You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: இந்தியா ஏன் மெளனம் காக்கிறது?
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' மற்றும் 'சாத்தானின் வசனங்கள்' போன்ற நாவல்களை எழுதிய சல்மான் ருஷ்டி கடந்த வாரம் வெள்ளியன்று, அமெரிக்காவில் இலக்கிய நிகழ்வொன்றில் இளைஞர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் அவரது ஒரு கண் மற்றும் கல்லீரல் சேதமடைந்தது. முதலில் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.ஆனால் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது அவரால் பேச முடிகிறது.
ருஷ்டியின் "சாத்தானின் வசனங்கள்" என்ற புத்தகம் 1988 இல் வெளிவந்தது, அந்த புத்தகம் முகமது நபியை இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
புத்தகம் வெளியான ஒரு வருடத்திற்குப் பிறகு, 1989 இல், இரானின் உச்ச மதத் தலைவர் ஆயடூலா ருஹோல்லா கமேனி அவரை கொலை செய்ய (ஃபட்வா) உத்தரவிட்டார்.
இதற்குப் பிறகு ருஷ்டி ஒரு தசாப்த காலம் தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இருப்பினும் அந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஏஜென்சிகள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்தன.
ஆனால் ருஷ்டி தனது ரகசிய மறைவிடங்களை விட்டு 1990 களின் பிற்பகுதியில் வெளியே வரத் தொடங்கினார். ருஷ்டியை படுகொலை செய்யும் ஆணையை தான் ஆதரிக்கப் போவதில்லை என்று 1998இல் இரான் கூறியது.
வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குப் பிறகு, ருஷ்டிக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் அரசுகள் அறிக்கைகளை வெளியிட்டன. கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக ருஷ்டியை தலைமறைவாக வாழும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கிய இரான், ஆரம்பத்தில் இந்த சம்பவம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலுக்கு சல்மான் ருஷ்டியும், அவரது ஆதரவாளர்களுமே பொறுப்பு என்று இரான் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சொன்னது என்ன ?
ஆனால் இந்திய அரசோ , அரசியல் கட்சிகளோ இந்த சம்பவம் குறித்து மெளனம் காத்து வருகின்றன. இந்தியாவின் முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கூட ருஷ்டி மீதான தாக்குதல் விஷயத்தில் பேசுவதைத் தவிர்த்தனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து கேட்டபோது, "நானும் அதைப் பற்றி படித்தேன். இது முழு உலகமும் கவனித்த ஒரு சம்பவம். பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்த ஒரு சம்பவம் என்று நான் கருதுகிறேன்,"என்றார்.
சிபிஐ(எம்) பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்பி சசி தரூர், கட்சியின் ஊடகத் தலைவர் பவன் கேரா மற்றும் சிவசேனை எம்பி பிரியங்கா சதுர்வேதி ஆகியோர் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு தனிப்பட்ட முறையில் கண்டனம் தெரிவித்த சில தலைவர்கள். ஆனால் இது குறித்து பாஜகவோ, மோதி அரசோ, காங்கிரஸோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
'சாத்தானின் வசனங்கள்' இந்தியாவில் ஏன் தடை செய்யப்பட்டது?
சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்து, பின்னர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். ஆனால் 1988-இல் 'தி சாடானிக் வெர்ஸஸ்' - சாத்தானின் வசனங்கள் - வெளியான பிறகு ஏற்பட்ட சர்ச்சை இந்தியாவுடன் ஆழமான தொடர்பு கொண்டது. அப்போது இந்தியாவில் ராஜீவ் காந்தி அரசு பதவியில் இருந்தது. அவரது அரசு இந்தப்புத்தகத்தை தடை செய்ய முடிவு செய்தது. இந்தப் புத்தகத்தைத் தடை செய்த முதல் நாடு இந்தியா.
அப்போது ருஷ்டியே, புத்தகத்தை தடை செய்ததற்கு அதிருப்தி தெரிவித்து ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். 1990ல் எழுதிய ஒரு கட்டுரையில், "புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, முஸ்லிம் வாக்கு வங்கியின் சக்தியின் வெளிப்பாடு. காங்கிரஸ் இந்த வாக்கு வங்கியை நம்பியே உள்ளது. அதை அக்கட்சியால் இழக்க முடியாது," என்று ருஷ்டி குறிப்பிட்டிருந்தார்.
ராஜீவ் காந்தி அரசு 'சாத்தானின் வசனங்கள்' புத்தகத்தை தடை செய்தபோது, கே. நட்வர் சிங் வெளியுறவு அமைச்சராக இருந்தார். ருஷ்டி மீதான தாக்குதல் விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், நட்வர் சிங்கிடம் கேட்டபோது, "சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. முஸ்லிம் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை,"என்று அவர் பதிலளித்தார்.
ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து காங்கிரஸிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளிவராதது கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையுடன் தொடர்புடையது என்றே தோன்றுகிறது. கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி, மோதி அரசை தொடர்ந்து குறைகூறிவருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
சல்மான் ருஷ்டியின் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' நாவலை ஹிந்தியில் மொழிபெயர்த்த மூத்த பத்திரிக்கையாளர் பிரியதர்ஷன், "இப்போது காணப்படும் மதவெறியின் ஒரு முனையில் , பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நிற்கின்றன. அப்படி இருக்கும்போது கருத்து சுதந்திரத்தை ஆதரித்து சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை அவற்றால் எப்படிக் கண்டிக்க முடியும்" என்று குறிப்பிட்டார்.
"இந்த விவகாரத்தை அரசு கண்டனம்தான் செய்திருக்கவேண்டும். ஆனால் அரசுகள் பெரும்பாலும் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதில்லை," என்று அவர் கூறுகிறார். "கீதாஞ்சலி ஸ்ரீ, புக்கர் பரிசை பெற்றபோதும் அரசு எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த விஷயத்தில் அரசு வாழ்த்து தெரிவித்திருக்கலாம். இலக்கியம் மற்றும் கலாசாரம் போன்ற விஷயங்கள் இந்த அரசின் ஆர்வத்திற்கு அப்பாற்பட்டவை என்று நான் நினைக்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார்.
மோதி அரசின் நிலைப்பாடு
மோதி அரசு இந்த விவகாரம் குறித்து பேசாமல் இருப்பது ஏன்? தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்தது போல் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை அது ஏன் கண்டிக்கவில்லை?
இந்த தாக்குதலை அரசு கண்டித்திருந்தால், இந்தியாவை நெருங்கும் அரபு உலக நாடுகள் கோபமடைந்திருக்கலாம். நூபுர் ஷர்மாவின் அறிக்கைக்கு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட எதிர்வினையும் இந்த மௌனத்தின் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.
அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு விசா வழங்கியதை அடுத்து சல்மான் ருஷ்டி 2000 -ஆவது ஆண்டில் இந்தியா வந்தார். ருஷ்டியின் இந்திய வருகையை பாஜக இனி குறிப்பிடக்கூட முடியாது. ருஷ்டியைப்பற்றிக் குறிப்பிட்டால் பழைய விஷயங்கள் வெளிவரலாம் என்பதால் அரசு கருத்து ஏதும் கூறாமல் உள்ளது.
"அரசு பேசினால், பழைய விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். இரண்டாவதாக சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை அரசு எப்படி கண்டிக்கும்? ஏனெனில் அவர் எல்லா வகையான அடிப்படைவாத செயல்களுக்கும் எதிரானவர். முஸ்லிம் மதவெறியாக இருந்தாலும் சரி இந்து மதவெறியாக இருந்தாலும் சரி, அவர் மதவெறிக்கு எதிரானவர்," என்று ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரப் பேராசிரியர் ஜபின் டி. ஜேக்கப் குறிப்பிட்டார்.
"இந்த நேரத்தில் அரசின் முன்னுரிமை சுதந்திரத்தின் அம்ரித் மஹோத்ஸவ்தான். இது தவிர வெளிநாடுகளைப்பொருத்தவரை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பலின் வருகை தொடர்பான விஷயம்தான் அதன் முன்னுரிமையாக இருந்தது. அதனால்தான் சல்மான் ருஷ்டியின் விவகாரத்திற்கு அரசு கவனம் தராமல் இருந்திருக்கலாம்," என்றார் அவர்.
அமைதியாக இருப்பதற்கு மூன்று காரணங்கள்
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் தொடர்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெளியான அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அரசுஅல்லது அரசியல் கட்சிகள் மட்டத்தில் குறிப்பிடத்தக்க சலசலப்பு எதுவும் காணப்படவில்லை. கருத்து சுதந்திரத்தின் பாதுகாவலரான நவீன ஜனநாயகம் என்ற இந்தியாவின் கூற்றை இது கேள்விக்குள்ளாக்கலாம்.
இந்த விவகாரம் குறித்து 'தி பிரிண்ட்' பத்திரிகையின் அரசியல் ஆசிரியர் டி.கே.சிங் பிபிசியிடம் பேசுகையில், "கருத்து தெரிவிக்காததற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம், சித்தாந்த அளவில் எதிர்க்கட்சிகள் மிகவும் குழப்பத்தில் உள்ளன. மதச்சார்பின்மை என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. எது இந்துக்களை கோபப்படுத்தும், எது முஸ்லிம்களை கோபப்படுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரசியல் கட்சியின் நிலைப்பாடு இப்போது இல்லை. அவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்," என்றார்.
"ஆளும் கட்சி அதாவது மோதி அரசைப் பொருத்த வரையில், நூபுர் ஷர்மாவின் அறிக்கைக்குப் பிறகு சில முஸ்லிம் நாடுகளுடனான இந்தியாவின் உறவில் ஏற்பட்ட பதற்றம் போன்ற சூழ்நிலையை மீண்டும் உருவாக்க அது விரும்பவில்லை. மூன்றாவது விஷயம், இந்த விஷயம் இப்போது மிகவும் பழையது. இது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் பழமையான விஷயம். அதன் எதிரொலி கேட்பது இப்போது நின்றுவிட்டது. புதிய தலைமுறைக்கு இந்த விஷயத்தில் எந்த தொடர்பும் இல்லை. இப்போது இந்த விவகாரத்தால் எந்த அரசியல் லாபமும் கிடைக்காது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் வெளியாகவில்லை," என்று டி.கே.சிங் மேலும் கூறினார்.
ருஷ்டி மீதான தாக்குதலுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டின் முஸ்லிம் அமைப்புகளும் எதிர்வினையாற்றவில்லை. ருஷ்டியை தாக்கியவரை ஆதரித்தால், தாங்கள் இங்கு குறிவைக்கப்படலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் மீது ஒரு மதவெறி நிரம்பிய, அடிப்படைவாத சமூகம் என்று முத்திரை குத்தப்படலாம்.
"முஸ்லிம் சமூகத்தின் பிற்போக்குக் கூறுகளைத் தவிர, முற்போக்கு அணியில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பரவலான ஆதரவு இல்லை. நாம் பிற்போக்குவாதிகளை எடுத்துக்கொண்டால் தாங்களும் குறிவைக்கப்படக்கூடும் என்று பயப்படுவதால், அவர்கள் நிச்சயமாக சிறிது எச்சரிக்கையாக இருக்கிறார்கள்,"என்று டி.கே.சிங் குறிப்பிட்டார்.
இந்த மௌனம் சரியா?
ஆயினும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற, இந்தியாவில் பிறந்த சல்மான் ருஷ்டி போன்ற சிறந்த எழுத்தாளர் மீதான தாக்குதல் குறித்து மௌனம் சாதிப்பது இந்தியா போன்ற ஒரு பெரிய சக்தியின் பிம்பத்திற்கு ஒத்துப்போகிறதா?
"அரபு நாடுகளுடனான உறவுகள் மீண்டும் மோசமடையக்கூடாது என்று நினைப்பது ஓரளவு சரிதான். ஆகவே இது குறித்து மோதி அரசு எதுவும் கூறவில்லை. ஆனால் இதுபோன்ற விவகாரத்தில் மௌனம் சாதிப்பது நல்லதல்ல. சில விஷயங்களில் தெளிவான நிலைப்பாடு எடுக்கப்பட வேண்டும்,"என்று வரலாற்றாசிரியர் புருஷோத்தம் அகர்வால் சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்