இந்திய சுதந்திர தினம்: ஜின்னாவை இந்தியாவின் பிரதமராக்க விரும்பிய காந்தி; வேதனைப்பட்ட நேரு

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

முகம்மது அலி ஜின்னா மற்றும் ஜவாஹர்லால் நேரு இருவருக்கும் ஆங்கில ஆளுமை இருந்தது. இருவரும் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் வளர்ந்த விதம் காரணமாக, இருவரும் தங்கள் தாய் மொழியை விட பிரிட்டிஷ் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதில் வல்லவர்களாக இருந்தனர்..

நேருவைப் போல ஜின்னா ஒரு நாத்திகர் அல்ல. ஆனால் இஸ்லாமிய மதம் தடை செய்தபோதிலும் இரவில் ஒன்றிரண்டு கோப்பை மது அருந்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருக்கவில்லை. இருவருமே ஆணவம் கொண்டவர்கள், பிடிவாதமானவர்கள் மற்றும் மிக விரைவாக பிறரை தவறாக நினைக்கும் குணம் கொண்டவர்கள்.

இருவரும் தங்களை பாராட்டுபவர்களால் எப்போதும் சூழப்பட்டிருப்பதை விரும்பினர். ஆயினும் கூட இருவரும் தனிமையான வாழ்க்கையை நடத்தினர்.

"தனது எழுபதுகளில் இருந்த ஜின்னா உடல் மெலிந்தவராகவும், பலவீனமாகவும் இருந்தார். அதே நேரம் நேரு சுறுசுறுப்பாக இருப்பார். தனது வாழ்நாள் முழுவதும் ஜின்னா தினந்தோறும் இரண்டு சிகரெட் பாக்கெட்டுகளை புகைப்பார். அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படும்."

"ஜின்னாவின் உயரம் ஆறு அடி. ஆனால் உடல் எடை 63 கிலோ மட்டுமே. ஒரு காலத்தில் அவரது தலைமுடி பிரபல நடிகர் சர் ஜெரால்ட் டு மெளரியேவுடன் ஒப்பிடப்பட்டது.

ஆனால் 40 களின் நடுப்பகுதியில், அவரது தலைமுடி முழுக்க நரைத்தது. அதே நேரம் நேருவின் தலைமுடி இளவயதிலேயே கொட்டத் தொடங்கியது. அதை மறைக்க, அவர் காந்தி தொப்பியை அணியத் தொடங்கினார்," என்று புகழ்பெற்ற பத்திரிகையாளர் நிஸித் ஹசாரி தனது 'மிட்நைட் ஃப்யூரீஸ், டெட்லி லெகஸி ஆஃப் இண்டியாஸ் பார்டிஷன்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நேருவுக்கும் ஜின்னாவுக்கும் உள்ள வேறுபாடு

ஜின்னாவின் ஆளுமையில் சிறிதளவும் ஆதரவும் அரவணைப்பும் இருக்கவில்லை. அவரது நெருங்கிய நண்பரான சரோஜினி நாயுடு அவரைப் பற்றி ஒருமுறை சொன்னார், "ஜின்னா மிகவும் குளிர்ந்ததைப் போல இறுக்கமானவர். அவரைச் சந்திக்கும் போது ஃபர் கோட் தேவை என்று சில சமயங்களில் நமக்குத்தோன்றும்."

ஒரு கண்ணில் மோனோக்கிள் கண்ணாடி அணிந்த ஜின்னாவுக்கு நீண்ட ஆலோசனை உரையாடல்கள் எத்தனை பிடிக்குமா, நேரு அதை அத்தனை வெறுத்தார்.

ஜின்னா தனது எதிராளிகளின் குறைபாடுகளை நன்கு அளந்து அவர்களை பணிந்து போக வைத்தார். அவர்கள் முன்பை விட அதிகமாக அவருக்கு வழங்கினாலன்றி எந்தவித தீர்வையும் அவர் ஏற்க மாட்டார்.

அவர் ஒரு முறை நேருவைப் பற்றி பிரிட்டிஷ் எழுத்தாளர் பெவர்லி நிக்கோலிஸிடம் கூறினார், "இந்த வாழ்க்கையில் எங்கள் இருவரையும் இணைக்க எதுவுமே இல்லை. எங்கள் பெயர்கள், உடைகள், உணவு அனைத்தும் வேறுபட்டவை. எங்கள் பொருளாதார வாழ்க்கை, கல்வி தொடர்பான கருத்துகள், பெண்கள் மற்றும் விலங்குகள் மீதான அணுகுமுறை. இவை அனைத்திலுமே மாறுபட்ட எண்ணங்களை கொண்டிருக்கிறோம்."

ஜின்னாவின் கொள்கையை எதிர்த்த நேரு

பாகிஸ்தானை உருவாக்கும் கனவை யாருமே காணவில்லை. பாகிஸ்தான் எப்போதும் ஜின்னாவின் பெயருடன் இணைத்து பார்க்கப்பட்டது. முஸ்லிம் லீக்கின் தலைவர் முகமது அலி ஜின்னா ஒரு முஸ்லிம் நாட்டின் சாத்தியக்கூறு பற்றி யோசிக்கத் தொடங்கியதிலிருந்து, ஜவாஹர்லால் நேரு அவருடைய கருத்தியல் எதிரியாக மாறினார்.

முஸ்லிம்களும் இந்துக்களும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் என்ற கருத்தை நேரு எப்போதும் எதிர்த்தார். அவரைப் பொருத்தவரை, இந்தியாவின் உண்மையான அடையாளம் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒன்று கலந்து இருப்பதுதான்.

அவரது பார்வையில், இந்தியா அமெரிக்காவைப் போன்றது. அது ஒவ்வொரு வித்தியாசமான கலாசாரத்தையும் தன்னுள் உள்வாங்கிக்கொள்ளும் அற்புதமான திறனைக் கொண்டிருக்கிறது.

ஒரு நவீன நாடு மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கமுடியும் என்ற கருத்தை நேரு எதிர்த்தார். அவர் இதை ஒரு பழங்கால சிந்தனை என்று கருதினார்.

"முஸ்லிம் பிரச்னைகளில் சம்மந்தமே இல்லாதவர்கள், ஒடுக்கப்படாதவர்கள், ஒரு முஸ்லிம் நாட்டின் உருவாக்கத்தை ஆதரிப்பது என்பது நேருவின் பார்வையில் பெரும் முரண்பாடாக இருந்தது." என்று நிஸித் ஹசாரி குறிப்பிடுகிறார்.

பரஸ்பரம் தொடுத்த வார்த்தை அம்புகள்

நேருவும் ஜின்னாவும் சுமார் 30 வருடங்களாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாலும், 40 களின் போது இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்தது மட்டுமல்லாமல், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் வளர்ந்தன.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சிறையில் இருந்த நேரு தனது சிறை நாட்குறிப்பில் எழுதினார், "முஸ்லிம் லீக்கின் இந்தத் தலைவர், நாகரீக மனம் இல்லாததற்கு ஒரு வாழும் உதாரணம்."

நேருவின் இந்த எண்ணங்களுக்கு ஜின்னா அதே வலுவான மொழியில் பதிலளித்தார்.

"இந்த இளம் தலைவரின் பார்வையில் இந்தியாவின் ஆன்மீக ஒற்றுமை மற்றும் அனைத்து சமூகங்களுக்கிடையேயான சகோதரத்துவம் பற்றிய அடிப்படைக் குறைபாடு உள்ளது. நேரு பீட்டர் பான் போல, புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டார் அல்லது கற்றுக்கொண்ட பழையவற்றை விடவும் மாட்டார்,"என்று ஒரு உரையில் குறிப்பிட்டார்.

ஜின்னாவின் பேச்சுக்கு நேரு பதிலடி

1937 தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சி, ஐந்து சதவிகித்திற்கும் குறைவான முஸ்லிம் வாக்குகளையே பெற்றது. இருந்தபோதிலும், முஸ்லிம்களின் ஒரே பிரதிநிதியாக முஸ்லிம் லீக்கை முன்னிறுத்தும் எந்த வாய்ப்பையும் ஜின்னா தவறவிடவில்லை.நேரு அதை ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நேருவுக்கு ஜின்னாவுடன் கடித தொடர்பு இருந்தது. ஆனால் ஒரு கடிதத்தில் ஜின்னா, "என்னுடைய கருத்துக்களை இப்போது உங்களுக்கு விளக்குவது எனக்கு கடினமாகிவிட்டது" என்று எழுதினார்.

நேரு ஜின்னாவுக்கு கடிதங்கள் எழுதுவதை நிறுத்தினார். 1943 இல், சுதந்திரத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானைக் கொடுக்க ஒப்புக்கொள்ளும் அளவிற்கு நேரு ஜின்னா மீது அதிருப்தி அடைந்தார். .

நேரு தனது சிறை நாட்குறிப்பில், "ஜின்னாவை தனது சிறிய நாட்டை நடத்த அனுமதிப்பதன் நன்மை என்னவென்றால், இந்தியாவின் வளர்ச்சியில் அவர் குறைவான தடைகளையே போடுவார்,"என்று எழுதினார்.

அதுவரையில் நேரு பாகிஸ்தான் உருவாக்கத்திற்கான கோரிக்கையை பகிரங்கமாக ஏற்கவில்லை.

1944 இல் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஜின்னா மூன்று மணிநேரம் உரை நிகழ்த்தியபோது, நேரு தனது சிறை நாட்குறிப்பில் ,"ஜின்னாவின் பேச்சு மிகவும் கொச்சையாக, உணர்ச்சிகளை தூண்டக்க்கூடியதாக, திமிர்பிடித்ததாக இருந்தது. இந்தியா மற்றும் இங்குள்ள முஸ்லிம்கள் மீது இவருடைய தாக்கம் மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான மோசமான சண்டையாக மாற்றியுள்ளார்,"என்று எழுதினார்.

காங்கிரஸ் மீது ஜின்னா நடத்திய தாக்குதலால் ஆங்கிலேயர்கள் மகிழ்ச்சி

ஜின்னா-நேரு மோதலை பிரபல பத்திரிக்கையாளர் துர்கா தாஸ் தனது 'இந்தியா ஃப்ரம் கர்சன் டு நேரு அண்ட் ஆஃப்டர்' என்ற புத்தகத்தில் விரிவாக விவரித்துள்ளார்.

துர்கா தாஸ் எழுதுகிறார், "1938 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் தலைவராக ஜின்னா ஆற்றிய உரையில், 'இந்த நேரத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு சக்திகள் மட்டுமே உள்ளன' என்ற நேருவின் சிந்தனைக்கு, சவால் விடுத்தார். இதை எதிர்த்த. ஜின்னா, இந்தியாவில் இரண்டு இல்லை. நான்கு சக்திகள் உள்ளன - பிரிட்டிஷ் ராஜ், அரச குடும்பங்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள். என்று குறிப்பிட்டார்."

"அவர் காங்கிரஸை ஒரு பாஃசிச அமைப்பு என்று அழைத்தார். பிரிட்டிஷார் தங்கள் மிகப்பெரிய எதிரி (காங்கிரஸ்) தாக்கப்படுவதை பார்த்து மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டேன். இது காந்திஜியை காயப்படுத்தும் என்றும், ஜின்னா குறித்த காங்கிரஸின் நிலைப்பாடு மேலும் கடுமையாகும் என்றும் நான் ஜின்னாவிடம் சொன்னேன். 'துர்கா, காந்திக்கு இந்த மொழிதான் புரியும்' என்று இதற்கு ஜின்னா பதில் அளித்தார்."

தீப்பெட்டி அளவு இருந்தால்கூட பாகிஸ்தானுக்கு ஒப்புதல்

சுதந்திரத்திற்கு முந்தைய லண்டன் பேச்சுக்களில், நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் ஜின்னா தவறவிடவில்லை. ஆனால் நேருவுடன் சென்ற சீக்கிய தலைவர் பல்தேவ் சிங்கை தன் பக்கம் இழுக்க அவர் தன்னால் முடிந்தவரை முயன்றார்.

பின்னர் எஸ் கோபால் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றில் எழுதினார், " ஜின்னா, தனக்கு முன்னால் மேசையில் கிடந்த தீப்பெட்டியை காட்டி, இதைப்போன்ற பாகிஸ்தானை பெற்றாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்று சொன்னதாக பல வருடங்கள் கழித்து பல்தேவ் சிங் நினைவு கூர்ந்தார். "

"நீங்கள் முஸ்லிம் லீக்கில் சேர சீக்கியர்களை சமாதானப்படுத்தினால், டெல்லியில் கதவுகள் திறக்கும் ஒரு அற்புதமான பாகிஸ்தான் எங்களிடம் இருக்கும்."என்று ஜின்னா கூறினார்.

காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இரண்டிற்கும் இடைக்கால அரசில் இடம்

இந்தியாவில் பிரிட்டனின் வைஸ்ராய் லார்ட் வேவல், நேருவும் ஜின்னாவும் கூட்டணி அரசில் சில மாதங்கள் ஒன்றாக பணியாற்றினால், அவர்களுக்கு இடையே ஒரு வகையான புரிதல் எழலாம் என்று நம்பினார்.

இதை மனதில் வைத்து வேவல், இடைக்கால அரசில் நேருவின் தலைமையில் ஆறு காங்கிரஸ்காரர்கள், ஐந்து முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் மூன்று பிரதிநிதிகளை நியமித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவது நேருவும் ஜின்னாவும் தங்கள் கருத்து வேறுபாடுகளை எந்த அளவுக்குத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொருத்தது என்று சொல்லலாம்.

நேரு ஜின்னாவுக்கு கடிதம் எழுதி, 1946 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பம்பாயில் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். ஜின்னாவிடம் இருந்து நேர்மறையான பதிலை எதிர்பார்க்க வேண்டாம் என்று வேவல் ஏற்கனவே நேருவை எச்சரித்திருந்தார்.

அதுதான் நடந்தது. நேருவுக்கு ஜின்னா பதிலளித்தார், "உங்களுக்கும் வைஸ்ராய்க்கும் இடையே என்ன பேச்சு நடந்தது என்று எனக்குத் தெரியாது. காங்கிரஸ் தலைமையிலான அரசில் நான் பணியாற்றுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த எண்ணத்தை உங்கள் மனதில் இருந்து தூக்கி எறியுங்கள்."

இதுதான் உண்மையான ஜின்னா. தைரியமானவர், கூர்மையானவர் மற்றும் பிடிவாதமானவர். இந்த பதில் நேருவை விட அவரை பின்தொடர்பவர்களுக்கானது .

ஜின்னாவுக்கு விளக்கம் அளித்த பிறகு நேரு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பம்பாயை அடைந்தார். ஜின்னா அவருக்கு மற்றொரு கடிதத்தை எழுதினார், " சில விளக்கங்களை நீங்கள் கொடுத்தீர்கள்.ஆனால் அதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. நீங்கள் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தீர்கள். நீங்கள் என்னை ஆறு மணிக்குப் பார்க்க வந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.."

நேரு - ஜின்னா பேச்சுவார்த்தை தோல்வி

நேரு மாலை 5.50 மணிக்கு ஜின்னாவின் வீட்டை அடைந்தார். வக்கீல் தொழிலில் புகழ் சம்பாதித்த பிறகு, ஜின்னா, மலபார் ஹில்ஸில் ஒரு ஆடம்பரமான பளிங்கு வீட்டை கட்டினார். மனைவி இறந்த பிறகு ஜின்னா தனது சகோதரி பாத்திமா மற்றும் வேலைக்காரர்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

அன்று இரு தலைவர்களுக்கும் இடையே 80 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது. லார்ட் வேவல் பின்னர் தனது சுயசரிதையில் "ஜின்னாவின் படிப்பறையில் நடந்த இந்த உரையாடலில் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். உண்மையில், இருவருக்கும் சமரசம் செய்ய விருப்பம் இல்லை. தன்னைவிட இளையவரான நேருவின் கீழ் பணிபுரியும் எண்ணத்தை ஜின்னாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூடவே காங்கிரஸ் ஒரு முஸ்லிமை அமைச்சராக நியமிப்பதையும் அவர் விரும்பவில்லை."என்று எழுதினார்.

மறுபுறம் நேரு , லீக்கின் பிரதிநிதிகள் தனது தலைமையை கேள்வி கேட்கவோ அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து முழுமையான சுதந்திரம் என்ற தனது இயக்கத்தை மெதுவாக்கவோ விரும்பவில்லை. "காங்கிரசின் கைகளையும் கால்களையும் சங்கிலியால் பிணைக்க முடியாது."என்று அவர் எழுதினார்.

நேருவின் பார்வையில் ஜின்னா எப்போதும் எதிர்மறையானவர்

மவுண்ட்பேட்டன் இந்தியாவில் வைஸ்ராயாக பொறுப்பேற்றபோது, நேருவை அவருக்கு முன்பே தெரியும். நேருவை அவர் சிங்கப்பூரில் சந்தித்திருந்தார்.

மவுண்ட்பேட்டன் இந்திய நிலைமைகளைப் பற்றி அறிந்துகொள்ள நேருவை தனது ஆதாரமாகப் பயன்படுத்தினார். ஜின்னாவைப் பற்றிய அவரது மதிப்பீடு என்ன என்பதை நேருவிடமிருந்து அவர் அறிய விரும்பினார்.

காம்ப்பெல் ஜான்சன் தனது 'மவுன்ட்பேட்டன்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார், "ஜின்னாவைப் பற்றி மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர் 60 வயதைத் தாண்டி மிகவும் தாமதமாக வெற்றி பெற்றார். முன்னதாக அவருக்கு இந்திய அரசியலில் சிறப்பு அந்தஸ்து இல்லை. அவர் ஒரு நல்ல மனிதர் அல்ல. ஆனால் நிச்சயமாக ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர். அவரது வெற்றியின் ரகசியம், தொடர்ந்து எதிர்மறையான அணுகுமுறையை பராமரிக்கும் திறனில் உள்ளது என்று நேரு குறிப்பிட்டார். "

ஜின்னாவை பிரதமராக்க காந்தி முன்வந்தார்

1947 ஆம் ஆண்டு மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு இடையில், காந்தி மவுன்ட்பேட்டனுடன் ஐந்து முறை பேசினார்.

மவுன்ட்பேட்டன் இப்படி எழுதினார், "ஜின்னாவுக்கு அரசு அமைக்க முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற யோசனையை காந்தி என்னிடம் கூறினார். அவர் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், காங்கிரஸ் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். ஆனால் ஒரே நிபந்தனை, ஜின்னாவின் அமைச்சர்கள் குழு இந்திய மக்களின் நலனுக்காக ஆர்வத்துடன் பணியாற்றவேண்டும் என்றார். இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதைக்கேட்டு ஜின்னா என்ன சொல்வார் என்று நான் காந்தியிடன் வினவினேன். இந்த யோசனை காந்தியினுடையது என்று நீங்கள் அவரிடம் சொன்னால், 'அந்த தந்திரக்காரனா' என்று அவர் பதில் சொல்வார் என காந்தி குறிப்பிட்டார்."

இருப்பினும், காந்தியின் இந்த யோசனை ஜின்னாவிடம் சொல்லப்படவேயில்லை.

ஜின்னாவின் வாழ்க்கை வரலாறான ' ஜின்னா ஆஃப் பாகிஸ்தான்' என்ற புத்தகத்தில் ஸ்டான்லி வால்பர்ட் ,"மவுன்ட்பேட்டன், இந்த விவகாரம் குறித்து நேருவிடம் முதலில் பேசினார். அவருடைய பதில் முற்றிலும் எதிர்மறையாக இருந்தது."என்று எழுதியுள்ளார்.

"மகாத்மா தனது இடத்தில் ஜின்னாவை பிரதமராக்கத் தயாராக இருந்தார் என்பதை அறிந்த நேரு மிகவும் வேதனைப்பட்டார். காந்தி ஜின்னாவை நன்கு புரிந்து கொண்டவர். இது போன்ற ஒரு முன்மொழிவு ஜின்னாவின் மனதை இனிமையாகத்தொடும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இந்தப் பரிந்துரை முற்றிலும் நடைமுறைக்கு ஒத்து வராதது என்று நேரு மவுன்ட்பேட்டனிடம் கூறினார்."

ஜின்னா சுதந்திரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கராச்சியை அடைந்தார்.

1947 ஏப்ரல் 7 ஆம் தேதி காலை ஜின்னா தனது சகோதரியுடன் வைஸ்ராயின் டகோடா விமானத்தில் டெல்லியில் இருந்து கராச்சியை அடைந்தார். விமான நிலையத்திலிருந்து அதிகாரபூர்வ இல்லத்திற்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜின்னாவை வரவேற்று முழக்கங்களை எழுப்பினர்.

தனது பங்களாவின் படிகளில் ஏறி, ஜின்னா தனது ஏடிசி லெப்டினன்ட் எஸ்எம் எஹ்சான் பக்கம் திரும்பி, " எனது வாழ்நாளில் பாகிஸ்தான் உருவாகி அதை நான் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை," என்றார்.

ஆகஸ்ட் 14 அன்று மவுண்ட்பேட்டனை கொளரவித்து அளிக்கப்பட்ட விருந்தில் அவரது இருக்கை , பாத்திமா ஜின்னா மற்றும் பிரதமர் லியாகத் அலி கானுக்கு இடையில் இருந்தது.

மவுண்ட்பேட்டன் எழுதுகிறார், "டெல்லியில் நள்ளிரவு சுதந்திர தின கொண்டாட்டங்களைப் பற்றி அவர் இளக்காரமாகப்பேசினார். ஜோதிடர்களால் நிர்ணயிக்கப்பட்ட முகூர்த்தத்தின் அடிப்படையில் ஒரு பொறுப்புள்ள அரசு இயங்குவது எவ்வளவு விசித்திரமானது என்று கூறினார்."

"கராச்சியில் நடைபெற இருந்த விழா நிகழ்ச்சியும் மாற்றப்பட்டது , ஏனென்றால் ஜின்னாவுக்கு ரம்ஜான் பற்றி நினைவில்லை. அவர் மதிய விருந்து கொடுக்க விரும்பினார். ஆனால் ரம்ஜான் காரணமாக அது இரவு உணவாக மாற்றப்பட்டது என்று பதில்கூற நான் விரும்பினேன்."

ஜின்னா இறந்த மறுநாள் ஹைதராபாத் மீது தாக்குதல்

இதற்குப் பிறகு நேருவும் ஜின்னாவும் ஒரு முறை மட்டுமே சந்தித்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டு வாரங்களுக்குள், லாகூரில் அதிகரித்து வரும் அகதிகள் பிரச்சனையை தீர்க்க ஜின்னா தானே லாகூரை அடைந்தார்.

அவரும் நேருவும் ஆகஸ்ட் 29 அன்று அரசு இல்லத்தில் பிற பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தலைவர்களைச் சந்தித்தனர். இவர்கள் இருவரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றாக அமர்ந்தது அதுவே கடைசி முறை. இந்த சந்திப்பு நடந்து ஒரு ஆண்டு, 13 நாட்களுக்கு பிறகு ஜின்னா காலமானார்.

1948 செப்டம்பர் 11ஆம் தேதி ஜின்னா காலமான தினத்தன்று நேரு , அவருடனான போட்டிக்கு ஒரு கடைசி அடி கொடுத்தார்.

சர்தார் பட்டேலின் வாழ்க்கை வரலாற்றில் ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார், "பாகிஸ்தானை உருவாக்கியவர் கல்லறையில் வைக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் நேரு தனது ராணுவத் தளபதிகளை ஹைதராபாத் நோக்கி செல்லும்படி கட்டளையிட்டார்."

"ஜின்னாவின் நினைவாக இந்தியாவின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமா என்று வங்காள ஆளுநர் கைலாஷ்நாத் கட்ஜு கேட்டபோது 'அவர் உங்களுக்கு உறவினரா? என்று சர்தார் படேல் உணர்ச்சியே இல்லாமல் பதிலளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :