இலவசங்கள், ஃப்ரீபிக்கள் என்பது பொருத்தமல்ல; அவை ஏற்றத்தாழ்வை போக்கும் சீர்திருத்த கருவிகள்: ஜெ. ஜெயரஞ்சன்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மாநில அரசுகள் மக்களுக்கு விலையில்லாப் பொருட்கள், இலவசத் திட்டங்களை அறிவிப்பது குறித்த விவாதம் தற்போது நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்தத் திட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பது குறித்தும் இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமை குறித்தும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சனிடம் உரையாடினார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.
அவரது பேட்டியிலிருந்து:
கே. தற்போது இந்தியா முழுக்க இலவசங்களை அளிப்பது சரியா, தவறா என்ற விவாதம் தீவிரமடைந்திருக்கிறது. இதில் உங்கள் கருத்து என்ன?
ப. இந்த விவாதத்தைத் தொடர்ந்து கவனிக்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. அதாவது, எது இலவசம் என்பதில் அவர்களுக்குக் குழப்பம் இருக்கிறது. இலவசமென்று இதைச் சொல்லவில்லை, அதைச் சொல்லவில்லை என்கிறார்கள். அப்படியானால், எதுதான் இலவசமென்று சொல்லுங்கள் என்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்கிறார்கள். ஒருவருக்கு இலவசமாகத் தெரிவது மற்றொருவருக்கு இலவசமாகத் தெரிவதில்லை.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்துவரும் விவாதங்களை எடுத்துப் படித்துப் பார்த்தால், முதல் நாள் சொன்னதற்கும் அடுத்த நாள் சொன்னதற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. இதெல்லாம் அடிப்படை உரிமைகள்;
அவற்றைக் கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை என்று ஒரு நாள் சொல்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. அதாவது உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செயல்படுத்தப்படுகிறது. இப்போது 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. புதிதாக பலர் பட்டியலில் சேர்ந்திருப்பார்கள். அவர்களுக்கும் சேர்ந்து அந்தச் சட்டத்தை செயல்படுத்துங்கள் என்கிறார்கள். அப்படியானால், இலவசங்களில் எதை வேண்டுமென்கிறார்கள், எதை வேண்டாமென்கிறார்கள் என்பதே புரியவில்லை.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக freebies என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் கட்டுபாடுகளற்ற சந்தை மீது நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள்தான், மக்களின் வரிப்பணத்தை இதுபோல வீணாக்கக்கூடாது என்று சொல்பவர்கள். சரி, அப்படியானால் மக்களின் வரிப் பணத்தை எப்படிச் செலவுசெய்ய வேண்டுமெனக் கேட்டால், அடிப்படை உள்கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்;
அப்படிச் செய்தால் பொருளாதாரம் வளரும் என்பார்கள். Trikle down என்ற கருத்தாக்கத்தை முன்வைப்பார்கள். அதாவது பொருளாதாரம் வளரும்போது எல்லோரும் வளருவார்கள் என்பதுதான் அதன் அர்த்தம். ஆனால், அப்படி நடந்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கே மட்டுமில்லை. எங்கேயுமே அப்படி நடந்ததில்லை. அப்படியிருக்கும்போது இன்னமும் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கே. இலவசப் பொருட்கள், நலத் திட்ட உதவிகள் என்று பிரிப்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?
ப. அதைப் பகுத்தறிந்து சொல்வது யார்? கல்லூரிக்குப் போகும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்பது நலத்திட்டமா, இலவசமா? உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 ரூபாய்க்கு அரிசியும் 2 ரூபாய்க்கு கோதுமையும் தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுகிறதே, அது இலவசமா அல்லது நலத்திட்டமா?
மதிய உணவுத் திட்டத்தை ஒரு காலத்தில் இலவசம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். தில்லியில் இருக்கும் திட்டக் குழுவே அதைத்தான் சொன்னது. 20 ஆண்டுகள் கழித்து எல்லா பள்ளிக் குழந்தைகளுக்கும் மதிய உணவு அளிக்க வேண்டுமென நீதிமன்றமே உத்தரவிடுகிறது. ஆகவே பார்வை மாறிக்கொண்டே இருக்கிறது. நாம் முன்னோடியாக அதைச் செய்யும்போது குற்றம் சொல்கிறார்கள்.

