இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்?

    • எழுதியவர், சுபம் கிஷோர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இவர்கள் "சொந்த காரணங்களுக்காக" குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்க குடியுரிமைக்காக இந்திய குடியுரிமையை விட்டுள்ளனர். 23,533 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 21,597 பேர் கனடாவின் குடியுரிமையும் பெற்றுள்ளனர்.

சீனாவில் வசிக்கும் 300 பேர் அந்த நாட்டின் குடியுரிமையையும், 41 பேர் பாகிஸ்தான் குடியுரிமையையும் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் குடியுரிமையை கைவிட்டவர்களின் எண்ணிக்கை 85,256 ஆகவும், 2019 ஆம் ஆண்டில், 144,017 ஆகவும் உள்ளது.

2015 மற்றும் 2020 க்கு இடையில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குடியுரிமையை கைவிட்டனர். 2020 ஆம் ஆண்டில் இந்தப்போக்கில் குறைவு ஏற்பட்டது. ஆனால் இதற்குப் பின்னால் உள்ள காரணம் கொரோனா என்று நம்பப்படுகிறது.

"இந்த முறை எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பணிகள் முடங்கியதால் குடியுரிமை பெற முடியாத சிலருக்கு இந்த ஆண்டு குடியுரிமை கிடைத்துள்ளது,"என்று வெளிநாட்டு விவகார நிபுணர் ஹர்ஷ் பந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தியர்கள் ஏன் குடியுரிமையை கைவிடுகிறார்கள்? நாட்டிற்கு வெளியே வாழும் குடியுரிமையை கைவிட்டவர்கள், கைவிட விரும்புபவர்கள் மற்றும் நிபுணர்களிடம் இந்தப் போக்கு குறித்து பிபிசி பேசியது.

வெளிநாட்டில் வாழ்வதால் பல நன்மைகள்

தனது குடியுரிமை கைவிடப்படுவது அல்லது 'ப்ரெயின் ட்ரெயினை' கட்டுப்படுத்த இந்தியா விரும்பினால், அது பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவில் வசிக்கும் பாவ்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார். புதிய வாய்ப்புகள், மேம்பட்ட வசதிகள் மற்றும் இரட்டை குடியுரிமை போன்றவற்றை இந்தியா கருத்தில் கொள்வது அவசியம் என்கிறார் அவர்.

பாவனா கடந்த 2003-ம் ஆண்டு வேலை தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருக்கு அங்கு பிடித்துப்போனதால் அங்கேயே குடியேற முடிவு செய்தார். அவரது மகள் அங்குதான் பிறந்தார். பின்னர் அவர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார்.

"இங்கு வாழ்க்கை மிகவும் எளிதாக உள்ளது. வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை விட சிறந்த வாய்ப்புகள் இங்கு கிடைக்கும்."என்று பாவ்னா குறிப்பிட்டார்.

"மேலும், பணிச்சூழல் மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் செய்யும் வேலையின் அளவிற்கு ஏற்ப உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும்."

பணியிட சூழல்

கனடாவில் வசிக்கும் 25 வயதான அபினவ் ஆனந்த், இதே கருத்தைக் கொண்டுள்ளார். அங்கு படிப்பை முடித்த அவர் கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வருகிறார். அவர் இன்னும் இந்திய பாஸ்போர்ட்டைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் இந்திய குடியுரிமையை கைவிடத்தயாராக உள்ளார்.

நல்ல பணிச்சூழல் இதற்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார். எனவே அவர் இந்தியாவுக்குத் திரும்பிவர விரும்பவில்லை.

"வேலை நேரம் இங்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் விதிகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப உங்களுக்கு ஊதியம் கிடைக்கும். இந்தியாவில் விதிகள் அவ்வளவு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. அதனால் நான் வேலைக்காக அங்கு செல்ல விரும்பவில்லை. வேறு ஒரு நாட்டில் இருந்துகொண்டு வேலை செய்யவேண்டும் என்றால் அந்த நாட்டின் குடியுரிமையைப்பெறுவதில் என்ன தவறு," என்று அபினவ் வினவுகிறார்.

நல்ல வேலை, அதிக பணம் மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி பெரும்பாலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

"பெரிய நாடுகளில் சிறந்த வசதிகள் உள்ளன. ஆனால் பலர் சிறிய நாடுகளுக்கும் செல்கின்றனர். பல சிறிய நாடுகள் வர்த்தகத்திற்காக சிறந்த வசதிகளை வழங்குகின்றன. பலரின் குடும்பங்களும் அத்தகைய நாடுகளில் குடியேறியுள்ளன,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உணர்ச்சிபூர்வ நெருக்கம், நன்மைகள் குறைவு

மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஷ்ரா கடந்த 22 ஆண்டுகளாக இஸ்ரேலில் வசித்து வருகிறார். இந்தியாவுடன் உணர்ச்சிபூர்வ நெருக்கம் இருப்பதால் இந்தியாவின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்கிறார் அவர். அவரது மனைவி இஸ்ரேலைச் சேர்ந்தவர். அவரது குழந்தைகள் அங்கு பிறந்து அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளனர்.

ஆனால் இந்திய பாஸ்போர்ட் காரணமாக தனக்கு நிறைய பிரச்னைகள் இருப்பதாக கூறுகிறார். பெரும்பாலான நாடுகளுக்கு செல்ல தான் விசா பெற வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.

ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்டும் அவர், "எனக்கு லண்டன் செல்ல விசா வேண்டும். ஆனால் உங்களிடம் இஸ்ரேலிய பாஸ்போர்ட் இருந்தால், விசா இல்லாமல் நீங்கள் அங்கு செல்லலாம். எனவே விசாவிற்கு விண்ணப்பிக்க இங்கே அலுவலகம் இல்லை" என்று கூறுகிறார்." விசா முத்திரையைப் பெற இஸ்தான்புல்லுக்குச் செல்லவேண்டும்.அங்கு செல்வதற்கான செலவும் அதிகமாக இருக்கும். இது போன்ற விஷயங்கள் சிரமத்தை அளிக்கின்றன," என்கிறார் ஹரேந்திர மிஷ்ரா.

"நான் இந்தியாவுடன் உணர்ச்சிபூர்வமாக மிகவும் இணைந்திருக்கிறேன். ஆகவே நான் குடியுரிமையை விட்டுவிட விரும்பவில்லை. ஆனால் அதைத் தவிர என்னை பொறுத்தவரை எந்த நன்மையும் இல்லை." என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய பாஸ்போர்ட்டுடன் இப்போது விசா இல்லாமல் 60 நாடுகளுக்குச்செல்லலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. பாஸ்போர்ட் தரவரிசையில், 199 நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது 87வது இடத்தில் உள்ளது.

இரட்டை குடியுரிமை தேவையா?

இரட்டை குடியுரிமை வழங்குவதை இந்தியா கொண்டுவந்தால், குடியுரிமையை கைவிடுபவர்கள் என்ணிக்கை குறையும் என்கிறார் ஹரேந்திர மிஷ்ரா.

தான் வேறு நாட்டின் குடியுரிமை பெற முயற்சிப்பதாகவும், ஆனால் வேறு வழி இல்லாமல்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அபினவ் ஆனந்த், கூறுகிறார்.

"நான் பிறந்த நாட்டின் குடியுரிமை எனக்கு எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. எனவே குடியுரிமையை கைவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இரட்டை குடியுரிமை பெறமுடியாததால், இந்திய குடியுரிமையை கைவிட்ட பலரை எனக்குத் தெரியும்,"என்கிறார் அவர்.

பாவனா தற்போது தனது இந்திய குடியுரிமையை கைவிட்டுவிட்டார். அவரிடம் OCI கார்டு உள்ளது . ஆனால் இரட்டை குடியுரிமை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிறார் அவர்.

OIC கார்டு என்றால் என்ன?

இந்தியா இரட்டைக் குடியுரிமை வழங்குவது இல்லை. அதாவது நீங்கள் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெறவிரும்பினால் இந்திய குடியுரிமையை கைவிட வேண்டும்.

OCI கார்டு என்பது வெளிநாட்டில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான சிறப்பு வசதியின் பெயர். OCI என்பது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா( இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்).

உலகின் பல நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வசதி உள்ளது. ஆனால் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால், அவர் தனது இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன் அல்லது கனடா போன்ற நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள இத்தகையவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. ஆனால் இந்தியாவுடனான அவர்களின் தொடர்பு இப்போதும் உள்ளது.

இந்திய குடியுரிமையை கைவிட்ட பிறகு இவர்கள் இந்தியாவுக்கு வர விசா பெற வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, 2003-ல் இந்திய அரசு PIO அட்டையை வழங்கியது.

PIO என்றால், இந்திய வம்சாவளி நபர். இந்த அட்டை பாஸ்போர்ட் போல பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இதற்குப் பிறகு 2006 இல் ஹைதராபாத்தில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் ஓசிஐ கார்டு வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது

நீண்ட காலமாக PIO மற்றும் OCI கார்டுகள் இரண்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆனால் 2015 இல் PIO வழங்குவதை ரத்து செய்து, OCI கார்டை தொடர்வதாக அரசு அறிவித்தது.

OCI இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் எல்லா வகையான பொருளாதார பரிவர்த்தனைகளை செய்வதற்கும் அனுமதிக்கிறது, மேலும் OCI வைத்திருப்பவர் எப்போது வேண்டுமானாலும் விசா இல்லாமல் இந்தியாவிற்கு வரலாம். OCI அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.

OCI கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய குடிமக்களைப் போலவே எல்லா உரிமைகளும் உள்ளன என்றும் ஆனால் அவர்களால் நான்கு விஷயங்களைச் செய்ய முடியாது என்றும் இந்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் கூறுகிறது. அந்த நான்கு விஷயங்கள்

  • தேர்தலில் போட்டியிட முடியாது
  • வாக்களிக்க முடியாது
  • அரசு வேலை அல்லது அரசியலமைப்பு பதவியை வகிக்க முடியாது
  • விவசாய நிலத்தை வாங்க முடியாது.

வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை அதிகரிக்குமா?

தற்போதைய பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, வரும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறையலாம் என்கிறார் பந்த்.

மற்ற நாடுகளின் நிலையை விட இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. இப்போது இங்கு அதிக வாய்ப்புகள் வரும். அதனால் மக்கள் இந்தியாவில் வாழ விரும்புவார்கள். ஆனால், அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் அங்கு குடியுரிமை பெறுவதில் இருந்து பின்வாங்கமாட்டார்கள்," என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: