில் அவர்கள் வெளியிடும் பல தகவல்கள் உள்ளன.

குறிப்பாக, சின்ன சேலத்தை சேர்ந்த செல்வராஜ், மல்லிகா தம்பதியின் இரண்டு பிள்ளைகள் சம்பவ நாளில் குரூப் 4 தேர்வுக்கு ஆயத்தமாகி வந்தனர். சின்ன சேலம் பேரூராட்சியில் துப்புரவு பணி செய்து வரும் செல்வராஜ், கடுமையான பொருளாதார சூழலில் தமது பிள்ளைகளை படிக்க வைத்ததாகக் கூறுகிறார்.

இவரது மூத்த மகன் குடியரசு(26) முதுகலை கணிதவியல் மற்றும் இளங்கலை கல்வியியல் படித்துள்ளார். இளைய மகன் வசந்த்(25) பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இருவருமே அரசு வேலையில் சேர பல்வேறு தேர்வுகளை எழுதி வருகின்றனர்.

கடந்த ஜூலை 24ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வுக்கான 'மாதிரி குரூப் 4 தேர்வு' கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது. அதற்காக அன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வெழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது போலீசார் இருவரையும் கைது செய்து விட்டதாக அவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.

ஹால் டிக்கெட்டை கிழித்ததாக புகார்

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, சிறையில் உள்ள மகன்களை மீட்க மாவட்ட நிர்வாகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு அலையும் தாயார் மல்லிகா, தந்தை செல்வராஜ்.

இதையடுத்து சிறையில் தற்போதுள்ள இரு இளைஞர்களின் பெற்றோரை பிபிசி தமிழ் சந்தித்து பேசியது. நம்மிடையே பேசிய இளைஞர்களின் தாய் மல்லிகா, "ஜூலை 17ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள பயிற்சி மையத்தில் காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை குரூப் 4 மாதிரி தேர்வு எழுதிவிட்டு, தென்வீரலூரில் உள்ள உறவினர் வீட்டுக்குபிள்ளைகள் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் கனியாமூரில் கலவரம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனால் கலவரம் ஓய்ந்த பிறகு வீட்டுக்கு செல்லலாம் என்று அங்கேயே இருந்துள்ளனர். பிறகு கலவரம் ஓய்ந்த தகவலறிந்து வீட்டுக்கு புறப்பட்டனர். கனியாமூர் தனியார் பள்ளி எல்லை அருகே சென்றபோது காவலர்கள் வழிமறித்துள்ளனர். இருவருமே தங்களது 'குரூப் 4' ஹால் டிக்கெட்டை காண்பித்துள்ளனர். ஆனாலும் அதை கிழித்துப் போட்டுவிட்டு இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்," என்கிறார்.

இந்த விவகாரத்தில் கலவரம் நடந்த ஜூலை 17ஆம் தேதி தனது இரண்டு மகன்கள் எங்கு சென்றனர், அவர்கள் மாதிரி தேர்வு எழுத சென்ற நேரம் முதல் வீடு திரும்பியது வரை உள்ள சிசிடிவி ஆதாரங்கள், தேர்வு மதிப்பெண் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்து, திருச்சி சிறையில் இருக்கும் மகன்களை விடுவிக்க வேண்டும் என்று இரு இளைஞர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்ற காவலில் இருந்த மகன்களை பிணையில் வெளியே எடுக்க முயன்ற முயற்சி பலன் கொடுக்காததால், அவர்களால் ஜூலை 24ஆம் தேதி நடந்த குரூப் 4 தேர்வை எழுத இயலவில்லை.

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, தாயார் மல்லிகா

"சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன்களை பார்த்தோம். தவறே செய்யாமல் எங்களை இந்த அரசு குற்றவாளியாக ஆகிவிட்டது என்று கூறி அழுகின்றனர்," என்கிறார் தாயார் மல்லிகா.

இளைஞர்களின் தந்தை செல்வராஜ், "எனது பிள்ளைகள் இருவருமே தாசில்தாராக வேண்டும், விஏஓ ஆக வேண்டும் என்று கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்து வந்தனர். அவர்களது கனவு வீணாகிவிட்டது. இனி சிறையில் இருந்து வெளியே வந்தால் கூட, இருவரையும் குற்றவாளிகள் போலத்தான் இந்த சமுதாயம் பார்க்கும். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அரசாங்கமே முன்வந்து உதவி செய்தால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும். இல்லையென்றால் அவர்கள் கனவு பாழாகும்," என்கிறார்.