இவ்வளவு ஏன், தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மத்திய திட்டக் குழுவில் மதிய உணவுத் திட்டத்தை முன்வைத்தபோது, அப்போது திட்டக் குழுவில் இருந்த மன்மோகன் சிங் அதனை விமர்சித்ததால் எம்.ஜி.ஆர். கோபித்துக் கோண்டு வெளியேறியதெல்லாம் வரலாற்றில் இருக்கிறது. முதலில் வீண் செலவு என்பார்கள், பிறகு ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே, பகுத்துப் பார்க்க, எங்கே கோடு கிழிப்பார்கள், எந்த அளவுகோலை வைத்து முடிவெடுப்பார்கள் என்பதே புரிபடவில்லை.
கே. இலவசங்களை ஏற்றுக்கொள்பவர்கள்கூட இலவச டிவி, மிக்ஸி ஆகியவற்றை ஏற்பதில்லை...
ப. இதனால் பயனடையக் கூடியவர்கள் பெண்கள். இந்த இலவசங்கள் கூடாது என்று சொல்லும் எந்த ஆணும் வீட்டு வேலையில் பங்கெடுப்பதில்லை. அந்தப் பெண்கள்தான் எங்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் வேண்டாம், நாங்கள் முதுகொடிய கல்லில் அரைக்கிறோம் என்று சொன்னால், நாம் அந்தத் திட்டத்தை வேண்டாம் என்று சொல்லலாம். மிக்ஸி, கிரைண்டர் போன்றவை பெண்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் என்று கருதி இந்தப் பொருட்களைக் கொடுத்தால், அவற்றைக் கொடுக்கக்கூடாது, பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்று சொல்வதில் என்ன லாஜிக் இருக்கிறது என்று புரியவில்லை.
கே. இலவசங்கள் குறித்த ஒட்டுமொத்த விவாதமுமே ஆம் ஆத்மி கட்சி இலவச மின்சாரம் குறித்து அறிவித்ததில் இருந்துதான் ஏற்பட்டது. மின்சாரம் போன்ற தொடர்ச்சியாக செலவை ஏற்படுத்தக்கூடியவற்றை இலவசமாகக் கொடுப்பது மாநிலத்தின் நிதி நிலையைக் கடுமையாகப் பாதிக்காதா?
ப. நிதி நிலை பாதிக்கப்படுவது என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்தியாவில் கூட்டாட்சி அமைப்பு இருக்கிறது. கூட்டாட்சி என்றால் மாநிலங்களுக்கு ஒரு அரசு, மத்தியில் ஒரு அரசு. ஆனால், வரி விதிப்பு முறையில் ஒரு ஏற்றத்தாழ்வு இருக்கிறது. வரி விதிப்பைப் பொறுத்தவரை, எது வசதியாக இருக்கிறதோ, அதுதான் விதி. அந்த வகையில் மத்திய அரசிடம் கூடுதல் வரி விதிப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பொறுப்புகள் மாநிலங்களுக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முரண்பாட்டைச் சரிசெய்வதற்காகத்தான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி கமிஷன் அமைக்கப்படுகிறது. அந்த நிதி கமிஷன், வரியை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று தீர்மானிக்கிறது. தற்போதைய நிதி கமிஷனைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்கு 60 சதவீதமும் மாநில அரசுக்கு 41 சதவீதமும் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நடைமுறையில் 29 சதவீதம்தான் வருகிறது. மீதியை அவர்களே வைத்துக்கொள்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
மாநில நிதி நிலைமை மோசமாகிறதே என்று பேசுபவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், 30 லட்சம் கோடி வரி வசூல் செய்வதில் 20 சதவீதத்தை சிறப்பு வரி என்று எடுத்துக் கொள்வதை கேட்க வேண்டும். அதை மாநிலங்களோடு பிரித்துக்கொள்ள மாட்டார்கள். அந்தத் தொகை கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடி. இந்த ஆறு லட்சம் கோடியைப் பிரித்துக்கொடுத்தால் மாநிலங்களின் நிதிச் சிக்கலை சரிசெய்யலாமே. இல்லாவிட்டால், மாநிலங்களுக்கு 41 சதவீதத்திற்குப் பதிலாக ஐம்பது சதவீதம் கொடுக்கலாமே...ஆனால், அதைப் பற்றியெல்லாம் எதுவுமே பேசாமல், மாநிலங்கள் நிதிச் சிக்கலில் சிக்கிவிடும் என்று சொன்னால் எப்படி? நீங்கள் ஏன் மாநிலத்தைப் பிழிகிறீர்கள்? 41 சதவீதத்திற்குப் பதிலாக 29 சதவீதத்தைக் கொடுத்துவிட்டு, இதைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?
அடுத்ததாக மாநிலங்களின் கடனைப் பற்றிப் பேசுகிறார்கள். மாநிலங்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடன் வாங்குவதற்கு வரம்பு இருக்கிறது. மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3.5 சதவீதம்தான் கடன் வாங்க முடியும். அதுதான் சட்டம். ஆனால் அந்தச் சட்டத்தை மத்திய அரசு மதிப்பதே இல்லை. அவர்கள் மேலும் மேலும் கடன் வாங்குகிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் 100 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியிருக்கிறார்கள். மாநிலங்கள் வாங்கி வைத்துள்ள கடனை எதிர்கால சந்ததிதானே செலுத்த வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் நீங்கள் வாங்கி வைத்திருக்கக்கூடிய கடனை யார் செலுத்துவது? இங்கிருக்கும் குடிமக்கள்தானே அதையும் கட்டப்போகிறார்கள்? எதிர்கால சந்ததிதான் அதையும் செலுத்தப் போகிறார்கள். இதெல்லாம் அர்த்தம் இல்லாத பேச்சு.
கே. இலவசங்களில் இன்னொரு பிரச்சனை, அவை எல்லோருக்கும் கொடுக்கப்படுவது. தேவை இருக்கிறதோ, இல்லையோ பணக்காரர்களும் அவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். இது சரியான அணுகுமுறையா?
ப. இம்மாதிரி விஷயங்களில் தேவையா, தேவை இல்லையா என்பதில் அவரவர் தேர்வுசெய்வதுதான் சிறந்தது. ஏனென்றால் தேவை உள்ள ஆட்களைத் தேர்வுசெய்ய திறன் வாய்ந்த அமைப்பு கிடையாது. ஏனென்றால், அதற்கான துல்லியமான தகவல்கள் நம்மிடம் இல்லை. ஒவ்வொரு நபரின் வருமானம் குறித்த சரியான தரவுகள் இப்போதுவரை இல்லை. வருமான வரிச் சான்றிதழ்கள் தாசில்தாரால் வழங்கப்படுகின்றன. ஒருவரின் சரியான வருவாய் அறிந்து அவை தரப்படுகின்றனவா? உண்மையான வருவாயைக் கண்டறிய ஏதாவது வழியிருக்கிறதா?
அதனால்தான், நாம் செலவுகளை வைத்துத்தான் வருவாயைக் கணிக்கிறோம். அப்படி இருக்கும் சூழலில் எப்படி சரியான ஆட்களை அடையாளம் காண்பது? இது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை.
பொருட்களைக் கொடுப்பதில் இரண்டு தவறுகள் நடக்கும். ஒன்று, தகுதியில்லாதவர்கள் பொருட்களை வாங்குவது. இரண்டாவதாக, தகுதியானவர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டுப்போவது. Exclusion error. தகுதியான நபர் விடுபட்டுவிட்டால், அவர் மீண்டும் அந்தப் பட்டியலில் இடம்பெறுவது கிட்டத்தட்ட இயலாத காரியம். தேவைப்படாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதைவிட பெரிய தவறு, தேவைப்படுபவர்களுக்கு கொடுக்காமல் இருப்பது. இதில் எது பெரிய தவறு என்றால், ஒருவர் பசியோடு போய் படுப்பதுதான். இன்னொருவர், அதிகம் சாப்பிட்டால்கூட பரவாயில்லை, யாரும் பசியோடு படுக்கக்கூடாது. அதுதான் முக்கியம்.
கே. இந்த விவகாரத்தை எல்லோருமே விவாதிக்கலாமே, நீதிமன்றங்கள் இது குறித்துப் பேசுவதை ஏன் அரசியல் கட்சிகள் எதிர்க்க வேண்டும்?
ப. எல்லா ஜனநாயகங்களிலும் அதிகாரம் பிரிக்கப்பட்டிருக்கும். குடிமகன் மீது செலுத்தப்படும் அதிகாரம் ஓரிடத்தில் குவியக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்திருப்பார்கள். எல்லா நாட்டின் அரசமைப்புச் சட்டத்திலும் அப்படித்தான் இருக்கும். நாடாளுமன்றங்களும் சட்டமன்றங்களும் சட்டங்களை இயற்றுவது ஒரு அதிகாரம். இப்படி இயற்றக்கூடிய சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும்.
நாடாளுமன்றமும் சட்டமன்றமும் நீதிமன்றங்களும் எடுக்கும் முடிவுகளைச் செயல்படுத்தும் பணி நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் அதிகாரத்தில் மற்றொருவர் தலையிட முடியாது. நீதிமன்றத்திற்கென உச்ச அதிகாரம் ஏதும் இல்லை. அப்படியிருந்தால், அவர்களே சட்டம் இயற்றலாம். அப்படிச் செய்வதில்லை. எப்போதுமே, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குத்தான் கூடுதல் அதிகாரம். ஆகவே, நிதியை எப்படிச் செலவு செய்வது என்பதை நாடாளுமன்றமும் சட்டமன்றமும்தான் தீர்மானிக்க வேண்டும். நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியாது. அதிகாரம் அப்படி பகிரப்படவில்லை. அப்படியிருந்தால், நிதிநிலை அறிக்கையை அவர்களே உருவாக்கலாமே...

பட மூலாதாரம், Getty Images
கே. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் விவாதித்தால், எந்த அரசியல் கட்சியும் இலவசங்களை வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது...
ப. இதைக் கேட்க அரசியலமைப்பின்படி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா? அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நாடாளுமன்றமும் நிர்வாகமும் இயங்குகிறதா என்பதைப் பார்க்க வேண்டியதுதான் நீதிமன்றத்தின் வேலை. இல்லாத அதிகாரத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
கே. ஒரு அரசு மக்களின் வரிப் பணத்தை மோசமாக செலவுசெய்தால், அதைக் கட்டுப்படுத்துவது யார்? அதை யாரும் கேட்கக்கூடாதா?
ப. வேறு அரசியல் கட்சிகள் கேட்கலாமே.. மக்கள் கேட்கலாம். ஐந்தாண்டுகள் கழித்து மக்களிடம்தானே வாக்குக் கேட்டு வரவேண்டும். இந்தியாவின் இறையாண்மை என்பது இந்திய மக்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. வாக்களிக்கும் அவருக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை. மக்கள் செய்ய வேண்டியதை நீங்கள் செய்யக்கூடாது. நாடாளுமன்றம் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்யக்கூடாது.
கே. அவசியமான பொருட்களைக் கொடுப்பதை ஏற்கிறோம், ஆனால், தேவையில்லாத பொருட்களைக் கொடுக்கக்கூடாது என பா.ஜ.க. போன்ற கட்சிகள் சொல்கின்றன...
ப. ஆனால், அதைச் சொல்வதற்கு அவர்கள் யார்? எது தேவை, எது தேவையில்லை என்று சொல்வதற்கு அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? அதெப்படி அவர்கள் முடிவுசெய்ய முடியும்? மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசு இருக்கிறது அதை முடிவுசெய்ய. இவர்கள் யார்? நிச்சயமாக அவர்கள் கேள்வி கேட்கலாம். ஆனால், எந்த அடிப்படையில் தேவை, தேவையில்லை என்பதை பிரிக்கிறோம் என்று சொல்ல வேண்டும்.
கே. பிரதமர் இதனை ரேவரி கலாச்சாரம் என்று விமர்சிக்கிறார். அதாவது, இலவசங்களை அறிவிப்பதன் மூலம் வாக்குகளை வாங்குகிறார்கள் என்று கூறுகிறார்.. இலவசங்களை அறிவித்து வாக்குகளைப் பெற முடியுமா?
ப. தமிழ்நாட்டின் அனுபவம் என்ன? எந்தத் தேர்தலிலாவது, இலவச வாக்குறுதிகளால் ஒரு கட்சி வென்றதாகவோ, தோற்றதாகவோ சொல்ல முடியுமா?
கே. 2006ஆம் ஆண்டை உதாரணமாக சொல்லலாமே.. தொலைக்காட்சி கொடுப்பதாகச் சொன்னதால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாக சொல்ல முடியாதா?
ப. அதற்கு முன்பாக என்ன நடந்ததோ, அதுதான் அப்போதும் நடந்தது. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இடையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. 1988க்குப் பிறகு ஆட்சி மாறி மாறிதானே வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, 2006ல் நடந்ததற்கு மட்டும் தொலைக்காட்சி வாக்குறுதியை காரணமாகச் சொல்ல முடியும்?
வாக்காளர்களுக்கு எல்லாக் கட்சிக்காரர்களும் பணம் கொடுக்கிறார்கள். ஆனால், யாரோ ஒருவர்தானே ஜெயிக்கிறார்? யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை வாக்காளர்கள் காசு வாங்குவதற்கு முன்பாகவே முடிவுசெய்துவிடுகிறார்கள். எல்லோருக்கும் வாக்குரிமை உள்ள ஒரு இடத்தில், யார் எதை வைத்து வாக்களிப்பார் என்பது யாருக்குமே தெரியாது.
கே. 2011லும்கூட ஜெயலலிதா அளித்த மிக்ஸி, கிரைண்டர் இலவசம் என்று அளித்த வாக்குறுதிகள்தான் அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன என்ற கருத்தும் இருக்கிறது..
ப. இதெல்லாம் வெற்றிக்குப் பிறகு சொல்லப்படும் காரணங்கள். இதற்கெல்லாம் என்ன அடிப்படை இருக்கிறது? ஜெயலலிதா தோற்ற தேர்தல்களில் இதுபோல வாக்குறுதிகளைத் தரவில்லையா அல்லது பணம் கொடுக்கவில்லையா? வாக்காளர்களை இதுபோல மதிப்பிட முடியாது. அதுதான் நமது அனுபவம்.
கே. ஆனால், இலவசங்களை எவ்வளவு நாட்களுக்கு இப்படி கொடுத்துக் கொண்டேயிருக்கப் போகிறோம்?
ப. எவ்வளவு நாட்களுக்குத் தேவையோ, அவ்வளவு நாட்களுக்குக் கொடுக்கப் போகிறோம். ஏனென்றால் எது தேவை என்ற நிலவரம் மாறிக்கொண்டேயிருக்கிறது. 30- 40 ஆண்டுகளுக்கு முன்பாக சோறே மிகப் பெரிய பிரச்சனை. அப்போது பசியை அகற்றுவதுதான் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. 2,000 ஆண்டுகளாக தொடர்ந்த பிரச்சனை அது. ஆகவே பசியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைத்தோம். அதற்கு இவ்வளவு நாட்களாகியிருக்கிறது.
வறுமைக் கோட்டின் விளிம்பில் இருப்பவர்கள் அந்தக் கோட்டின் கீழேயும் மேலேயும் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களைக் கூர்ந்து கவனித்து, அவர்கள் மேலே செல்லும்போது இலவசங்களை நிறுத்துவதும், கீழே வரும்போது மீண்டும் கொடுப்பது சாத்தியமா? நாம் தொடர்ந்து வளரும்போது, மிகப் பணக்கார நாடாக உருவெடுக்கும்போது இந்தத் தேவைகள் மறைந்துவிடும். அதற்குப் பதிலாக வேறு தேவைகள் வரும்.

உதாரணமாக, சுகாதாரத் துறையை எடுத்துக்கொண்டால், 30 ஆண்டுகளுக்கு முன்பாக தொற்று நோய்கள்தான் மிகப் பெரிய பிரச்சனை. அதை ஒழிப்பதில் கவனம் செலுத்தினோம். ஆனால், சமுதாயம் வளர வளர இப்போது தொற்றா நோய்கள்தான் மிகப் பெரிய பிரச்சனை. ஒரு மாநில அரசு, நான் தொற்று நோய்களை மட்டும்தான் கவனிப்பேன், பிற நோய்களைக் கவனிக்க மாட்டேன் என்று சொல்ல முடியுமா?
எல்லா விஷயமும் எல்லா மனிதருக்கும் கிடைக்காது. அம்மாதிரி சூழலில், ஒரு மனிதனை தகுதி வாய்ந்தவனாக வைத்திருப்பது, திறம் மிக்கவனாக உருவாக்குவது அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். அதைச் சாதிக்க, இதையெல்லாம் தொடர்ந்து செய்ய வேண்டும். சந்தைப் பொருளாதாரம் வளர்ந்துகொண்டே செல்லும்போது, பொருளாதார ஏற்றத்தாழ்வும் வளர்ந்துகொண்டே போகிறது. அந்த ஏற்றத் தாழ்வை சமன் செய்வதுதான் பெரிய வேலை.
மாநில அரசால் நேரடி வரி விதிக்க முடியவில்லை. அந்த அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. அவர்கள் எதையும் செய்வதில்லை. நமக்கு மறைமுக வரி விதிக்கும் அதிகாரம்தான் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று பார்க்கிறோம். இன்று தமிழ்நாட்டில் ஏழ்மை ஏன் 4 சதவீதம் அளவுக்குத்தான் இருக்கிறது? நாம் சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதால்தான் ஏழ்மை இவ்வளவு குறைவாக இருக்கிறது. இதையெல்லாம் அவர்கள் கவனிக்க மறுக்கிறார்கள்.
கே. ஆகவே, இலவசங்கள் குறித்து யாரும் விவாதிக்கவே கூடாதா?
ப. விவாதிக்கலாம். ஆனால், அந்த விவாதம் அறிவுசார்ந்து, தகவல்சார்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லை. பொது விநியோகத் திட்டம் வந்து, எல்லோருக்கும் அரிசி கிடைப்பதற்கு முன்பிருந்த அவல நிலை இவர்களுக்குத் தெரியுமா? தெரிந்தும் இவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்களா? நிலமற்ற தொழிலாளர்கள், நிலவுடமையாளர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது. இத்தனை ஆயிரம் கோவில்களும் மடங்களும் அப்போது சோறு போடவில்லை. அதை எப்படி மாற்ற முடிந்தது? பொது விநியோகத் திட்டத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்ததன் மூலம் அதை மாற்றினோம். ஒரு அட்டையைக் கொடுத்து அதன் மூலம் குறைந்த விலையில் அரிசியும் பிறகு விலையில்லாமல் அரிசியும் கொடுத்ததான் மூலம் அவர்களுக்குக் கிடைத்த விடுதலையைப் பற்றி இவர்கள் யாராவது பேசுகிறார்களா? உணவு விடுதலை வேண்டும். பசியிலிருந்து விடுதலை வேண்டும். அதை Freebies என்று சொன்னால், அது உங்கள் பார்வையில் உள்ள கோளாறு என்றுதான் சொல்வேன். நான் அதை மிகப் பெரிய சீர்திருத்தக் கருவி என்று சொல்வேன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














