மலக்குடலை அறுத்ததாக புகார் - தாய், சேயுடன் சிகிச்சைக்கு அலைந்த உறவினர்கள்

தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே பிரசவத்தின் போது கவனக்குறைவாக கர்ப்பிணிக்கு அளித்த சிகிச்சையால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி, பெண்ணின் உறவினர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், மருத்துவரின்றி செவிலியரே தனியாக பிரசவம் பார்த்ததாகவும், குழந்தையை பிரசவித்த பின்னர் தாயின் மலக்குடலை செவிலியர் கத்தரித்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இந்த கூற்றை தலைமை மருத்துவ அலுவலர் மறுக்கிறார். என்ன நடந்தது வாணியம்பாடியில்?
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (26). இவர் மனைவி சுசிசந்திரிகா (25). இவருக்கு முதல் பிரசவத்திற்காக உதயேந்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31.07.2022 அன்று அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிரசவத்தின் போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் 2,000 ரூபாய் பணம் கேட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியரே சுகப்பிரசவம் பார்த்தபோது குழந்தை பிறக்கும் சமயத்தில் சதையை கத்தரித்துக் குழந்தையை வெளியே எடுத்து பின்னர் தையல் போட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பிரசவத்துக்கு இரு தினங்களுக்குப் பிறகு தையல் பிரிந்ததால் சசிசந்திரிகாவின் உடல்நிலை மோசமாகியுள்ளது.
அவரை மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இரு நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுசிசந்திரிகா அனுமதிக்கப்பட்டார்.
அரசு பேருந்தை சிறைப்பிடித்த உறவினர்கள்
அங்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இதனால் சுசிசந்திரிகா உயிருக்குப் போராடி வருவதாகவும் முறையாக சிகிச்சையளிக்காத ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுசிசந்திரிகாவின் உறவினர்கள் வாணியம்பாடி - கைலாசகிரி சாலையில் அரசுப்பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் செய்தனர்.

இதையடுத்து போாரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாணியம்பாடி கிராம காவல்துறையினர் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது குறித்து வட்டார தலைமை மருத்துவர் அலுவலர் பசுபதி கூறுகையில், "சுசிசந்திரிகா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மிகுந்த உடல் சோர்வு ஏற்பட்டதாகவும் மலக்குடல் ஏதும் கத்தரிக்கப்படவில்லை. செவிலியர் பிரசவத்திற்கு 2,000 ரூபாய் பணம் பெற்றது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்," என்றார்.
மலக்குடலை அறுத்ததாக சந்தேகம்
இது குறித்து மருத்துவர் பசுபதியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 90% செவிலியர்கள் தான் பிரசவம் பார்க்கிறார்கள். தையல் போடப்பட்ட இடத்தில் காயம் ஆறாததால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகும் சசிசந்திரிகா உடல் சுகவீனமாக இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்ட்டார். அங்குள்ள அவரது நிலையை கண்காணிக்க ஒரு மருத்துவர் குழு அனுப்பியுள்ளோம்," என்று கூறினார்.
ஆனால், பிரசவத்துக்குப் பிறகு தையல் போட்ட பகுதியில் சதை கிழிந்ததாகவும் இரண்டாவது முறையாக போட்ட தையலும் பிரிந்ததாக உறவினர்கள் கூறினர்.
"மூன்றாவது முறையாக அதே மருத்துவ நிலையத்துக்கு சுசிசந்திரிகாவை அழைத்துச் சென்றோம். அப்போது அங்கிருந்த மருத்துவர் சுசிசந்திரிகாவை முழுமையாக பரிசோதனை செய்த பிறகு தையல் போட்ட செவிலியரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் இருந்த செவிலியரிடம் மலக்குடலை நீங்கள் கத்தரித்து விட்டீர்கள் என மருத்துவர் கூறியிருக்கிறார். அப்போதுதான் தான் சசிசந்திரிகாவின் மலக்குடலை கத்திரித்ததாக அந்த செவிலியருக்கே தெரியவந்துள்ளது," என்று பெண்ணின் உறவினர் சசிகலா கூறுகிறார்.
மேலும், "2,000 ரூபாய் பணம் வாங்குவது குறித்து வீட்டில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். பிரசவம் முடிந்த பிறகு மூன்று நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து சுசிசந்திரிகாவை மேல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கும் இரண்டு நாள் சிகிச்சை பார்த்த பிறகு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இங்கும் சிகிச்சை அளிக்க முடியாது, மேல் சிகிச்சைக்காக சென்னை செல்லுங்கள் எனக் கூறினர். பிஞ்சுக் குழந்தையை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது என்று கூறிய பிறகே, அடுக்கம்பாறை மருத்துவமனையிலேயே சுசிசந்திரிகாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்னர்," என்கிறார் சசிகலா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













