இந்திய தேசியக் கொடி: வீட்டில் கொடியேற்றும் முன் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
75 ஆவது சுதந்திர ஆண்டை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சுதந்திரத்தின் பவளவிழா ஆண்டை அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையில், இந்திய பிரதமர் நரேந்திரமோதி, நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
ஏராளமான வாதபிரதிவாதங்கள் இந்த அறிவிப்பையொட்டி முன் வைக்கப்பட்ட நிலையில், பலரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் மூவண்ணக்கொடியுடன் படங்களை வைக்கத் தொடங்கிவிட்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி என்ற பெயரில் இதற்கான பிரத்யேக பிரசாரத்தை இந்திய கலாசாரத்துறை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், வீட்டில் கொடியேற்றூவதாக இருந்தால் நீங்கள்நினைவில் கொள்ள வேண்டியவை என்ன என்று பார்க்கலாம் .
இந்திய தேசியக்கொடி சட்டம், 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றின் கீழ் கொடி எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகள் மற்றும் கொடியேற்று வழிமுறைகள் வழங்கப்படுகின்றன.
தேசியக்கொடி சட்டம் 2002, பிரிவு 2.1இன் படி, எந்த ஒரு இடத்திலும் பொதுமக்கள் மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றுவதற்கு தடை இல்லை.
அதே சமயம், தேசியக்கொடிக்கு அவமதிப்பு நடத்தப்பட்டால் மூன்றாண்டு சிறையுடன் அபராதமும் விதிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பங்குபெறுவதற்காக, தேசியக் கொடியேற்றுவது தொடர்பான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, காதி துணி மட்டுமன்றி பாலிஸ்டர் துணி கொடிகளும் பயன்படுத்தப்படலாம். அத்துடன், மாலையில் கொடியை இறக்க வேண்டிய கட்டாயமில்லை. இரவிலும் தேசியக்கொடி பறக்கலாம்.

பட மூலாதாரம், EPA
இப்படியாக, கொடியேற்றுவது தொடர்பான விதிகள் முன்பு இருந்ததை விட தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும், நீங்கள் கொடியேற்றும் போது இந்த 10 அம்சங்களை கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.
- தேசியக்கொடியை தலைகீழான நிலையில் ஏற்றக்கூடாது; அதாவது காவி நிறப்பட்டை அடிப்பகுதியில் இருக்கக் கூடாது.
- கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடியை காட்சிப்படுத்தப்படக் கூடாது
- தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது;
- தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாள சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.
- தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது
- தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது
- தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது
- தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது
- உரையாளரின் மேசை மீது விரிப்பாகவோ, உரையாளரின் மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது
- அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது.
- மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ அல்லது பின்னலிட்டோ (embroid) தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி திட்டம் என்றால் என்ன?
சுமார் 20 கோடி இல்லங்களில் கொடியேற்ற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு.
• இந்தப் திட்டத்தின் கீழ் சுமார் 20 கோடி வீடுகளில் கொடி ஏற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
• இந்தியாவில் தற்போது 4 கோடி கொடிகள் மட்டுமே உள்ளன என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தெரிவித்துள்ளது. அதாவது, மீதமுள்ள கொடிகளின் ஆர்டரை மாநில அரசோ, இந்திய அரசோ அவர்களின் மட்டத்தில் தயாரித்து விற்பனை செய்யும் இடத்திற்கு அனுப்ப வேண்டும்.
• மாநில அரசு விரும்பினால், மாநிலத்தின் தேவைக்கேற்ப ஒன்றிய அரசிடம் மொத்த கொடிகளை கோரலாம் அல்லது தானே கொடிகளுக்கு ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
• ஒன்றிய அரசின் கூற்றுப்படி, கொடிகள் மூன்று அளவுகளில் கிடைக்கும். மூன்றின் விலையும் மாறுபடும். ரூ.9, ரூ.18 மற்றும் ரூ.25 க்கு கொடிகள் கிடைக்கும்..
• கொடி தயாரிக்கும் நிறுவனங்கள் ஆரம்பத்தில் இந்த கொடிகளை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கடனாக வழங்கும்.
• குடிமக்கள் தங்கள் சொந்த பணத்தில் கொடியை வாங்க வேண்டும்.
• மக்கள் விரும்பினால், மொத்தமாக கொடிகளை வாங்கி மற்றவர்களுக்குப் பரிசளிக்கலாம். கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் இதைச் செய்யலாம்.
• உள்ளாட்சிகள், கடைக்காரர்கள், பள்ளிகள், கல்லூரிகள் இதில் இணைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அஞ்சல் நிலையங்களிலும் கொடிகள் கிடைக்கத்தொடங்கும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












