கார்கில், எமர்ஜென்சி, லாக்டவுன் - வரலாற்று நிகழ்வுகளை பெயரில் சுமக்கும் இந்தியர்கள்

    • எழுதியவர், ஜால்சன் அக்கநாத் சம்மர்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

உண்மையிலேயே வித்தியாசமான பெயரைக் கொண்ட ஒருவரை நீங்கள் எத்தனை முறை சந்தித்து இருப்பீர்கள்?

இந்தியாவில் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கடவுள்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைப்பட கலைஞர்கள் அல்லது பிரபலமான கார்ட்டூன்களின் பெயர்களை வைக்க விரும்புவார்கள். ஆனால் சிலர் முற்றிலும் வேறுபட்ட வகையில், தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை முடிவு செய்கின்றனர்.

இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஆறு பேரை சந்தித்தது பிபிசி. அவர்கள் பிறந்த போது நடந்த ஒரு வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு பெயரிட்டனர்.

ஆசாத் கபூர் - 75 வயது

ஆசாத் கபூர் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று பிறந்தார் - இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற நாள்.

"நான் பிறந்த போது, 'மதர் இந்தியா' எங்கள் வீட்டுக்கு விடுதலையை கொண்டு வந்திருக்கிறாள் என ​​என் குடும்பம் கொண்டாடியது," என்று அவர் கூறுகிறார்.

ஆசாத் என்றால் விடுதலை என்று பொருள். சிறுவயதில், இது ஓர் ஆணின் பெயர் போல் இருப்பதால், ஆசாத்துக்கு இந்த பெயர் பிடிக்கவில்லை. ஆனால், காலம் செல்ல செல்ல, அவர் அதனை ஏற்றுக்கொண்டார்.

"எனது பிறந்தநாளை யாரும் மறப்பதில்லை. என்னை அறிந்தவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 15 அன்று என்னை நினைவுகூர்கிறார்கள். நாடு முழுவதும் எனது பிறந்தநாளன்று கொண்டாட்டமாகவுள்ளது என நண்பர்கள் கேலி செய்வார்கள்," என்று அவர் கூறுகிறார்.

எமர்ஜென்சி யாதவ், 47 வயது

இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, 1975 ஆம் ஆண்டு ஜூன் 26ம் தேதியன்று யாதவ் பிறந்தார்.

"இந்திய வரலாற்றில் இந்த சோகமான, இருண்ட காலகட்டத்தை மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பெயரை எனக்கு வைத்ததாக என் தந்தை என்னிடம் கூறினார்," என்று அவர் கூறுகிறார்.

நாட்டின் வானொலி அறிவிப்பில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 'உள்நாட்டு இடையூறுகளால்' தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதாக குறிப்பிட்டு அவசர நிலையைப் பிரகடனம் செய்வதாகக் கூறினார். அப்போது அரசியலமைப்பு உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டன. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எமர்ஜென்சி யாதவின் தந்தை ராம் தேஜ் யாதவ் ஓர் எதிர்க்கட்சி அரசியல்வாதி. ராம் தேஜ் யாதவுக்கு மகன் பிறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் கைது செய்யப்பட்டார். 22 மாதங்கள் சிறையில் இருந்த அவர், 1977ஆம் ஆண்டு எமர்ஜென்சி நீக்கப்பட்ட பிறகுதான் மகனைச் சந்தித்தார்.

"எந்த நாட்டிலும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டால், அந்த நாடு பின்னடைவைச் சந்திக்கிறது என்று அர்த்தம். இது போன்ற இன்னொரு நிகழ்வை நாம் மீண்டும் பார்க்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

கார்கில் பிரபு, 23 வயது

கார்கில் பிரபு - 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது பிறந்தார். நீண்ட காலமாக அவரது பெயரின் முக்கியத்துவம் பற்றி அவருக்கு தெரியாது.

"இந்த போர் காரணமாக எனக்கு இந்த பெயர் சூட்டப்பட்டாலும், நான் வளர்ந்து கூகிளில் தேடும் வரை அதைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என்னுடைய சிறுவயதிலேயே என் அப்பா இறந்துவிட்டார். அதனால், இதன் அர்த்தம் என்னவென்று சொல்ல அவர் இல்லை," என்று கூறுகிறார்.

சென்னையில் படத்தொகுப்பாளராக கார்கில் வேலை செய்கிறார். அவர் கார்கில் பகுதிக்கு சென்றதே இல்லை. ஆனால், அவர் செல்லவேண்டும் என்று நினைக்கும் இடங்களில் முதலில் உள்ள இடம் அதுதான்.

அந்த போரில், கிட்டதட்ட 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இறந்தனர். பாகிஸ்தான் இந்தியாவுக்குள் ஊடுருவியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த போர் நடந்தது. இதனை பாகிஸ்தான் நீண்ட காலமாக மறுத்து வருகிறது. மூன்று மாதங்கள் நடந்த போருக்கு பின், இந்தியா தனது வெற்றியை அறிவித்தது.

"எனக்கு போரில் நம்பிக்கை இல்லை. ஆனால் கார்கில் போரின் போது இந்தியா தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது என்று நினைக்கிறேன். அது சரியான முடிவு," என்று பிரபு கூறுகிறார்.

சுனாமி ராய், 17 வயது

தன் மகன் பிறந்த நாளை நினைத்துப் பார்க்கும்போது சுனாமி ராய் தாயின் கண்கள் கலங்குகின்றன.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கிய அந்தமான் தீவில் உள்ள ஒரு சிறிய குன்றின் உச்சியில் தஞ்சம் புகுந்த மௌனிதா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

"மூத்த மகனுடன் தப்பித்துவிடுங்கள் என்று என் கணவரிடம் சொன்னேன். வயிற்றில் உள்ள குழந்தையுடன் நான் பிழைப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இரவு 11 மணியளவில், எந்த உதவியோ, மருந்துவ வசதியோ இல்லாமல், ஒரு பாறையின் மேல் இருட்டில் என் மகனைப் பெற்றெடுத்தேன். என் உடல்நிலை அதன் பிறகு குணமடையவில்லை," என்று அவர் கூறுகிறார்.

பள்ளியில், சுனாமி ஒரு பேரழிவு என்பதால் அவரது பெயர் கேலி செய்யப்பட்டது. ஆனால் அவரது தாய்க்கு, அந்த பெயர் நம்பிக்கையும் வாழ போராடியதற்கான அடையாளமுமாக இருக்கிறது.

"ஆழி பேரலையால் குடும்ப உறுப்பினர்களை இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருந்த அனைவருக்கும், என் மகன் ஓர் நம்பிக்கைக் கதிராக பிறந்தான். அன்று நடந்த ஒரே நல்ல விஷயம் என் மகன் பிறந்ததுதான்," என்கிறார் ராய்.

டிசம்பர் 26ம் தேதியன்று இந்தியப் பெருங்கடலில் நீருக்கடியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 10 ஆயிரம் இந்தியர்கள் உட்பட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கசாஞ்சி நாத், 5 வயது

அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோதி திடீர் அறிவிப்பை வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு, வடக்கு மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் கசாஞ்சி பிறந்தார்.

இந்தியாவில் பெரும் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு அறிவித்த பிறகு, காசாஞ்சியின் தாயார், சர்வேஷா தேவி, சிறிது பணத்தை எடுக்க வங்கி வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, ​​பிரசவ வலி ஏற்பட்டது.

"அவன் ஒரு வங்கியில் பிறந்ததால், அவருக்கு கசாஞ்சி (காசாளர்) என்று பெயரிட வேண்டும் என்று எல்லோரும் கூறினார்கள்," என்று அவர் கூறுகிறார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று, 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, நான்கு மணிநேர கால அவகாசம் கொடுத்தார் நரேந்திர மோதி. 85% க்கும் அதிகமான இந்திய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது. லஞ்சம், வரி ஏய்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இது நாடு முழுவதும் உள்ள சாதாரண மக்கள் மற்றும் சிறு வணிகங்களை கடுமையாக பாதித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கசாஞ்சியின் குடும்பத்திற்கு, அவரது பெயர் அதிர்ஷ்டத்தைத் தந்தது. உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக தனது பிரசாரத்தில் கசாஞ்சியை நட்சத்திர பேச்சாளராக ஆக்கினார்.

"அவன் எங்களுக்கு பணத்தையும் செல்வத்தையும் கொண்டு வந்துள்ளான். எல்லோரும் எங்களுக்கு உதவுகிறார்கள். அவர் பெயரால் எனக்கு நல்ல வீடும், போதுமான பணமும் உள்ளது," என்கிறார் சர்வேஷா தேவி.

லாக்டவுன் கக்கண்டி, 2 ஆண்டுகள்

2020ஆம் ஆண்டு இந்தியாவில் கோவிட் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு பிறந்தவர் லாக்டவுன் கக்கண்டி. உத்தர பிரதேசத்தில் உள்ள குகுண்டு என்ற சிறிய கிராமத்தில் பிரபலமடைந்துவிட்டார் லாக்டவுன்.

"ஊரடங்கு உச்சத்தில் இருந்தபோது, எனது மகன் லாக்டவுன் பிறந்தான். என் மனைவியை பிரசவத்திற்கு அழைத்துச் செல்ல வாகனம் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. பல மருத்துவர்கள் நோயாளிகளை கவனிக்க கூட தயாராக இல்லை. நல்வாய்ப்பாக எனது மகன் எந்த பிரச்னையும் இல்லாமல் பிறந்தான்," என்கிறார் லாக்டவுனின் தந்தை பவன் குமார்.

லாக்டவுனின் கிராமம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், அவரது முகவரி அனைவருக்கும் தெரியும். மேலும் பலர் அவரைச் சந்திக்க அவரது வீட்டிற்கு வருகிறார்கள்.

"சில நேரம் மக்கள் அவனை கேலி செய்யலாம். ஆனால் எல்லோரும் அவனை நினைவில் வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை நினைவுபடுத்தும் வகையில் அவனது பெயர் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், " என்று தந்தை பவன் குமார் கூறுகிறார்.

2020ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு குறித்து நரேந்திர மோதி அறிவித்தார், சில மணிநேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட இந்த லாக்டவுன் குறித்து இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குப் அடுத்தடுத்த வாரங்கள் அத்தியவசிய தேவைகளின் பற்றாக்குறையும், பெரும் வேலை இழப்புகளும் ஏற்பட்டன. குறிப்பாக முறைசாரா துறையை இது மிகவும் பாதித்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: