You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தந்தையர் தினம்: "அப்பாதான் எனக்குத் தோழி" - ஒரு தந்தை, மகளின் பாசக் கதை
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மனைவி படுக்கையில் பல ஆண்டுகளாக முடங்கிருக்கிறார். மற்றொரு புறம் பதின்ம வயது மகள் கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டிய சூழல். ஓட்டுநர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த 55 வயதான இளங்கோவன், தனது மனைவியின் உடல் நலத்தைப் பேணுவதிலும், மகளின் எதிர் காலத்தைக் கவனிப்பதிலும் தனி ஒரு ஆளாக வாழ்க்கையை எதிர்கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் மனைவி இறந்துவிட, மகளுக்கு தாயுமாகவும் இருக்க வேண்டிய நிலைமை இளங்கோவனுக்கு ஏற்பட்டது. எதிர்காலம் இருண்டு போயிருந்தது. அந்தக் கடினமான தருணத்தை கடந்து தனது மகளுக்கு பேரன்பும், ஆதரவும் அளித்து வளர்த்திருக்கிறார் இளங்கோவன்.
"பெண்ணுக்கு அவளது அப்பா பாதுகாப்பாளராகவும், அம்மா ஒரு தோழியாகவும் இருக்கிறார். ஆனால் இவ்விரண்டையும் எனது அப்பா செய்தார்." என்கிறார் இளங்கோவனின் மகள் கிருத்திகா.
புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவனின் மனைவி பானு. தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சிறு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரது 47 வயதில் காலமானார்.
இவர்களுடைய மகள் கிருத்திகாவுக்கு பதின்ம வயது நெருங்கியபோதே பானு நோய்வாய்ப்பட்டார். பதின்ம வயது முடியும் நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.
"பெண் குழந்தையை தந்தை தனியாக வளர்க்க வேண்டும் என்பது மிகவும் கடினமானது. ஒரு பெண் பிள்ளை 18 வயதில் இருக்கும் போதுதான் அம்மாவின் தேவைகள் அதிகமாக இருக்கும். அப்போதுதான் அம்மாவிடம் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால் அந்த சமயத்தில் என் அம்மா என்னுடன் இல்லை. அதுபோன்ற நேரத்தில் என் அப்பா அவருடைய கஷ்டங்கள் அனைத்தையும் அவருக்குள் வைத்துக்கொண்டு, என்னை அழகாகப் பார்த்துக்கொண்டார். அது அவரால் மட்டுமே முடியும்," என்கிறார் மகள் கிருத்திகா.
பொறியியல் முதலாம் ஆண்டு முடித்தபோது கிருத்திகாவின் தாய் பானு இறந்துவிட்டார். அதன் பிறகு ஓட்டுநர் வேலையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே கிருத்திகாவை படிக்க வைத்திருக்கிறார் இளங்கோவன்.
"நான் எனது மனைவி இருவருமே வேலைக்குச் சென்றுதான் குடும்பத்தை நிர்வகிக்கும் சூழலில்தான் எங்களது வாழ்க்கை இருந்தது. அவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றியபோது, திடீரென ஒரு நாள் அவரால் நடக்க முடியாமல் போனது. இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது அவருக்குச் சிறு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அவரது உடல் நிலையைச் சரி செய்ய அலோபதி தொடங்கி இயற்கை மருத்துவம் வரை அனைத்தையும் முயன்றோம். ஆனால் இந்நோயைக் குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அப்போது முதல் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக எனது மனைவி நடக்க முடியாமல் முடங்கி இருந்தார்," என்று தனது வாழ்க்கையின் கடினமான தருணங்களை நினைவுகூர்கிறார் இளங்கோவன்.
மனைவி நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் சம்பாதிக்கும் ரூபாய் 15 ஆயிரம் சம்பாதிப்பதில், ரூபாய் 12 ஆயிரம் வரை மாதம் மருத்துவச் செலவிற்குப் போய்விடும் என்று கூறும் இளங்கோவன், தனது மகளைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறுகிறார்.
"எனது மனைவி உடல்நலம் முடியாமல் முடங்கிருந்த காரணத்தினால் அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால், நான் ஓட்டுநராக பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து எனது மனைவி மற்றும் மகள் இருவரையும் பார்த்துக்கொள்ளப் பொருளாதார சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டேன். அதனால் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓட்டுநர் வேலைக்கு அழைக்கும்போது சென்று வருவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சமாளித்து வந்தேன்."
பொறியியல் படித்து முடித்த கிருத்திகா தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு நெடுங் காலமானது, அவ்வாறு அம்மாவின் தேவையை அறியும் போது அவருடைய வெற்றிடம் எனக்கு உணர தொடங்கியதாக கூறுகிறார் மகள் கிருத்திகா.
"எனது அம்மா இல்லாத சூழ்நிலையில், அம்மாவின் கடமைகளை எனது அப்பாவே செய்ய வேண்டியிருந்தது. அதையும் முழுமையாகச் செய்தார். பொதுவாக ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் சிறிய வயதில் அம்மா தான் பிடிக்கும், அப்பா தான் பிடிக்கும் என்றிருப்பார்கள்.
ஆனால், அம்மா, அப்பா இருவருமே ஒரு பிள்ளையை வளர்ப்பதில் அவர்களுக்கான வேலையைச் செய்கின்றனர் என்பதை வளர்ந்த பிறகு தான் உணர்கிறோம். ஒரு பெண்ணிற்கு அவளது அப்பா எவ்வளவு பாதுகாப்பாளராக , அதே போன்று அம்மா ஒரு தோழியாக இருக்கிறார். ஆனால் இவ்விரண்டையும் எனது அப்பா செய்தார். அம்மா இல்லை என நான் உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக என்னை அவ்வளவு கவனிப்பாகப் பார்த்துக் கொண்டார்."
பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டபோது அதை தாங்கி குடும்பத்தை வழிநடத்திய இளங்கோவன் இப்போது முழுநேரமாக எங்கும் வேலைக்குச் செல்லவில்லை. மாறாக பொருளாதாரச் சுமை முழுவதையுமே மகளே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
"எனக்கும் அப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் எனது கஷ்டங்களை நேரம் கொடுத்துக் கேட்பார். சில விஷங்களை அப்பாவிடம் வெளிப்படையாகப் பேச முடியாது. அதை அம்மாவிடம் மட்டுமே சொல்ல முடியும். அந்த மாதிரியான சில தருணங்களிலும் அவர் எப்போதும் என்னுடன் இருந்திருக்கிறார். குறிப்பாக சில நேரங்களில் எனக்கு உடல் நிலை முடியாமல் இருந்த காலத்தில் மருத்துவமனை செல்லவேண்டும் என்றால் பொதுவாக அந்த வயதில் அம்மாவுடன் தான் செல்வார்கள். ஆனால் அந்த மதிரியான பல்வேறு சூழ்நிலையில் எனது அப்பா தான் கூட வருவார்." என்கிறார் கிருத்திகா.
"இந்த மதிரியான தருணங்களில் அம்மாவின் வெற்றிடம் தெரியும். ஆனால் அதற்கிடையில் என்னை அழகாக எனது அப்பா பார்த்துக்கொண்டார். எனது கவலை, கஷ்டம் அனைத்திலும் உடனிருக்கும் அப்பா, இதுவரையிலும் ஒரு நாளும் அவரது கஷ்டத்தை என்னிடம் காட்டியதும், சொல்லியதும் இல்லை. என்னை ஒரு தேவதை போல்தான் என் அப்பா வைத்திருந்தார்" எனக் கூறுகிறார் கிருத்திகா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்