மகனின் ஐபிஎஸ் கனவு - தந்தை உருக்கம்

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, கேசவன்

இதேபோல, கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சேலம் மாவட்டம் தலைவசால் பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞரும் ஒருவர். அவரது தந்தை கேசவன் பிபிசி தமிழிடம் பேசும்போது, வழிப்போக்கனாக அந்த பகுதி வழியாக சென்ற தனது மகனை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறுகிறார்.

சேலத்தைச் சேர்ந்த கேசவன், கேரளா மாநிலத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது மகன் கலவரத்தில் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே சாப்பிட முடியும் என்ற நிலையில்தான் இவரது குடும்பம் உள்ளது.

"எனது மகன் முதுகலை சமூகவியல் முடித்துவிட்டு, தற்போது இளங்கலை கல்வியியல் படித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு அரசு போட்டி தேர்வுகள் எழுதி வந்துள்ளார். அவனுக்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. ஆனால், இப்போது எல்லாம் தகர்ந்து விட்டது," என்கிறார் கேசவன்.

போலீஸ் தரப்பு பதில்

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் பகலவனை தொடர்பு கொண்ட பிபிசி தமிழ், கலவர சமயத்தில் முதல் கட்டமாக நடந்த கைது நடவடிக்கையின்போது தவறுதலாக சிலர் பிடிபட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர் முறையிடுவது குறித்து கேட்டது.

அதற்கு அந்த அதிகாரி, "பெற்றோர் அவர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தை சொல்கின்றனர். உண்மையிலேயே அவர்கள் கூறியபடி அங்கே அவர்களின் பிள்ளைகள் வந்தனரா இல்லையா அல்லது கடைசி நிமிடத்தில் அவர்கள் இணைந்தார்களா உள்ளிட்ட கோணத்தில் எல்லாம் எங்களுடைய விசாரணை நடந்து வருகிறது. பெற்றோரின் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையை பொருத்தவரை அப்பாவிகள் யாரும் கைதாகவில்லை என்றே கூறுவோம். வன்முறை நடந்து கொண்டிருக்கிறது என்றால் அந்த வன்முறை கும்பலில் இருக்கும் ஒவ்வொருவரும் அதற்கு பொறுப்புடையவர்கள். அதன் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்கிறார்.

இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்பட்டவர்கள் என்றும் எஸ்பி பகலவன் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் பெற்றோர் சிலர் காட்டும் ஆதாரங்கள் பற்றி குறிப்பிட்டபோது, "என்ன நடந்தது என்பது முழு விசாரணைக்கு பிறகே தெரியவரும். இதில் ஒவ்வொருவரின் பங்கு என்ன என்பதை முழுமையாக விசாரித்து வருகிறோம். அதற்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அந்த அதிகாரி பதிலளித்தார்.

மாவட்ட ஆட்சியர் உறுதி

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, ஷ்ரவன் குமார் ஜடாவத், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

இதே விவகாரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத்திடம் பிபிசி தமிழ் பேசியது.

"இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. பெற்றோர் சிலர் தங்களுடைய பிள்ளைகளுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி சில ஆதாரங்களை வழங்கியுள்ளனர். மகனை பிணையில் விடுவிக்கவும் கோரினர். மாவட்ட நிர்வாகத்தை பொருத்தவரை இதில் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்கு முக்கியத்தும் கொடுத்துள்ளோம். பிடிபட்ட நபர்கள் உண்மையிலேயே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம். யாராவது ஒரு நபர் காவல் துறையினர் தங்களை சும்மா பிடித்துவிட்டனர் என்று கூறினாலும் கூட, அவர்கள் கலவரம் நடந்த சுமார் ஒன்றரை மணி நேரம் எந்த பகுதியில் இருந்தனர் என்பது சரிபார்க்கப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்றார் ஆட்சியர்.

இந்த விஷயத்தில் உண்மையை சரிபார்க்க காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறார்கள். இறுதியில் பிடிபட்ட நபர் எந்த வகையிலும் கலவரத்துக்கு தொடர்பில்லை எனத் தெரிய வந்தால் அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தையும் காவல் துறையினர் நீக்கி விடுவார்கள். இதில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது ஒருபுறம் இருந்தாலும், தவறே செய்யாதவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதும் எங்களுடைய கடமை," என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: