You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீசை வைத்த கேரளப் பெண் ஷைஜா: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? முறுக்கிவிட்டு பெருமைப்படுகிறாரா?
- எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி நியூஸ், கொச்சி.
கேரளத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு முறுக்கு மீசை முளைத்திருக்கிறது. சிலர் இதைப் பார்த்து வியக்கிறார்கள். சிலர் கேலி செய்கிறார்கள். ஷைஜாவுக்கு எப்படி இப்படி ஆனது? இந்த மீசை தனது அழகைக் கெடுப்பதாக அவர் கவலைப் படுகிறாரா? முறுக்கிவிட்டு பெருமைப்படுகிறாரா?
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது பெயர் ஷைஜா (35 வயது). அவரது முறுக்கு மீசையை சிலர் கேலி செய்வார்கள். சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஆனால், இந்தக் கருத்துகளைப் பற்றியெல்லாம் தாம் அலட்டிக் கொள்வதில்லை என்கிறார் ஷைஜா.
தமது வாட்சாப் ஸ்டேட்டசில் மீசையோடு இருக்கும் தமது படத்தை வைத்து, அதில் தனது மீசையை மிகவும் நேசிப்பதாக குறிப்பு எழுதியுள்ளார் இவர்.
"நீங்கள் ஏன் மீசை வைத்துள்ளீர்கள்" என்று பலரும் கேட்பார்கள். "எனக்குப் பிடிச்சிருக்கு" என்பதுதான் எப்போதும் என் பதிலாக இருக்கும்.
இவருக்கு எப்படி இப்படி மீசை வந்தது?
பல பெண்களுக்கு வருவதைப் போல இவருக்கும் மூக்குக் கீழே லேசான பூனை முடிதான் ஆரம்பத்தில் வந்தது. ஷைஜா அடிக்கடி தனது புருவ முடியை திரெட்டிங் செய்து ஒழுங்குபடுத்திக்கொள்வார். ஆனால், ஒருபோதும் தமது மேலுதட்டுக்கு மேலே உள்ள பூனைமுடியை நீக்கிக்கொள்ளவேண்டும் என்று தாம் நினைத்ததில்லை என்கிறார். ஆனால், அந்தப் பூனை முடி 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அடர்த்தியான மீசையாக வளரத் தொடங்கியது. ஷைஜா கவலைப்படவில்லை. அதற்குப் பதில் அவருக்கு உற்சாகமாகிவிட்டது. அப்படியே மீசையாகவே வைத்துக்கொள்வோம் என்று அவர் முடிவெடுத்துவிட்டார்.
"இப்போது இந்த மீசையில்லாமல் வாழ்வதுபற்றி என்னால் யோசிக்கவே முடியவில்லை. கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில்கூட என்னுடைய முகத்தை மறைக்கிறது என்பதற்காக முகக் கவசம் அணிவதை வெறுத்தேன்," என்கிறார் அவர்.
பலரும் அந்த மீசையை நீக்குவதற்கு முயற்சியும் செய்யும்படி ஷைஜாவுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
"மீசை இருப்பதாலோ வேறு ஒன்றாலோ என் அழகு பாதிப்பதாக நான் கருதவில்லை" என்கிறார் அவர்.
பெண்களுக்கு முகத்தில் முடி இருப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் அதை நீக்குவதற்கு செலவு செய்தாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறார்கள். முடியை நீக்குவதற்கான கிரீம்கள், மெழுகுகள், ஸ்ட்ரிப், ரேசர், எபிலேட்டர் போன்றவற்றின் வணிகம், பல்லாயிரம் கோடி புழங்கும் தொழில் ஆகும்.
ஆனால், இந்த வழக்கமான சிந்தனைக்கு மாற்றாக, பல பெண்கள் முகத்தில் இருக்கும் முடி குறித்து அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்று கருதுகிறார்கள். சிலர் இதில் பெருமையும் கொள்கிறார்கள்.
உடல் குறித்த நேர்மறை பிரசாரம் செய்துவரும் செயற்பாட்டாளரான ஹர்னாம் கௌர் என்ற பெண்ணுக்கு முழுமையான தாடி மீசை இருப்பது 2016ல் செய்தியானது. மிக இளம் வயதில் இப்படி தாடி மீசை வளர்த்தவராக அவர் அறியப்பட்டார்.
கேலிப் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில், முகத்தில் உள்ள முடியை அப்படியே ஏற்றுக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அவர் பல பேட்டிகளில் வலியுறுத்தியுள்ளார்.
"எனக்குப் பிடித்தபடி நான் வாழ்கிறேன். ஒருவேளை எனக்கு இரண்டு வாழ்நாள் இருந்தால், ஒன்றை மற்றவர் விருப்பம் போல வாழலாம்," என்கிறார் ஷைஜா.
உடல் உபாதைகளோடு பல ஆண்டுகளாகப் போராடியதன் மூலம் அவருக்கு இந்த மனவலிமை வாய்த்துள்ளது. பத்தாண்டு காலத்தில் அவர் 6 அறுவைசிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார். மார்பகத்தில் இருந்த கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை, சினைப்பையில் உள்ள நீர்க் கட்டிகளை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை... இப்படி பல அறுவை சிகிச்சைகள்.
"ஒவ்வொரு முறையும் அறுவை சிகிச்சை முடித்து மீண்டு வந்த பிறகு, இனி வாழ்க்கையில் அறுவை சிகிச்சை அரங்கத்துக்கு போகவே கூடாது என்று நினைப்பேன்," என்கிறார் ஷைஜா.
தமிழ்நாட்டில் கண்டுணர்ந்த சுதந்திரம்
6 மணிக்கு மேல் பெண்கள் வீட்டைவிட்டே வெளியில் வராத மிகப் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஷைஜா, தாம் சிறுவயதில் மிகுந்த கூச்ச சுபாவமுள்ள பெண் என்கிறார்.
இந்தியாவிலேயே மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும், பல இடங்களில் ஆணாதிக்க போக்குகள் நிலவுகின்றன. பெண்கள் தனியாக, பயணிக்கவும் வாழவும் கூடாது என்ற மனப்போக்கு அங்கும் சில இடங்களில் உள்ளது.
திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு புது வகையான சுதந்திரத்தை அனுபவித்ததாக அவர் கூறினார்.
"என் கணவர் வேலைக்கு சென்று தாமதமாக வருவார். மாலை நேரம் வீட்டுக்கு வெளியே உட்காருவேன். இரவில் கடைக்கு தனியாக சென்று வருவேன். யாரும் என் மீசை பற்றி கண்டுகொள்வது கிடையாது. நானே சில வேலைகளை செய்வேன். இதெல்லாம் எனது நம்பிக்கையை வளர்த்தது" என்கிறார ஷைஜா. தற்போது பதின் பருவத்தில் இருக்கும் தனது மகளுக்கும் இந்த நம்பிக்கையை ஊட்டுவதாக அவர் கூறுகிறார்.
ஷைஜாவின் குடும்பத்தாரும், நண்பர்களும் மீசை வைத்துள்ள தமக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார் அவர். இந்த மீசை தமது தாய்க்கு மிக அழகாக இருப்பதாக அவர் மகள் கூறுவாராம்.
ஆனால், தெருவில் எல்லா விதமான கேலிகளையும் தான் எதிர்கொண்டிருப்பதாக கூறுகிறார் ஷைஜா. உள்ளூர் ஊடகங்களில் பலமுறை இவர் குறித்த செய்தி இடம் பெற்றுவிட்டது. ஒரு உள்ளூர் ஊடகம் அவர் பற்றிய செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தபோது பல கேலிசெய்யும் கருத்துகள் வெளியானதாக அவர் குறிப்பிடுகிறார்.
புருவ முடியை திரெட்டிங் செய்து நீக்கும்போது ஏன் பிளேடு எடுத்து மீசையை மழித்துவிடக்கூடாது என்று ஒருவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பினார்.
"ஆனால், எதை வைத்துக்கொள்வது, எதை மழித்துவிடுவது என்பது என் விருப்பம் இல்லையா?" என்கிறார் அவர்.
கேலி செய்யும் பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கில் ஷைஜாவின் நண்பர்கள் கோபமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஆனால், அந்தக் கேலியெல்லாம் தம்மை பாதிப்பதில்லை என்று கூறும் ஷைஜா சில நேரங்களில் அவற்றைப் பார்த்து தாமும் சிரிப்பதுண்டு என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்