You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு அளித்த 'அந்த' பரிசு பெட்டி - முழு விவரம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது, அவருக்கு தமிழ்நாட்டின் மரபான தானியங்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்திருக்கிறார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன தானியங்கள் இருந்தன? அவற்றின் முக்கியத்துவம் என்ன?
டெல்லிதக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் மாலையில் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவற்றின் ஒவ்வொரு விதை குரித்தும் கேட்டறிந்த பிரதமர் அவற்றை பிரதமர் இல்ல வளாக தோட்டத்தில் விதைப்பதாக கூறினார்.
தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகளும் பலவகை சிறு தானியங்களும் தற்போதும் பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தானியங்களின் தொகுப்பைத்தான் பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.
அந்த தானிய பெட்டகத்தில் மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்புக்கவுனி, சீரக சம்பா, குடவாழை ஆகிய அரிசி வகைகளும் கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு ஆகிய சிறுதானியங்களும் அடங்கியிருந்தன.
இந்த தானியங்களின் சிறப்பு என்ன?
சிவப்பு நிறத்தில் உள்ள மாப்பிள்ளை சம்பா 'ஆன்ட்டி ஆக்சிடன்ட்' தன்மை கொண்டது. குள்ளக்கார் என்ற அரிசி பாலூட்டும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரக்கூடியது.
கருப்புக் கவுனி அரிசியைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக அரசர்களுக்காக மட்டுமே பயிரிடப்பட்ட அரிசி அது. ஆந்தோசயனைன் நிறைந்த அந்த அரிசி புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.
சீரக சம்பா அரிசியைப் பொறுத்தவரை, பாலாற்றங்கரையில் பரவலாகப் பயிரிடப்படும் அரிசி. தனித்துவமான நறுமணத்தையும் சுவையையும் கொண்ட அரிசி இது.
குடவாழை என்ற அரிசியும் சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். இந்த அரிசி தோலுக்கு பொலிவை அளிக்கக்கூடியது. டெல்டா மாவட்டங்களில் விளையக்கூடியது.
சிறுதானியங்களில் கம்பு என்று அழைக்கப்படும் தானியம், அருந்தானியங்களின் அரசன் என்று கூறப்படுகிறது. அரிசியை விட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கொண்டது இந்த தானியம். மிக மெதுவாகவே சக்தியைவெளிவிடும் என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த அரிசி இது.
வரகு என்ற தானியமும் கம்பைப் போலவே லோ கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்ட தானியம்தான். இலக்கியத்தில் தமிழ் மூதாட்டி அவ்வை கேட்டு உண்ட தானியமாக இது குறிப்பிடப்படுகிறது.
சாமை என்பது பழங்குடி மக்களின் முக்கியமான தானியங்களில் ஒன்று. மருத்துவ குணமிக்க சிறுதானியம். பொன்னிறம் கொண்ட தினை என்ற தானியம் கண்களுக்கு நல்லது. வளரும் குழந்தைகளுக்கும் நலம் தரக்கூடியது.
கேழ்வரகு இரும்பும் கால்சியமும் நிறைந்த ஒரு தானியம். தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு இதுதான் என பாரம்பரிய மருத்துவர்கள் கருதுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்