You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுதந்திர இந்தியாவில் தொடரும் பிரிட்டிஷ் சட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டை அமுதப்பெருவிழா என்ற பெயரில் இந்திய அரசாங்கம் கொண்டாடுகிறது. அதேவேளையில் ஆங்கிலேய ஆட்சியின் போது விதிக்கப்பட்ட பல சட்டநடைமுறைகள் தற்போதும் செயல்பாட்டில் இருக்கின்றன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் அடிப்படை உரிமைகள் இல்லாமல் காலனிய சட்டத்திற்கு கட்டுப்பட்டதுபோல தற்போதுள்ள ஜனநாயக ஆட்சியில் கூட சில சட்டங்களால் இந்தியர்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, மூத்த வழக்கறிஞர்கள் பவானி பா.மோகன், செ.உமர்கையான் உள்ளிட்டவர்களிடம் சேகரித்த தகவல்களோடு, இந்திய சட்டங்களை பற்றிய புத்தகங்களை வெளியிட்டுள்ள எழுத்தாளர்களின் உதவியுடன் இந்த தகவல்களை பிபிசி தமிழ் சேகரித்துள்ளது.
கைவிலங்கிடும் நடைமுறை
பிரிட்டிஷ் இந்தியாவில் எப்போது சட்டம் இயற்றும் மன்றங்கள் உருவாக்கப்பட்டனவோ, அப்போதே கருப்பு சட்டங்களும் உருவாக்கப்பட்டன. ஆங்கிலேயர் காலத்திலிருந்த சில சட்டங்களுக்கு சுதந்திர இந்தியாவில் புதிய பெயர்கள் சூட்டப்பட்டு, அதே வீரியத்தோடு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு.
காலத்திற்கு ஏற்றதுபோல் இந்திய அரசியல் அமைப்பில் கொண்டுவரவேண்டிய மாற்றங்கள் பலவும் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் திருத்தப்பட்ட சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நீதித்துறையில் இருக்கும் பலருக்கும் தெரியாத நிலை இருப்பதாக அவர் கூறுகிறார்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வந்த கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அழைத்துச் செல்லும் நடைமுறை இப்போதும் பல இடங்களில் பின்பற்றப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை இரும்பு சங்கிலியால் பிணைத்து அடைத்து வைப்பதும், சந்தேக நபர்களை வீதிகளில் கட்டி இழுத்துச்செல்வதுமான நடைமுறைக்கு நீண்ட வரலாறு உண்டு என்கிறார் முன்னாள் நீதிபதி சந்துரு.
விஷேசமான காரணங்களால் நீதிமன்ற அனுமதியின் பேரில் கைவிலங்குகள் பூட்டி கைதிகளை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, கைதிகளை கொடூரமாக நடத்துவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், நீதிமன்றத்தின் அனுமதியோடுதான் கைதிகளுக்கு கை விலங்கிட்டு கூட்டிச் செல்கிறார்களா என்பது கேள்விக்குறி என்கிறார்.
எடுத்துக்காட்டாக அவர் விசாரித்த ஒரு வழக்கை விளக்கினார். ''கோவை மத்திய சிறையில் அத்தியாவசிய பொருட்களின் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் என்பவரின் வழக்கில், வழக்கு விசாரணையின்போது, கோவை சிறையில் இருந்து குற்றவியல் நடுவர் மன்றத்திற்கும், ஊட்டியில் இருந்த தடுப்பு காவல் சட்ட ஆலோசனை குழுவிற்கு முன்பு அவரை அழைத்துச் செல்லும் சமயங்களில் எல்லாம் கைவிலங்கு பூட்டப்பட்டே அழைத்து செல்லப்பட்டார். ஒரு மாதத்தில் கிருஷ்ணனின் வழக்கை விசாரித்ததோடு, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளருக்குப் பல வழக்குகளை நினைவூட்டி, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தெளிவுபடுத்தி, கை விலங்குகளை அகற்றி கிருஷ்ணனை மனிதனாக நடத்தும்படி உத்தரவிட்டேன்,''என்கிறார் நீதிபதி சந்துரு.
தொடரும் நிர்வாண சோதனை
இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் 1894ல் ஆங்கிலயேர்களால் கொண்டுவரப்பட்ட சிறைச்சாலை சட்டத்தின் கீழ்தான் இயங்குகின்றன. இந்தச் சட்டம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்பது சிறைச்சாலைகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை நமக்கு உணர்த்துகிறது என்கிறார்
வழக்கறிஞர் செ. உமர்கையான். ''நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்திலும், சிறைக்குள் நுழையும் நபர் ஒருவர் முழுமையாக நிர்வாணப்படுத்தி, அவர் தரையில் அமர்ந்து எழுந்து, எந்த பொருளும் எடுத்து வரவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சோதனை தற்போதும் பின்பற்றப்படுகிறது என்பது வேதனையான ஒன்று. சுதந்திர இந்தியாவில் நாம் சட்டங்களை இயந்திரத்தனமாக பின்பற்றுகிறோமா என்று தோன்றுகிறது. நம் நாடு சுதந்திரம் பெற்ற 75ஆம் ஆண்டிலாவது இந்த முறைகளை நாம் மாற்றவேண்டும்,''என்கிறார் உமர்கையான்.
புதிய பெயர்களில் பழைய சட்டங்கள்
முதல் உலக யுத்தத்தை காரணமாக காட்டி, இந்திய பாதுகாப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1915ல் நிறைவேற்றப்பட்டது. போர்க்காலத்தில் நாட்டிற்கு சீர்குலைவு விளைவிப்பவர்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் என்றாலும், அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள். இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அந்தசட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தியர்களை இந்தியாவை ஆளவிடாமல் இருக்க கொண்டுவரப்பட்ட சட்டம் 'இந்திய பாதுகாப்பு சட்டம்' என்று சொல்வார்கள். ஆனால் அந்த சட்டத்தின் மறுஉருவான தடுப்பு காவல் சட்டம் 1950ல் நிறைவேற்றப்பட்டது என நீதிபதி சந்துரு தனது 'நானும் நீதிபதி ஆனேன்' என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
அவரது புத்தகத்தில் இருந்து:
ஆரம்பத்தில் இந்த சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும்தான் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு 1971வரை நடைமுறையில் இருந்தது. ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் தலைவர்களை தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்து விசாரணையின்றி சிறையில் வைப்பது வாடிக்கையான நடவடிக்கையாக இருந்தது. தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் ஓராண்டிற்கு எவ்வித விசாரணையும் இன்றி சிறைபடுத்தப்படுவார்கள். 1971ல் தடுப்பு காவல் சட்டம் காலவாதியாகிவிட்ட நேரத்தில் இந்திரா காந்தி அரசு, 'மிசா' சட்டம்(Maintenance of Internal Security Act) கொண்டுவந்தது. இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, இந்திரா காந்திக்கு எதிராக இருந்த அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் மிசா சட்டத்தின்படி கைது செய்யப்பட்டனர். அந்தச்சட்டத்தை, ஜனதா கட்சிகூட்டணி அரசு ரத்து செய்தது.
ஆனால், 1980ல் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மீண்டும் அதே சட்டத்தை கொண்டுவந்தார் பிரதமர் இந்திரா காந்தி. அந்த சட்டத்திற்கான விமர்சனங்கள் அதிகரிக்கவே, அதில் சில திருத்தங்களை கொண்டுவந்து, 1986ல் பயங்கரவாத சீர்குலைப்பு தடுப்புச் சட்டம் - தடா சட்டம்(Terrorist and Disruptive Activities) கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஒரு வருடம் பிணையில் வரமுடியாது. குற்ற்றவாளிகள் மீது விசாரணை ரகசியமாக நடத்தப்படும். சாட்சிகளின் விவரம் வெளியிடப்படாது.இந்த சட்டத்தின்படி, குற்றவாளிகள் காவல் அதிகாரிகளிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியாக ஏற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
1995ல் தடா சட்டம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரத்தாகிவிட்டாலும், அந்த சட்டத்தின்படி, ஏற்கனவே பதிவான வழக்குகளை அந்த சட்டத்தின்படிதான் நடத்தப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
தடா காலம் முடிந்த பின்னர், 2002ல் தீவிரவாத தடுப்பு சட்டம் -அதாவது பொடா சட்டம் (Prevention of Terrorism Act)நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த சட்டத்தின்கீழ் தன்னுடைய அரசியல் எதிரிகள் அனைவரையும் பொடா சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தினார். அதனை அடுத்து வந்தது உபா சட்டம் Unlawful Activities (Prevention) Act . இதுபோல காலத்திற்கு ஏற்பட்ட சட்டத்தின் பெயர்தான் மாற்றப்பட்டுள்ளதே தவிர, காந்தி எதிர்த்து போராடிய Rowlatt Act- ரௌலட் சட்டத்தைதான் நாம் இன்னும் எதிர்த்துகொண்டிருக்கிறோம். அவர் ஆங்கிலேயர்களோடு போராடினர், நாம் சுதந்திர இந்தியாவில் நம்மோடு, நமக்காக அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் நீதிக்காக போராடுகிறோம்.
காவல்சட்டம், 1861
இந்திய சுதந்திரத்தின்போது, இந்தியர்களின் சுதந்திர வேட்கையை ஒடுக்க காவல்துறையை ஆங்கிலேயர்கள் பலவிதத்தில் பயன்படுத்தினர். காவலர்களாக பணிபுரிபவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளின் கட்டளைகளை ஏற்கும் ஊழியர்களாக செயல்பட பயிற்சி தரப்பட்டது. அந்த வகையில், காவல் சட்டம் 1861 என்ற சட்டம் ஆங்கிலயேர்களின் ஆட்சிக்கு பிறகு, மாறுதலுக்கு உட்படுத்தபட்டிருக்கவேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞர்பவானி பா.மோகன்.
''காவல் சட்டம் 1861ல், போராட்டக்காரர்களை ஒடுக்குவது, அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருப்பவர்களை முடக்குவது போன்ற செயல்களுக்கு பயிற்சி தருவது தொடர்கிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்களை கையாளுவதற்கான விதிகள் சீர்திருத்தப்படவில்லை. இன்றளவில் கூட காவல்துறையில் ஆடர்லி முறை தொடர்கிறது. பலமுறை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பினால்கூட, ஆங்கிலேயே ஆட்சியில் இருந்தது போல ஆடர்லி முறை தொடர்வதை என்னவென்பது?,'' என்கிறார்.
மேலும், மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை அவர்கள் மீது வெறுப்புக்கு வித்திடுகிறது என்கிறார் மோகன். ''ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களை மூன்றாம் நிலை மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் நடத்தியது காவல்துறை. காவல்சட்டம் 1861ன் கீழ் காவல்துறை கட்டமைப்பு என்பது மக்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. இதேமுறையில்தான் இன்றும் சமூகஆர்வலர்களை சுதந்திர இந்தியாவில் கையாளுகிறார்கள். சாட்சியாக பல வழக்குகளை கூற முடியும். 2018ல் தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் துப்பாக்கிசூட்டுக்கு ஆளானார்கள். அதே ஆண்டில்,மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் வன்முறையில் தொடர்புபடுத்தி, எழுத்தாளர்கள் மற்றும் சமூகஆர்வலர்களான வரவர ராவ் , அருண் ஃபெரீரா , சுதா பரத்வாஜ், கெளதம் நவ்லகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. அவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை குற்றம் சாட்டியது. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டான் சுவாமியும் இதில் கைது செய்யப்பட்டு, உரிய மருத்துவவசதிகள் கிடைக்காமல் இறந்தார். ஸ்டான் சுவாமியின் மரணத்தை மனித உரிமை மீறலாக பார்க்கவேண்டும்,''என்கிறார் வழக்கறிஞர் பவானி பா.மோகன்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி பிரகாஷ் சிங், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து காவல்சட்டத்தில் (1861) மாற்றங்களை கொண்டுவர தடையாக இருப்பது எது என விரிவாக எழுதியுள்ளார்.
அதில், காவல்துறை சீர்திருத்தங்களுக்கு அரசியல் வகுப்பினரிடமிருந்து மட்டுமல்ல, அதிகாரத்துவம் மற்றும் அரசியல் ஆதரவால் ஆதாயமடைந்த மூத்த காவல்துறை அதிகாரிகளின் பிரிவுகளிடமிருந்தும் தயக்கமும் எதிர்ப்பும் இருப்பதாக கூறுகிறார்.
தேச துரோகிகள் யார்?
மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான அபினவ் சந்திரசூட், பேச்சு சுதந்திரம், நீதித்துறை, இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்ட வரலாறு போன்ற தலைப்புகளில் விரிவான புத்தகங்களை எழுதியுள்ளார்.
'Republic of Rhetoric-Free Speech and the constitution of India' என்ற புத்தகத்தில், காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததைப் போலவே பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அதே அதிகாரத்தைதான் தற்போதுள்ள இந்திய அரசாங்கம் வைத்திருக்கிறது என்கிறார் சந்திரசூட்.
பேச்சு சுதந்திரம் பற்றிய கட்டுரைகளில் அவர், '' தாமஸ் மெக்காலே 1837ல் இந்தியாவில் தேச துரோகச் சட்டம் பற்றிய யோசனையை முதன் முதலில் முன்வைத்தார். 1860ல் இந்திய தண்டனைச் சட்டமாக செயல்வடிவம் எடுத்த சட்டம் இந்திய சுதந்திரத்திற்காக பேசிய பலரை சிறைவைக்க பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் கிலாபத் இயக்கம் தங்களுக்கு எதிராக அமையும் என்று கருதிய ஆங்கிலேயர்கள், திலகர் மற்றும் மகாத்மா காந்தி உள்ளிட்டவர்களை அடக்குவதற்கு இந்த சட்டத்தின் 124A என்ற பிரிவு பயன்படுத்தினர். அவர்களை தேசதுரோகம் இழைத்தவர்கள், குற்றவாளிகள் என கைது செய்து சிறையில் அடைத்தனர்.தேச துரோகம் என்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாக கருதப்பட்டது. தற்போதும் கூட அந்த சட்டத்தின்படி கைது செய்யப்படுபவருக்கு ஆயுள்சிறை தண்டனை அளிக்கமுடியும்,''என்கிறார்.
தேச துரோக வழக்கில் ஒரு நபர் மீது புகார் அளிக்கப்பட்டால் போதும், குற்றம்சுமத்தப்பட்டவரை காவல்துறை உடனே கைது செய்யமுடியும். குற்றம்சாட்டப்பட்டவர் பிணையில் வெளியில் வரமுடியாது. கைது செய்வதற்கு நீதிமன்றத்தின் வாரன்ட் கூட தேவையில்லை. ஆனால் கைதுசெய்யப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு சென்றுதான் ஜாமீன் வாங்க முடியும் என்ற விதிகள் உள்ளன. அதாவது, ஒரு நபரை வெள்ளியன்று கைது செய்தால், அவரை எந்த விசாரணையும் இல்லாமல் திங்கள்வரை -இரண்டு நாட்கள் சிறையில் வைக்கலாம். இதுபோன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவது பெரும்பாடுதான் என்கிறார் சந்திரசூட்.
''2008ல் கேரளாவில் சசிதரூர், இந்திய தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருந்த சமயத்தில், அதை இடைமறித்து, அமெரிக்கர்களை போல, நாமும், இதயத்தில் கைவைத்து பாடலாம் என கூட்டத்தில் இருந்த மக்களை பார்த்து கோரிக்கை வைத்திருக்கிறார். அவரின் செயல், தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் செயல் என அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அவர் விடுபட ஐந்து ஆண்டுகள் ஆனது,'' என்கிறார் வழக்கறிஞர் சந்திரசூட்.
இதேபோல, இந்தியாவில் பல திரைப்படங்களுக்கு தடை கோரப்பட்டதையும், ஓவியர்கள் மற்றும் கலைஞர்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்திய சமூக ஆர்வலர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவானது என்றும் அதில் கைதானவர்கள் சட்டப்படி வழக்கு நடத்தி அதில் குற்றமற்றவர் என விடுதலை பெறுவதற்கு பல காலம் ஆகிறது என்றும் கூறுகிறார். காலத்திற்கு ஏற்றபடி, தேசதுரோகவழக்கு பதிவு செய்வதில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமான பேச்சுக்கு தடை ஏற்படுத்தும் பிரிவுகள் நீக்கப்படவேண்டும் என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்