ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாதா?

ஐ.டி.ஆர் எனப்படும் வருமான வரிக் கணக்கு ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இதுகுறித்து பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழலாம். அந்த வகையில் ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாதா? அப்படி செய்தால் என்ன அபராதம்? போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் பட்டய கணக்காளர் கே.ஜலபதி.

ஒர் ஆண்டின் ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டின் மார்ச் மாதம் வரை நிதியாண்டு (Financial year) கணக்கிடப்படுகிறது. நிதியாண்டு முடிந்த பிறகு அவை கணக்கு ஆண்டு (Accounting year) என்று அழைக்கப்படுகின்றன.

ஒரு கணக்கு ஆண்டின் வருமானம் தொடர்பான கணக்கை தாக்கல் செய்வது தான் ஐ.டி.ஆர் (வருமான வரிக் கணக்கு) எனப்படுகிறது. வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் எத்தனை மக்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ஐ.டி.ஆர் பயன்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமாக உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

முந்தைய நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை அந்த ஆண்டின் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பேரிடர் காரணமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நடப்பாண்டில் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அதே சமயம் ஜூலை 31-ம் தேதி மட்டும் இதுநாள் வரையில் இல்லாத அளவு அதிகபட்சமாக 72.42 லட்சம் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பட்டயக் கணக்காளர் கே.ஜலபதி ஐ.டி.ஆர் தொடர்பாக அளித்த பதில்கள்

ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாதா?

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என்றாலும் அதன் பிறகும் அபராதம் செலுத்தி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும். அபராதத்துடன் டிசம்பர் 31-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். அதன் பிறகு தாக்கல் செய்வதற்கான சாத்தியமில்லை.

அபராதம் எவ்வளவு?

காலக்கெடுவிற்குப் பிறகு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கையில் 2.5 லட்சம் வரையில் அபராத தொகை இல்லை. 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ரூ.1000 அபராதமும் ரூ.5 லட்சத்திற்கும் மேல் தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.

ஏன் ஜூலை 31 இறுதி நாளாக உள்ளது?

நீண்ட காலமாகவே ஜூலை 31-ம் தேதி ஐ.டி.ஆர் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளாக உள்ளது. மார்ச் 31-ம் தேதி நிதியாண்டு முடிந்து நான்கு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இதுவே போதுமானது.

முந்தைய நிதியாண்டிற்கான ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய முடியுமா?

முன்பு இரண்டு, மூன்று வருடங்களுக்கு சேர்த்து ஐ.டி.ஆர் கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்கிற நடைமுறை இருந்தது. ஆனால் அவை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது ஒர் நிதியாண்டிற்கு மட்டும் தான் ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய முடியும் என்கிற நிலை உள்ளது.

ஜூலை 31-ம் தேதிக்குள் ஐ.டி.ஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தொழில் செய்வோருக்கு முக்கியமானது. நடப்பாண்டில் தொழிலில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் அதை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்திருந்தால் தான் அடுத்த நிதியாண்டின் லாபத்தில் சரி செய்ய முடியும். அதனால் தொழில் செய்பவர்கள் ஜூலை 31-க்குள் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

ஐ.டி.ஆர் சுயமாகவே தாக்கல் செய்ய முடியுமா?

முன்பு இருந்ததைவிட ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வருமானம், வேலைவாய்ப்பு முறைக்கு ஏற்றவாறு தனித்தனி படிவங்கள் எளிமையாகவே இருக்கின்றன. அதனால் சுயமாகவே ஐ.டி.ஆர் தாக்கல் செய்யலாம். ஆனால் சிறு சிறு பிழைகள் ஏற்பட்டால் திருத்துவது கடினமாகிவிடும். அதனால் முறையாக ஐ.டி.ஆர் தாக்கல் செய்பவர்களிடம் காலக்கெடுவிற்கு முன்னதாகவே கொடுத்து தாக்கல் செய்துவிடுவது சிறந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: