You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரத்தத்தில் கடிதம் எழுதி நீதி கேட்ட 2 உத்தரப்பிரதேச சிறுமிகள் 6 ஆண்டுகள் கழித்து வெற்றி
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
உயிருடன் எரிக்கப்பட்ட தன் தாய்க்கு நீதி கேட்டு, ரத்தத்தில் கடிதம் எழுதிய மகள்களின் கோரிக்கைக்கு, ஆறு ஆண்டுகள் கழித்து நீதி கிடைத்திருக்கிறது. ஆம். அவர்களது தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் நடந்தது என்ன?
ஒரு ஆண்குழந்தையை பெற்றுத்தரவில்லை என்பதற்காக அம்மாவை அடித்து துன்புறுத்துகிறார் என்று மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் தெரிவிக்க,
"இல்லவே இல்லை, அவள் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்தார்" என்று கணவன் தெரிவித்தார்.
ஆனால், இளைய மகள் அளித்த வாக்குமூலத்தால் (சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி) குற்றம் உறுதி செய்யப்பட்டு, தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தின் வடக்குப்பகுதியான புலந்த்ஷார் நகரில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மீது கடந்த புதன்கிழமை (ஜூலை 27) தீர்ப்பு வெளியிடப்பட்டது. அந்தத்தீர்ப்பின்படி, "ஆண்குழந்தை பெற்றுத்தராத காரணத்தால் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக" அவருக்கு தண்டனை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆண் குழந்தைக்கான எதிர்பார்ப்பு என்பது இந்தியாவின் சில நம்பிக்கைகளில் இருந்து தொடங்குகிறது. குறிப்பாக, ஆண்குழந்தைதான் வம்சத்தின் வாரிசு என்றும் பெற்றோரை கடைசி வரை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்புள்ளவர்கள் என்றும் பின்பற்றப்படும் நம்பிக்கை அது.
அத்துடன், பெண் குழந்தைக்கு வரதட்சணை செய்ய வேண்டும் என்பதோடு அவர்கள் புகுந்த வீட்டுக்காக பிறந்த வீட்டை விட்டுச்செல்வார்கள் என்ற எண்ணமும் உண்டு. இவற்றில் அடித்தளத்தில்தான் ஆண்குழந்தைக்கான எதிர்பார்ப்பு வேரூன்றியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, "பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றதற்காக தங்கள் தாய் எப்படி தொடர்ந்து துன்புறுத்தப்பட்டார் என்பது குறித்தும் அத்தைகைய சூழலில் தாங்கள் எப்படி வளர்ந்தோம் என்பது குறித்தும் சகோதரிகள் இருவரும் நீதிமன்றத்தில் விவரித்தனர். அதுமட்டுமன்றி, சட்டவிரோதமாக குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்டு 6 முறை, வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துகொள்ளவைக்கப்பட்டிருக்கிறார் அனு (இறந்த தாய்) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி காலை இவர்களது வாழ்வில் அந்த துயர சம்பவம் நடந்ததாக இருவரும் தெரிவிக்கின்றனர். அன்று காலை இவர்களது தந்தை, தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
அதிகாலை 6.30 மணிக்கு எங்கள் அம்மாவின் அலறல் கேட்டுத்தான் எழுந்தோம். ஆனால், எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. எங்கள் அறை வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது. அவர் எரிவதை எங்கள் கண்ணால் கண்டோம்" சகோதரிகள் அளித்த நீதிமன்ற வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீசுக்கும் அவசர ஊர்திக்கும் அழைத்தும் பயனில்லாததால், தங்கள் மாமாவுக்கும் பாட்டிக்கும் தகவல் அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள், விரைந்து வந்து, சிறுமிகளின் தாய் அனுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், 80 % தீக்காயங்களுடன் போராடிய அவர், அடுத்த சில தினங்களில் மருத்துவமனையில் காலமானார் என்று அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்போது, இந்த வழக்கு யாருக்கும் அப்போது தெரியவில்லை.
முதல்வருக்கு ரத்தத்தால் கடிதம்
அப்போது வெறும் 15 மற்றும் 11 வயது சிறுமிகளாக இருந்த சகோதரிகள் இருவரும் அப்போதைய மாநில முதல்வர் அகிலேஷுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதினர். "தங்கள் தாய் கொல்லப்பட்ட வழக்கை தற்கொலை என்று காவல்துறை மாற்றியதாக' அந்த ரத்த கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தனர்.
உடனடியாக, அந்த வழக்கை விசாரித்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மூத்த அதிகாரிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரிக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
"அன்றிலிருந்து, நீதி கிடைப்பதற்கு 6 ஆண்டுகள், ஒரு மாதம் 13 நாட்கள் ஆகியுள்ளது" என்கிறார் சகோதரிகள் தரப்பு வழக்குரைஞர் சஞ்சய் ஷர்மா.
தந்தைக்கு எதிராக மகள்கள் வழக்கு நடத்தி வெல்வது என்பது அரிதானதுதான். அதுவும் 6 ஆண்டுகளாக, ஒரு வாய்தா கூட தவறாமல், தொடர்ந்து 100 முறைக்கும் மேல் நீதிமன்றத்துக்கு வந்து இந்த பெண் குழந்தைகள் வென்றிருக்கிறார்கள் என்கிறார் சஞ்சய் ஷர்மா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்