You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் தோழி குறித்து இந்திய பெண் நெகிழ்ச்சி- "தேநீர், பிரியாணி, எல்லை கடந்த அன்பு"
சமூக வலைதளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுடன் கிடைத்த நட்பு குறித்து இந்தியப் பெண் ஒருவர் பதிவிட்ட இடுகைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இருவரும் ஹாவார்ட் பிசினஸ் ஸ்கூலில் படிக்கும் மாணவிகள். அந்த பதிவில் இருவரும் தங்கள் நாடுகளின் கொடியைப் பிடித்தவாறு இருந்தனர்.
பாகிஸ்தானிய மாணவியுடனான தனது நட்பு, அண்டை நாட்டை பற்றின பல பிம்பங்களை உடைத்தன என்று சினேகா பிஸ்வாஸ் எழுதியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் பல தசாப்தங்களாக சிக்கலான உறவு நிலவுகிறது.
இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்தவும், கிரிக்கெட் வீரர்கள் விளையாடவும் இந்தியா தடை விதித்துள்ளது. பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இவர்களின் நட்பையும், ஒற்றுமை உணர்வையும் பாராட்டிய ஒரு பயனர், "நாம்தான் ஒருவர் மற்றொருவருக்கிடையே சுவர்களை எழுப்பி இருக்கிறோம். எனவே அதை உடைப்பது நம் கையில் உள்ளது," என்று எழுதியுள்ளார்.
மற்றொரு பயனர், இரண்டு பெண்களும் "வாழ்நாள் முழுவதும் நட்பைப் பகிர்ந்து கொள்வார்கள். இது இரு தரப்பிலும் உள்ள பெண்களுக்கு எல்லைகளைத் தாண்டி மாற்றங்களைக் கொண்டு வரலாம்," என்று தெரிவித்துள்ளார்.
ஒரு தொழில்முனைவரான சினேகா பிஸ்வாஸ், லிங்க்ட்இன் என்ற சமூக வலைதளத்தில் தனது பாகிஸ்தானிய தோழியுடனான நட்பு குறித்த இடுகையைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது தோழியின் பெயரை குறிப்பிடவில்லை.
அந்த இடுகையில், தான் ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்ததால், பாகிஸ்தானைப் பற்றியும், அந்நாட்டு மக்களைப் பற்றியும் தனது அறிவு குறைவாகவே இருந்தது என்று கூறியுள்ளார். புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம், தான் பெற்ற தகவல்கள் அனைத்தும், பெரும்பாலும் வெறுப்பையும், பகைமையையும் திணித்தன என்றார்.
இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த அந்த தோழியை, ஹாவார்ட்டில் சேர்ந்த முதல் நாளில் சந்தித்திருக்கிறார் சினேகா. அன்று முதல், அவர்களிடையே நெருக்கமான நட்பு வளர்ந்தது.
தேநீர், பிரியாணியுடன் அவர்கள் பேசிய பல விஷயங்களில் இருந்து, அவரும் தன்னைப் போன்ற ஒரு குடும்ப பின்னணியில் இருந்துதான் வந்திருப்பதாக சினேகா அறிந்துக்கொண்டார். பாகிஸ்தானில் பழமைவாதத்தை கடைபிடிக்கும், ஆனால், அவரின் கனவுகளை ஆதரிக்கும் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் அவர் என்று சினேகா குறிப்பிட்டுள்ளார்.
"உங்கள் நாடு குறித்த பெருமை மிகவும் உறுதியாக இருக்கும் நிலையில், சக மனிதர்கள் மீதான அன்பு எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதை நான் உணர்ந்தேன்," என்று சினேகா பிஸ்வாஸ் எழுதினார்.
"எல்லைகள், இடங்கள் ஆகியவை மனிதர்களால் கட்டமைக்கப்பட்டவை என்று கூறிய அவர், மனிதர்களிடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று அவரது இடுகையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இது இரு நாடுகளிடையே உள்ள தடைகளை உடைப்பது மட்டுமல்லாமல், தங்கள் கனவுகளை துரத்த தயங்கும் இந்தியாவையும், பாகிஸ்தானையையும் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குமானது என்று கூறியுள்ளார்.
இந்தியா ஆகஸ்ட் 15ம் தேதியும், பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ம் தேதியும் சுதந்திர தினம் கொண்டாடவுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இந்த பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் 1947ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தப்போது, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையும் நடந்தது. இந்த பிரிவினையால் பலர் ரத்தம் சிந்தினர், இரு நாடுகளிடையிலான பகைமைக்கு பிரிவினை வித்திட்டது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்