கலைச்செல்வி: 'லித்தியம் பேட்டரிகளுடன் 25 ஆண்டுகள்' - சி.எஸ்.ஐ.ஆர். தலைவரான விஞ்ஞானியின் உத்வேகப் பயணம்

பேட்டரி

இந்தியாவின் சிஎஸ்ஐஆர் என்றழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு இவர் தலைமை வகிப்பார் என்பதும் இந்த மையத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வியுடன் பிபிசி தமிழ் பேசியது.

கேள்வி: நீங்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் என்ன ?

பதில்: மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானியாக 1997ஆம்ஆண்டு பெற்றதிலிருந்து லித்தியம் பேட்டரி சார்ந்த ஆய்வுகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்.

லித்தியம் பேட்டரியில் தொடங்கி அதில் ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சியடைந்து ஒரு ஆனோட், ஒரு கேத்தோட், ஒரு எலக்ட்ரோலைட் என மூன்று பரிமாணங்களில் ஆய்வுகள் எடுத்துச் சென்று லித்தியம் பேட்டரி குறித்து முழுமையான புரிதலில் ஒரு சிறிய பகுதியை அனுபவபூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன்.

கேள்வி: தலைமை இயக்குராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற செய்தி கேட்டதும் உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது?

பதில்: தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் சொன்ன போது உண்மையிலேயே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. அந்த மகிழ்ச்சியையும் தாண்டி நான் உணர்ந்து விஷயம் என்னவென்றால் கடமையும், பொறுப்பும் அதிகரித்து இருக்கிறது என்பது. இது நிதர்சனமான உண்மை.

பேட்டரி

பட மூலாதாரம், KALAISELVI

கேள்வி: லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்கள் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதால், லித்தியம் பேட்டரி பாதுகாப்பானதா?

தற்போது லித்தியம் பேட்டரி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தீ விபத்து. எந்த ஒரு தொழில்நுட்பமும் துவங்குகின்ற காலத்தில் அது குறித்து முழுமையான புரிதல் இல்லாத காரணத்தால் இது போன்ற பயம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அதில் லித்தியம் பேட்டரி தொழில்நுட்பமும் ஒன்று.

லித்தியம் பேட்டரி குறித்த புரிதல் அனைத்து நாடுகளிலும் ஒரு மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுள்ள காரணத்தால் தான் நம் நாட்டில் அதற்கான தேடலும் புரிதலும் வேகமாக அதிகரித்து வருகிறது.

பேட்டரி

பட மூலாதாரம், Getty Images

லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்துவது குறித்த பயம், புரிதலும் குறுகிய காலத்தில் சரியாகிவிடும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

கேள்வி: இந்தியாவில் பெண் விஞ்ஞானிகளின் வளர்ச்சி எப்படி உள்ளது.

பதில்: சமீப காலத்தில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. பெண்கள் அiனைத்து துறையிலும் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கான தேடல் அதிகரித்துள்ளது. இதனை முழுமையாக உணர்ந்து கொண்டதால் பெண்கள் ஆராய்ச்சி துறையில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீப காலங்களில் உயரிய பதவி வைக்கின்ற ஆண்களின் மொத்த விகிதத்தைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை விகிதம் உயர்ந்துள்ளது. இது இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்து வருகிறது.

பேட்டரி

சிஎஸ்ஐஆர் நிறுவனம் இதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. முன்பை விட தற்போது பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.

கேள்ளி: குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் தமிழ் வழி கல்வியில் பயின்று முதன்மை இயக்குராக பணி அமர்த்தப்பட்ட உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் எழுபதுகளில் பள்ளியில் படிக்கும் போது தமிழ் வழிக் கல்வி மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தமிழ், ஆங்கிலம் என இரு வழிகளிலும் குழந்தைகள் கல்வி பயிலும் வசதி உள்ளது.

நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால் 'நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை அளவு சரியாக பயன்படுத்தலாம் என்பதற்கான புரிதல் இருக்குமேயானால்' அது நிச்சயம் இளைய சமுதாயத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

கேள்வி: ஒரு பெண் விஞ்ஞானி ஆக நீங்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் என்னென்ன ?

பதில்: 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ப்ராஜக்ட் குறித்து நோடல் விஞ்ஞானியாக நான் பிரசன்டேஷன் செய்த போது என்னுடைய சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் மிகவும் வியந்து பாராட்டினார்.

அப்போது அவர் சொன்ன வார்த்தை 'சரியான நபர் சரியான வேலையில் இருக்கிறார்' என்று. ஒரு பெண்ணாக இருப்பதால் எனக்கு எந்த ஒரு வாய்ப்பு மறுக்கப் பட்டதாக ஒருபோதும் நான் உணரவில்லை மாறாக ஒரு பெண் இவ்வளவு திறமையாக அவளுடைய எண்ணங்களை பிரதிபலிக்க முடிகிறது என்பதை ஆண்கள் அதிகமாக இருக்கும் சமுதாயத்தில் வியந்து பாராட்டியதை பலமுறை அனுபவித்துள்ளேன்.

கேள்வி: கூடுதலாக பெண் விஞ்ஞானிகளை இணைக்க திட்டம் உள்ளதா?

பதில்: சிஎஸ்ஐஆர் டெல்லி உள்ளிட்ட தலைமை நிறுவனத்தில் அதிக அளவு பெண்கள் பணியாற்றி வருகிறோம். நான் தலைமை ஏற்கக்கூடிய 37 ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகப்படுத்துவேன்.

கேள்வி: உங்களுடைய பொழுதுபோக்கு என்ன? தற்போது நீங்கள் வகிக்கும் பதவியில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

பதில்: நான் சிஎஸ்ஐஆர் விஞ்ஞானியாக பொறுப்பேற்ற காலத்திலிருந்து தொலைக்காத ஒரே விஷயம் என்னுடைய புன்னகை மட்டுமே. நான் என்னுடைய பேச்சையும், குணத்தையும் இதுவரை மாற்றிக் கொண்டதில்லை. அதனால்தான் எவ்வளவு பெரிய பொறுப்புக்கு சென்றாலும் அதே அளவிற்கு மன நிம்மதியோடு மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருவதாக நான் நம்புகின்றேன்.

என்னுடைய இலக்கு தாய்த்திரு நாட்டையும் நான் சார்ந்துள்ள இந்த சிஎஸ்ஐஆர் குழுமத்தையும் உலக அரங்கிலே பெரிய உயரத்துக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தொட செய்ய வேண்டும் என்பதே அதை நான் நிச்சம் செய்து காட்டுவேன் என்றார்.

காணொளிக் குறிப்பு, நேதாஜி படையில் இருந்த அனுபவத்தைப் பகிரும் 90 வயது பாட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: