சோனியா, ராகுல் கைது நடந்தால் ப.சிதம்பரம் அடுத்த காங்கிரஸ் தலைவரா? தீவிரமாகும் விவாதம்

அமலாக்கத்துறை இயக்குநரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அழைப்பு விடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் தர்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள்.
    • எழுதியவர், பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக இந்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகனும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள்.

இந்த இரு தலைவர்களிடமும் பல மணி நேர விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன. அப்படியொரு நிலை வந்தால் யார் அந்த கட்சியின் அடுத்த தலைவர் என்ற விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களை மிரட்டும் வகையிலும், ஜோடிக்கப்பட்ட வழக்கில் இரு தலைவர்களையும் இணைத்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத்துறையை ஒரு கருவியாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பயன்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார்.

50 மணி நேர விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக 54 மணி நேரத்துக்கும் மேலாக ராகுல் காந்தியிடமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

எப்போதெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்களோ அப்போதெல்லாம் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாக்ததுக்கு உள்ளேயும் வெளியேயும் தர்னா, கண்டன பேரணி உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை விசாரணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிராக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மகளிர் போலீஸாரால் குண்டுக்கட்டாக தூக்கப்படும் கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி மற்றும் காங்கிரஸார்.

இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் உறுதிப்படுத்திய 24 மணி நேரத்தில் டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள பகதூர் ஷா ஜாஃபர் மார்கில் உள்ள நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில் உள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன் பிறகு இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.

காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் வகையிலும் அவமானப்படுத்தும் வகையிலும் மத்திய அமலாக்கத்துறையை இந்திய அரசு பயன்படுத்துவதாக எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இத்தகைய சூழலில்தான் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் கைது செய்யும் வாய்ப்புகளை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருவதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.

இதை ஊகிக்கும் காங்கிரஸ் மேலிடம் அத்தகைய நிலை வந்தால், அடுத்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து இப்போதே அதன் நெருங்கிய வட்டாரத்தில் ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸில் சோனியா காந்தி குடும்பத்துடன் ஆரம்ப காலம் முதல் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம். 2019ஆம் ஆண்டில் அவர் தமது மகன் தொடர்புடைய அமலாக்கத்துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் 106 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து விட்டு பிணையில் வெளியே இருக்கிறார்.

முன்னதாக, இதே வழக்கில் சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரமும் 2018, பிப்ரவரியில் கைதாகி அதே ஆண்டு மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ப.சிதம்பரத்தை தலைவராக்க ஆலோசனை

காங்கிரஸ் சிதம்பரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்திய அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டு போலீஸ் வாகனத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் ப. சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள்.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ப. சிதம்பரம், தன் மீதான அமலாக்கத்துறையின் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என்று கூறிய வேளை, இதுநாள்வரை அந்த வழக்கு தொடர்பாக வெளியே விரிவாக பேசுவதை தவிர்த்து வருகிறார். மேலும், சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதெல்லாம் கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களுக்கு அலுவல்பூர்வமாக விளக்கவும் எதிர்வினையாற்றவும் ப. சிதம்பரத்தையே காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுலும் யங் இந்தியா பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதானால், இடைக்கால ஏற்பாடாக கட்சியை வழிநடத்தும் பொறுப்பை சட்ட நிபுணத்துவம் பெற்ற சிதம்பரத்திடமே ஒப்படைக்கும் சாத்தியத்தை காங்கிரஸ் மேலிடம் ஆராய்ந்து வருவதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் கடந்த இரு தினங்களாக இதே தகவல்கள் அதன் தொண்டர்கள் மற்றும் சில நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

கட்சியின் மேல்மட்டத்தில் நடத்தப்படும் இந்த ஆலோசனை குறித்து உங்களுடன் பேசப்பட்டதா என்று ப. சிதம்பரத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது, பதில் அளிக்கவோ கருத்து கூறவோ அவர் மறுத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பியும் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவருமாக கருதப்படும் மாணிக்கம் தாகூரிடம் இதே கேள்வியை முன்வைத்தோம்.

"அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சட்டப்படி சோனியாவும் ராகுலும் எதிர்கொண்டு வருகின்றனர். இருவருமே அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இது ஒரு அரசியல் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை அனைவரும் அறிவர். முடிந்தால் எங்களுடைய தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்து பார்க்கட்டும். அப்படியொரு நடவடிக்கை பாய்ந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என எங்களுக்குத் தெரியும்," என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

"அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்து ஊடகங்களுக்கு சில தகவல்கள் கசிய விடப்படுகின்றன. யங் இந்தியா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனையில் முறைகேடு செய்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டிய தேவை சோனியா காந்தி குடும்பத்துக்குக் கிடையாது. இந்த நாட்டுக்காக அந்த குடும்பத்தினர் அர்ப்பணித்த சொத்துக்கள் ஏராளம். அவர்கள் செய்த தியாகங்கள் விலை மதிப்பற்றவை. அரசியல் ரீதியாக பழிவாங்க முற்படும் மோதி அரசு, அமலாக்கத்துறையை ஏவி விட்டு பயமுறுத்தப் பார்க்கிறது. இதை எல்லாம் கண்டு அஞ்சுபவர்கள் நாங்களல்ல," என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை தரப்பு பதில் என்ன?

இந்திய அமலாக்கத்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேஷனல் ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கத்துறை ஆகஸ்ட் 3ஆம் தேதி சோதனைக்காக வந்தபோது, அங்கிருந்து வெளியேறிச் செல்லும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சல்

இதேவேளை, நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான தங்களுடைய சோதனைகளுக்கு யங் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் ஒத்துழைப்பு தராததால் அந்நிறுவன கதவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையில் உள்ள பெயர் குறிப்பிடாத உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு தங்களுடைய அதிகாரிகள் குழு சென்றபோது, அங்கு சோதனை நடத்த ஒத்துழைக்குமாறு காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பவன் குமார் பன்சாலை கேட்டுக் கொண்டோம். அதற்கு முன்பாக முறைப்படி மின்னஞ்சல் அனுப்பினோம். முதலாவது முறை, சோதனைக்கு வருமாறும் இரண்டாவது முறை, நினைவூட்டல் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டது. ஆனால், நான்காவது மாடியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கு சோதனையிடச் சென்றபோது, அதிகாரிகள் குழுவுடன் செல்லாமல் மல்லிகார்ஜுன கார்கேவும் பன்சாலும் அந்த வளாகத்தை விட்டு வெளியேறி விட்டனர். அந்த அலுவலகத்துக்குள் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சந்தேகித்தோம். அதன் பேரிலேயே அலுவலக முன்பக்க கண்ணாடி கதவு மீது சீல் வைக்கும் நோட்டீஸை ஒட்டியுள்ளோம். ஒட்டுமொத்த கட்டடத்துக்கும் சீல் வைக்கவில்லை. அங்கு வேறு சில அலுவலகங்கள் வாடகை அடிப்படையில் இயங்குவதை அறிவோம்," என்று அதிகாரிகள் கூறினர்.

காங்கிரஸ் அமலாக்கத்துறை சோதனை

பட மூலாதாரம், Getty Images

"இந்த விவகாரத்தில் தங்களுடைய சோதனை நடக்கும்போது அங்கு யங் இந்தியா நிறுவனம் சார்பில் யாரையாவது ஒருவரை முன்மொழிந்தால் அவரது முன்னிலையில் சோதனை மகஜரை தயாரித்து எந்தெந்த ஆவணங்களை பறிமுதல் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வாய்ப்பாக இருக்கும். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் நிர்வாகிகள் செயல்பட்டதால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்," என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறை நோட்டீஸில், "அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அனுமதி இல்லாமல் இந்த வளாகத்தை திறக்கக் கூடாது. இது உத்தரவு," என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், சோதனை நடவடிக்கைகளுக்கு ஒருவேளை காங்கிரஸ் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்தால், சோனியா மற்றும் ராகுலை கைது செய்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

காமராஜுக்கு பிறகு 'முதல்' வாய்ப்பு

காமராஜ் காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இத்தகைய சூழலில் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதானே என்று பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவரிடம் கேட்டோம்.

"கட்சித் தலைமை மாற்றத்துக்கான தேவை குறித்து தீர்மானிக்க வேண்டியது காங்கிரஸ் காரிய கமிட்டிதான். ஒருவேளை கைது நடவடிக்கை பாய்ந்தால், உடனடியாக சில சட்ட நடைமுறைகளை கையாள தயாராக இருக்கிறோம். அதன் பிறகே தலைமையில் மாற்றம் கொண்டு வரும் ஆலோசனைகள் நடக்கும். இந்த விஷயங்கள் சோனியா, ராகுல் காந்தி மட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளன. சிதம்பரம்வசம் தலைமையை ஒப்படைப்பது நல்ல தேர்வாக இருந்தாலும், அதை முறைப்படி விவாதித்தே தீர்மானிப்போம். இது வெளியே விவாதிக்கப்பட வேண்டிய விஷயமல்ல," என்று தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. காமராஜ் 1964 முதல் 1965 வரையிலும் பிறகு 1966 முதல் 1967வரையிலும் இருந்தார். அவருக்குப் பிறகு எஸ். நிஜலிங்கப்பா, ஜகஜீவன் ராம், சங்கர் தயாள் சர்மா, தேவகாந்த பருவா அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்தனர்.

1978 முதல் 1983வரை இந்திரா காந்தி தலைவராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி ஆறு ஆண்டுகள் தலைவராக இருந்தார். பின்னர் 1992 முதல் 1994 வரை பி.வி. நரசிம்ம ராவும், 1996 முதல் 1998வரை சீதாராம் கேசரியும் காங்கிரஸ் தலைவராக இருந்தனர்.

இவர்களுக்குப் பிறகு 1998 முதல் 2017வரையில் சோனியா காங்கிரஸ் தலைவராக இருந்தார். 2017 முதல் 2019வரை ராகுல் காந்தி கட்சித் தலைவராக இருந்த பிறகு தமது பதவியை ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து மீண்டும் 2019இல் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில் காமராஜுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவராக வரவில்லை.

சோனியா, ராகுலின் கைது நடவடிக்கை ஒருவேளை நடந்து காங்கிரஸில் தலைமை பொறுப்பு ப.சிதம்பரத்துக்கு வருமானால், அவரே காமராஜுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் வாய்ப்பைப் பெறும் முதல் தமிழராக அறியப்படுவார். அவரது தலைமை தென் மாநிலங்களில் வலுவிழந்து வருவதாக கூறப்படும் காங்கிரஸுக்கு வலு சேர்க்கும் என்பதை கட்சித் தலைமை அறிந்துள்ளது என்கின்றன காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள்.

யங் இந்தியா வழக்கு பின்னணி

காங்கிரஸ் அமலாக்கத்துறை சோதனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாடாளுமன்ற வளாகம் அருகே தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை தடுத்து வைக்க அழைத்துச் செல்லும் போலீஸார்

முன்னதாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதன் அழைப்பாணையின்படி தனித்தனியே ஜூன் மற்றும் ஜூலை மாதம் வெவ்வேறு வாரங்களில் ஆஜரான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் உதவி இயக்குநர் நிலையில் உள்ள இரண்டு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.

யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் என்ற அடிப்படையில் அந்த இருவரையும் விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்திருந்தது. நேஷனல் ஹெரால்டு நாளிதழின் வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் வருமானத்துக்கு பொருந்தாத ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அடையும் நோக்கில் ரூ. 50 லட்சத்துக்கு யங் இந்தியா வாங்கிய விவகாரத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

2008ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு ஏ.ஜே.எல். நிறுவனம் 90 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது.

காங்கிரஸ் அமலாக்கத்துறை சோதனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி விட்டு வரும் சோனியா காந்தி. உடன் அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி (ஜூலை மாதம் 27ஆம் தேதி)

2010ஆம் ஆண்டில், சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்திற்கு காங்கிரஸ் இந்த கடனை வழங்கியது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை இருவரும் கொண்டிருந்தனர்.

மீதமுள்ள 24% பங்குகள், காங்கிரஸ் தலைவர்களான மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், பத்திரிகையாளர் சுமன் துபே, தொழிலதிபர் சாம் பிட்ரோடா ஆகியோர் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெயர்களும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன.

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் "தீங்கிழைக்கும்" நோக்கில், கோடிக்கணக்கிலான சொத்துக்களை "கைப்பற்ற" சூழ்ச்சி செய்ததாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஏ.ஜே.எல். மற்றும் டெல்லி, லக்னெள, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள அதன் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீது யங் இந்தியா நிறுவனம் முழு கட்டுப்பாட்டையும் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் என்ன சொல்கிறது?

காங்கிரஸ் அமலாக்கத்துறை சோதனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கும் ப. சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

"பணம் இல்லாமல் பண மோசடி செய்ததாக கூறப்படும் விசித்திரமான வழக்கு" என இந்த வழக்கை விவரித்துள்ள காங்கிரஸ், இது பாஜகவின் "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்று குற்றம்சாட்டியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பின் அதிக ஆண்டுகாலத்திற்கு ஆட்சி செய்த காங்கிரஸ், இவ்வழக்கை "பயப்படாமல் எதிர்த்துப் போராடும்" என்று அதன் தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தை கடந்த வியாழக்கிழமை மாநிலங்களவையில் பதிவு செய்த மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், என்னை விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது என்று கூறினார். இது முழுக்க, முழுக்க கட்சியினரை மிரட்டும் போக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மல்லிகார்ஜுன கார்கே விசாரணைக்கு அழைக்கப்பட்ட தகவலை காங்கிரஸ் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் தமது ட்விட்டர் பக்க்ததில் உறுதிப்படுத்தினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான ஏ.ஜே.எல். நிதி நெருக்கடிகளில் சிக்கியபோதும், அதன் வரலாற்று பாரம்பரியம் மீது நம்பிக்கை வைத்திருந்ததால், காங்கிரஸ் அதனை கைவிடாமல் இருந்ததாக அக்கட்சி கூறியுள்ளது. பல்வேறு சமயங்களில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு 90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

2010ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல். நிறுவனம் கடனில் இருந்து விடுபட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகளை ஒதுக்கியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

யங் இந்தியா நிறுவனம் "லாப நோக்கமற்றது" என தெரிவித்துள்ள காங்கிரஸ், அதன் பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு எந்த ஈவுத்தொகையும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

"நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் உரிமையாளர், அச்சு நிறுவனம், வெளியீட்டாளராக ஏ.ஜே.எல் நிறுவனம் தொடர்ந்து இருக்கிறது. அதன் சொத்துக்களில் எவ்வித மாற்றமோ பரிமாற்றமோ இல்லை" என்பது காங்கிரஸின் வாதம்.

நேஷனல் ஹெரால்டை குறிவைப்பதன் மூலம் பாஜக "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களையும் சுதந்திர போராட்டத்திற்கான அவர்களின் பங்கையும் அவமரியாதை செய்கிறது" என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: