ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு - பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்தவர்

பட மூலாதாரம், Getty Images
இந்திய தொழிலதிபரும், பிரபல பங்குச்சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று மும்பையில் காலமானார்.
அவர் இறப்புக்கான காரணம் இதுவரை அலுவல் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிபிசிக்கு கிடைத்த தகவல்களின்படி, அவர் சிறுநீரக செயலிழப்பால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது.
இந்தியாவின் 'வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படும் இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தி 1991ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றத்தால் பலன்பெற்ற முதலீட்டாளர்கள் தலைமுறையைச் சேர்ந்தவர் இவர்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார் .
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
எப்படி பணம் சம்பாதித்தார்?
வருமான வரித்துறை அதிகாரியின் மகனான, ஜுன்ஜுன்வாலா, தன் சிறுவயதில் தந்தையைப் பார்த்து முதலீடுகள் மீது ஆர்வம் கொண்டார்.
1985 ஆம் ஆண்டு, தன் 25ஆவது வயதில் பங்குச் சந்தையில் முதன்முதலாக முதலீடு செய்யத் தொடங்கினார். அதுவும் கூட அவரது உறவினரிடம் கடன் வாங்கிய 100 அமெரிக்க டாலர்கள் மூலம் தொடங்கினார் என்று தகவல்கள் கூறுகின்றன.
பின்னர் அவர் ராரே நிறுவனத்தை தொடங்கினார். தனது பெயரின் முதல் இரு எழுத்துகள், தன் மனைவி ரேகாவின் பெயரிலிருந்து இரு எழுத்துகள் சேர்த்து (RaRe) இந்த பெயர் உருவாக்கப்பட்டது.
பரிட்சார்த்த முயற்சிகளை எடுப்பதில் வல்லவர் என்று பெயரெடுத்த இவருக்கு, பல முயற்சிகள் நல்ல பலனையே கொடுத்தன.
ஜுன்ஜுன்வாலா "வெற்றி பெற்ற கூடிய பங்குகளை தேர்ந்தெடுத்து 'மிடாஸ் டச்' அதாவது தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயரை பெற்றார் என 2021ஆம் ஆண்டு இவரை பற்றி ஃபோர்ப்ஸ் சஞ்சிகை எழுதியது.
அதே நேரத்தில், தனது தனிப்பட்ட பங்கு முதலீடுகள் பலனளிக்கத் தொடங்கியதையும் கண்டார். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, அவர் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் வாரன் பஃபெட்" என்று அழைக்கப்படுவது பிடிக்கவில்லை என்று கூறினார், மேலும் " பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவரை விட "நன்கு முன்னேறி" இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் "நான் யாருடைய பிரதியும் அல்ல. நான் ராகேஷ் ஜுஞ்சுன்வாலா," என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தியா மீதான நம்பிக்கை
மூத்த பங்குச்சந்தை நிபுணரான, அஜய் பாக்கா, "இந்திய பங்குச்சந்தையின் முகமாக அவர் தன்னை மாற்றிக்கொண்டார்" என்று ஜுன்ஜுன்வாலா குறித்து குறிப்பிட்டார்.
ஒரு இளம் சிறுவனாக தொடங்கி இப்படி ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவும் அளவுக்கு இந்திய நிதிச்சந்தையில் தன் வளர்ச்சிக்கு தளம் அமைத்துக்கொண்டார்.
ஜுன்ஜுன்வாலா "இந்தியா மீது பெரும் நம்பிக்கை கொண்டவராக" இருந்தார். அந்த நம்பிக்கை எளிதில் இன்னொருவருக்கும் பரவிவிடும் அளவுக்கு அதிகமாக இருந்தது. இந்த நம்பிக்கை அவரது இன்னொரு செல்லப்பெயரிலும் எதிரொலித்தது. அதுதான் 'தலால் வீதியின் பெரும் புள்ளி' என்பது. (மும்பை பங்குச்சந்தையைக் குறிக்கும் அடையாளச் சொல்)
கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கையுடனேயே தொடர்ந்தார். அவரது இறப்புக்கு ஒரு வாரம் முன்பு சிஎன்பிசி-டிவி18க்கு அவர் அளித்த பேட்டியின்போது, "உலக பொருளாதார சூழல் எப்படி இருந்தாலும் இந்தியாவின் சந்தை உயரும். ஆனால், மெதுவாக" என்று தெரிவித்திருந்தார்.
மோதியுடன் புகைப்படம்

பட மூலாதாரம், RAKESH JHUNJUNWALA
கடந்த வருடம் ஜுன்ஜுன்வாலா தனது மனைவியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த பிறகு பிரதமர் மோதி அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் பிரதமர் மோதி ஜுன்ஜுன்வாலாவின் முன் முன் கைக்கட்டி நிற்பதாக சமூக ஊடகத்தில் பலர் விமர்சித்தனர். அப்போது ஜுன் ஜுன்வாலா யார் என்றும் பரவலாக விவாதிக்கப்பட்டது.
அந்த புகைப்படத்தில், பிரதமர் மோதி நின்ற நிலையில், தமது இரு கைகளையும் பிடித்தபடி இருப்பது போலவும், அவரது அருகே ரேகா ஜுன்ஜுன்வாலா நின்றிருக்க, அவர்களின் எதிரே ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இருந்தது. அதை பார்க்கும்போது ஜுன்ஜுனாவாலா ஏதோ பேச, அதை பிரதமர் மோதி கேட்பது போல இருந்தது.
பின்னர் மருத்துவ காரணங்களுக்காக ஜுன்ஜுன்வாலா அமர்ந்த நிலையில் பேசியது தெரியவந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













